பதிவு செய்த நாள்
14 மார்2016
01:09

மும்பை : இந்தியாவின் சில்லரை விற்பனை சந்தையில், கடந்த ஓராண்டாக, பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. அவை, ஓசையின்றி உள்நாட்டு பிராண்டுகளை ஓரங்கட்டி வருகின்றன.
ஆடைகள், காலணிகள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட நவநாகரிக பொருட்கள் சந்தையில், இந்த துரத்தல் வேகமாக நடைபெறுவது, ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவின் வர்த்தக தலைநகரமாக விளங்கும் மும்பையில், ‘மெகா மால்’ எனப்படும் வணிக வளாகங்களில், சர்வதேச பிராண்டுகள், உள்ளூர் பிராண்டுகளை விரட்டி விட்டு வேகமாக கால் பதித்து வருகின்றன.உதாரணமாக, எச் அண்டு எம்., என, சுருக்கமாக அழைக்கப்படும், உலகப் புகழ் பெற்ற, ஹென்னஸ் அண்டு மாரிட்ஸ் நிறுவனம், போனிக்ஸ் மில்லில், பிக் பஜார் செயல்பட்டு வந்த இடத்தை வாங்கியுள்ளது. அதுபோல, ஏற்கனவே பலாடியம் மாலில், செயல்பட்டு வரும், ஸாரா பிராண்ட், கோர்ட்யார்டில், ஆதித்ய பிர்லா குழுமத்தின் பாண்டலுான் கடையை குறி வைத்து உள்ளது. உள்நாட்டு பிராண்டுகளை விரட்டும் சர்வதேச நிறுவனங்களுக்கு இடையிலும் சூடான போட்டி நடைபெற்று வருகிறது.
கனடாவின் காலணி பிராண்டான, ஆல்டோ, போனிக்ஸ் மில்சில் செயல்பட்டு வந்தது. இந்த இடத்தை, புகழ் பெற்ற கேப் நிறுவனம் வளைத்துப் போட்டுக் கொண்டது. அதுபோல, பலாடியம் மாலில், சத்யபால் பிராண்டை, அர்மானி துரத்தி விட்டது. ரெனால்ட்ஸ் செயல்பட்டு வந்த இடத்தில், தற்போது, காலணி நிறுவனமான, அடிடாஸ் உள்ளது. ஆர் சிட்டி மாலில், குளோபஸ் பிராண்டை, ஹேம்லி விரட்டி விட்டது. நெக்டிஸ் அண்டு மோர் மற்றும் பாம்பே ஹை பிராண்டுகளை, நைக் நிறுவனம் ஓரங்கட்டி விட்டது. அதுபோல, லைப் ஸ்டைல், வெஸ்ட் எண்ட், பாண்டலுான் பிராண்டுகள் விற்பனையாகி வந்த இடங்களில், சர்வதேச பிராண்டுகளான, பார் எவர் 21, மேங்கோ, ஸாரா ஆகியவை உள்ளன.
டில்லியில், செலக்ட் சிட்டி வாக் மாலில், கண்சிமிட்டிக் கொண்டிருந்த பாண்டலுான், புட் பஜார் விளம்பரப் பலகைகள், தற்போது, எச் அண்டு எம் ஆக மாறியுள்ளன. ஆம்பியன்ஸ் மாலில் இயங்கி வந்த, பெனட்டன், ஜம்போ எலக்ட்ரானிக்ஸ் பிராண்டுகள் மறைந்து, கேப் மற்றும் எச் அண்டு எம் ஆக காட்சியளிக்கின்றன.இதன் காரணமாக, தற்போது, மெகா மால்களில், காலியாக உள்ள, 20 சதவீத இடங்களும் நிரம்ப வாய்ப்புள்ளதாக, ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட்ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், மெகா மால்களில், உள்நாட்டு நிறுவனங்களுக்கான குத்தகையை, 20 ஆண்டுகளில் இருந்து, 10 ஆண்டுகளாக குறைத்துள்ளன. இது, ஒரு சில பிரிவுகளில், 5 ஆண்டுகளாகவும் குறைந்துள்ளது. சர்வதேச பிராண்டுகளின் வருகையால், ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் அணுகுமுறை மாறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|