பதிவு செய்த நாள்
16 மார்2016
07:39

புதுடில்லி : வலைதளம் வாயிலாக விற்கப்படும் பொருட்களுக்கு, உத்தர கண்ட், பீஹார், அசாம் ஆகிய மாநிலங்கள், புதிதாக நுழைவு வரி விதித்துள்ளன. இதைத் தொடர்ந்து, மேலும் பல மாநிலங்கள், நுழைவு வரி விதிக்க உள்ளதாக அறிவித்து உள்ளன. இதனால், கொதித்தெழுந்துள்ள வலைதள நிறுவனங்கள் ஒன்று திரண்டு, மாநில அரசுகளுக்கு எதிராக, போர்க்கொடி துாக்கியுள்ளன.
‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட வலைதள நிறுவனங்கள், பல்வேறு பொருட்களை, வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே ‘டெலிவரி’ செய்கின்றன. இந்த வகையில், ஒரு மாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருள், பல மாநிலங்களில் உள்ளோருக்கு நேரடியாக விற்பனை செய்யப்படுகிறது. இத்தகைய விற்பனைக்கு, உத்தரகண்ட், பீஹார், அசாம் ஆகிய மாநிலங்கள் நுழைவு வரி விதித்துள்ளன. இதையடுத்து, குஜராத், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 12க்கும் அதிகமான மாநிலங்கள், நுழைவு வரி விதிக்க திட்டமிட்டு உள்ளன.
வழக்கமாக, ஒரு மாநிலத்தில் தயாரிக்கப்படும் பொருள், வேறு மாநிலத்தில் உள்ள முகவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர்கள் மூலம், மொத்தமாக வோ, சில்லரையிலோ விற்பனை செய்யப்படும். ஆனால், வலைதளம் மூலம் பொருட்கள் நேரடியாக, நுகர்வோரை சென்றடைவதால், வரி வருவாய் இழப்பு ஏற்படுவதாக, மாநிலங்கள் கூறுகின்றன. முகவர்களோ, ‘வலைதளம் மூலம் குறைந்த விலையில் பொருட்கள் நேரடியாக விற்கப்படுவதால், எங்கள் வியாபாரம் பாதிக்கப்படுகிறது’ என, புலம்புகின்றனர். இதை கருத்தில் கொண்டு, வலைதள நிறுவனங்களின் பொருட்களை நுகர்வோரிடம் சேர்க்கும், ‘கூரியர்’ நிறுவனங்களிடம், மாநில அரசுகள் நுழைவு வரி விதிக்கத் துவங்கியுள்ளன.
இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள வலைதள நிறுவனங்கள், ‘ஏற்கனவே வரி செலுத்திய பொருட்களுக்கு, மேலும் வரி விதிப்பது, இரட்டை வரி விதிப்பாகும்; மாநில அரசுகளின் சட்ட விரோதமான, பாரபட்ச வரி விதிப்பால், பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது’ என்கின்றன. இதைத் தொடர்ந்து, அனைத்து வலைதள நிறுவனங்களும் ஒன்றிணைந்து, மாநில அரசுகளுக்கு எதிராக, வழக்கு தொடர முடிவு செய்துள்ளன. ஏற்கனவே, ‘பிளிப்கார்ட்’ நிறுவனம், 10 சதவீத நுழைவு வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து, உத்தரகண்ட் அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளது.
கை மாறும் வியாபாரம்:மத்திய பிரதேசத்தில், கடைகளில் நடைபெறும் விற்பனை யில், 20 – 30 சதவீதம், வலைதள நிறுவனங்களின் கைக்கு மாறியுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதனால், வலைதள பொருட்கள் விற்பனைக்கு, 6 சதவீதம் வரி விதிக்க, அம்மாநில அரசு முடிவு செய்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|