பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:14

மும்பை : வீடுகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் முதலீடுகள் மீதான வருவாயை விட, கிடங்குகள் அதிக வருவாய் தருவதால், அத்துறையில், ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவு, முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ‘பிராப் டைகர்’ தெரிவித்துள்ளது.
இந்தியாவில், மின்னணு வணிகத்தின் வளர்ச்சியால், சரக்குகளை பாதுகாப்பாக வைக்கும் கிடங்குகளுக்கு, தேவை அதிகரித்துள்ளது. ‘அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல்’ உள்ளிட்ட வலைதள நிறுவனங்கள், வாடிக்கையாளர்களுக்கு விரைவாக பொருட்களை அனுப்புவதற்காக, நாடு முழுவதும், ஆங்காங்கே கிடங்குகளை அமைத்து வருகின்றன.
அதிகரிக்கும் தேவை :அதுபோல, ஒரே இடத்தில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், பிக்பஜார், ரிலையன்ஸ் பிரெஷ் போன்ற நிறுவனங்களுக்கும், கிடங்குகள் அத்தியாவசியமாக உள்ளன. இதனால், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, கிடங்குகளுக்கான தேவை, மிக வேகமாக அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப, கிடங்கு துறையின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசின் கொள்கைகளும், சீர்திருத்த திட்டங்களும் உள்ளன. ரியல் எஸ்டேட் சீர்திருத்த சட்டம், ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட் ஆகியவையும், வரும் நிதியாண்டில் அமலாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியும், கிடங்கு துறையில் முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்கும். அதனால், கிடங்குகளுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த, 2015ல், டில்லி, மும்பை, புனே, சென்னை, கோல்கட்டா, பெங்களூரு, ஐதராபாத், ஆமதாபாத் ஆகிய நகரங்களில், 9.70 கோடி சதுர அடி பரப்பில், முதல் மற்றும் இரண்டாம் நிலை கிடங்குகள் அறிமுகமாயின; இது, இந்தாண்டு, 11.60 கோடி சதுர அடி ஆக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அதிக லாபம் :வரும், 2020ல், கிடங்குகளுக்கான தேவை, 150 கோடி சதுர அடி ஆக இருக்கும் என, ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான, ஜோன்ஸ் லங் லாசலி மதிப்பிட்டுள்ளது. ரியல் எஸ்டேட் துறையில், இதர பிரிவுகளை விட, கிடங்குகளில் முதலீடு செய்வது அதிக லாபகரமாக உள்ளதால், அதில், ஏராளமான தனியார் பங்கு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன. இத்தகைய முதலீட்டு வாய்ப்பை, தற்போது, வெளிநாடுகளைச் சேர்ந்த, பங்கு முதலீட்டு நிறுவனங்கள் தான் அதிகம் பயன்படுத்தி வருகின்றன.
‘‘உள்நாட்டு பங்கு முதலீட்டு நிறுவனங்கள், குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்கள் ஆகிவற்றில் அதிகம் கவனம் செலுத்தி வருகின்றன,’’ என, பிராப் டைகர் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி அங்குர் தவான் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|