பதிவு செய்த நாள்
19 ஆக2016
06:06

புதுடில்லி : ‘இந்தியாவில், உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனையில் ஈடுபட, வால்மார்ட் உள்ளிட்ட அன்னிய நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன’ என, உணவு பதப்படுத்துதல் துறை செயலர் அவினாஷ் ஸ்ரீவத்சவா தெரிவித்து உள்ளார்.
அவர், டில்லியில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:இந்தியாவில், ‘சிங்கிள் பிராண்டு’ எனப்படும், ஒரே வணிக முத்திரை உள்ள பொருட்களின் சில்லரை விற்பனையில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு, அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில், அன்னிய நேரடி முதலீட்டு விதிகளை, மத்திய அரசு மேலும் தளர்த்தியுள்ளது. அதன்படி, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனையில், அன்னிய நிறுவனங்கள், அரசு அனுமதியுடன், 100 சதவீதம் முதலீடு மேற்கொள்ளலாம். இது, வலைதளம் வாயிலான மின்னணு வணிகத்திற்கும் பொருந்தும்.
பன்னாட்டு நிறுவனங்கள்அன்னிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை தளர்த்தியது பற்றி, பல்வேறு நாடுகளின் துாதர்கள், தொழில் கூட்டமைப்பினர் ஆகியோரை சந்தித்து, விரிவாக விளக்கினோம். அவர்கள் மூலம், இந்தியாவில் வர்த்தக வாய்ப்புகள் அதிகரித்திருப்பது குறித்த தகவல் மேலும் பரவும் என, எதிர்பார்க்கிறோம். இந்நிலையில், இந்தியாவில் உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனையில் முதலீடு செய்ய, அமெரிக்காவின் வால்மார்ட், பிரேசிலைச் சேர்ந்த ஒரு உணவு நிறுவனம் மற்றும் சில பன்னாட்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எனினும், அந்நிறுவனங்கள் இதுவரை, அதிகாரபூர்வமாக, உணவுப் பொருட்களின் சில்லரை விற்பனையில் களமிறங்க, அரசிடம் விண்ணப்பிக்கவில்லை. அன்னிய நிறுவனங்கள், உணவுப் பொருட்கள் துறையில் அதிகளவில் முதலீடு செய்ய துவங்கினால், உள்நாட்டில், உணவுப் பொருட்கள் வீணாவது குறையும்; வேலைவாய்ப்பும் பெருகும்.
குவியும் முதலீடு‘மேக் இன் இந்தியா’ எனப்படும், இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் மூலம், உணவு பதப்படுத்துதல் துறையில், 2014 ஏப்., முதல், 2016 மார்ச் வரையிலான இரு நிதியாண்டுகளில், 104 கோடி டாலர், அன்னிய நேரடி முதலீடு குவிந்துள்ளது. இதே காலத்தில், 9,000 கோடி ரூபாய் செலவில், 32 லட்சம் டன் உணவுப் பொருட்களை பதப்படுத்தக் கூடிய, குளிர்பதனக் கிடங்குகள் அமைக்கப்பட்டன. இதனால், உணவுப் பொருட்கள் வீணாவது, 10 சதவீதம் குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியாவில், ஆண்டுக்கு, 92 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள உணவுப் பொருட்கள் வீணாகின்றன. இது, உணவுப் பொருட்கள் துறையில் குவியும், அன்னிய நேரடி முதலீடுகளால், குறிப்பிடத்தக்க அளவிற்கு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|