பதிவு செய்த நாள்
10 அக்2016
13:39

பொள்ளாச்சி: 'நெகமம் சேலைகள்' இன்றல்ல நேற்றல்ல, 100 ஆண்டுகால பாரம்பரியம் கொண்டவை. ஆர்டர் கூடியிருப்பதால், வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியும் அதிகரித்திருப்பதாக கூறுகின்றனர், உற்பத்தியாளர்கள்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள நெகமத்தில் கடந்த, 100 ஆண்டுகளுக்குமுன், 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறி நெசவுத்தொழில் அபரிமிதமாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் நுால் சேலைகளுக்கு ஏக கிராக்கி. ஆறு கெஜம், 8 கெஜம் சேலைகளை பெண்கள் அதிகளவில் விரும்பி உடுத்தினர். அதன்பின், படிப்படியாக இச்சேலை ரகங்களில் நாகரீக வாழ்க்கைக்கு ஏற்ப ஆங்காங்கே பூ வேலைப்பாடுகளுடன் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.இன்றைய சூழலில், இச்சேலை ரகங்கள் கொஞ்சம், கொஞ்சமாக மக்களால் ஒதுக்கப்பட்டு வருகின்றன. எனினும், குறிப்பிட்ட சதவீதத்தினர் இந்த நுால் சேலைகளையே இன்னமும் விரும்பி உடுத்தி வருகின்றனர்.
பெரும்பாலும் நெசவாளர்கள், இன்றைய நெகமம் காட்டன் சேலைகளை இரண்டு நாட்களில் நெசவு செய்து விடுகின்றனர். நுால்களுக்கு நிறமேற்றுதல் உள்ளிட்ட சில தொழில்நுட்பங்கள் நெகமம் சுற்றுப்பகுதியிலேயே மேற்கொள்ளப்படுகிறது.நாகரீக காட்டன் ரக சேலைகள் நெகமத்தில் தயாரித்தாலும், 'கோவை காட்டன் ரகம்' என்றே அழைக்கப்படுகிறது. எனினும், நெகமம் சேலை தயாரிப்பாளர்கள் இவற்றை 'நெகமம் காட்டன்' சேலைகள் என்றே விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
கோவை, மதுரை, சென்னை, செங்கல்பட்டு பகுதிகளில் உள்ள பெரிய ஜவுளிக்கடைகள் மட்டுமன்றி, சிங்கப்பூர், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் நெகமம் காட்டன் சேலைகளுக்கு கிராக்கி ஏற்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.இப்பகுதியில் மட்டும், 9 மொத்த காட்டன் சேலை ரக தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. ஒரு சில நிறுவனங்கள் நெகமத்திலேயே விற்பனையும் செய்கின்றன.
நெகமம் காட்டன் சேலை உற்பத்தி நிறுவன இயக்குனர் ரவி கூறியதாவது:பாரம்பரிய காட்டன் சேலை ரகங்களுடன் சுடிதாரும் உற்பத்தி செய்யப்பட்டு, உள்நாட்டிலும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இந்த ரகங்கள் ஒவ்வொன்றும், 1,000 - 3,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போதைய விற்பனையில், எம்போஸ், ஜக்காட் ரகங்களுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கடந்த ஆண்டுகளை விட நடப்பு ஆண்டில் தயாரிப்பும், விற்பனையும் அதிகம் தான், என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|