பதிவு செய்த நாள்
18 டிச2016
02:45

புதுடில்லி;உணவு பொருட்கள் அடைக்கப்பட்ட அட்டையில் அச்சிடப்படும், உண்மைக்கு மாறான விபரங்களால், நுகர்வோர் ஏமாறுவதை தடுக்க, விரைவில் கடுமையான விதிமுறைகள் அமலுக்கு வர உள்ளன.
இது குறித்து, டில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற, உணவு பாதுகாப்பு மற்றும் தரம் ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி, பவன் குமார் அகர்வால் கூறியதாவது:உணவு பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், உணவு பொருட்களின் விபரங்கள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, அதிகபட்ச விற்பனை விலை உள்ளிட்ட விபரங்களை, அட்டையில் அச்சிட வேண்டும். அதுபோல, உணவு பொருட்களின், ‘பேக்கிங்’ தொடர்பான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.
சமையல் எண்ணெய்
இந்நிலையில், நுகர்வோரிடம், உணவு பொருட்கள் குறித்து அதிக விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அவர்கள், தவறான விபரங்களை நம்பி ஏமாறுவதை தடுக்கவும், தற்போதைய விதிமுறைகளை மேலும் கடுமையாக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து, நவீனமான, மேம்படுத்தப்பட்ட, உணவு பொருட்கள் பேக்கேஜிங் விதிமுறைகள் விரைவில் அமலுக்கு வர உள்ளன. சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் மற்றும் டின்களில், எண்ணெயில் உள்ள இரு வகை கொழுப்பின் விபரங்களை அச்சிட வேண்டும் என, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கெடு, பிப்ரவரியுடன் முடிவடைகிறது.
மார்ச் முதல், அனைத்து சமையல் எண்ணெய் பாக்கெட்டுகளிலும், கொழுப்பு வகைகளின் அளவு குறித்த விபரங்கள், கண்டிப்பாக இடம் பெற வேண்டும். நுகர்வோரை தவறாக வழி நடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட குற்றச்சாட்டின் பேரில், ஆறு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில நிறுவனங்கள், உணவு பொருட்களின் விற்பனைக்காக, தவறான விபரங்களை வெளியிடு கின்றன. அத்தகைய உணவு பொருட்களை ஆய்வு செய்து, அந்த விபரங்கள் உண்மையானது தானா என்பதை கண்டுபிடிப்பதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தெருவோர உணவகம்
உணவு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், தாங்கள் தெரிவிக்கும் விபரங்களுக்கு, தகுந்த ஆதாரங்களை அளிக்க வேண்டும். இதற்கு, புதிய விதிமுறை வழி வகுக்கும்.சமீபத்தில், அதிக சக்தி தரும் பானங்களுக்கான தர நிர்ணய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தெருவோர உணவகங்களில், செய்தித்தாள்களில் உணவுகள் பொட்டலம் கட்டி கொடுக்கப்படுகின்றன. செய்தித்தாளில் உள்ள அச்சு மை, உணவுடன் கலப்பதால், அவற்றை உண்போருக்கு உடல் நலக் கோளாறு ஏற்படுகிறது. எனவே, இத்தகைய போக்கை தடுக்க, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்து மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|