பதிவு செய்த நாள்
16 ஜன2017
03:01
இந்த ஆண்டுக்கான நிதி செயல்பாடுகளில் கிரெடிட் அறிக்கையை பெறுவதையும் நீங்கள் குறித்து வைத்துக்கொள்ளலாம். ஆம், இந்த ஆண்டு முதல் ஆண்டுக்கு ஒரு முறை கிரெடிட் அறிக்கையை அனைவரும் இலவசமாக பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான உத்தரவை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிசர்வ் வங்கி பிறப்பித்தது. இதன் படி, கிரெடிட் தகவல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் கோரும் போது அவர்களுடைய முழு கிரெடிட் அறிக்கையை ஒரு முறை இலவசமாக அளிக்க வேண்டும். ஜனவரி முதல் டிசம்பர் மாதத்திற்குள் ஒரு முறை இவ்வாறு கடன் தகவல் அறிக்கையை கோரிப்பெறலாம்.
கடன் தகுதி அறிய கிரெடிட் அறிக்கையில் ஒருவரது கடன் வரலாறு தொடர்பான தகவல்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும். ஒருவர் கடனுக்கான தவணையை முறையாக செலுத்தி வந்திருக்கிறாரா? என்பது போன்ற விபரங்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். வங்கிகள் கடன் தகுதியை தீர்மானிக்கும் போது மற்ற அம்சங்களுடன் கடன் அறிக்கையையும் பரிசீலிக்கின்றன. சிபில், ஈக்விபேக்ஸ், எக்ஸ்பிரீயன் உள்ளிட்ட கடன் தகவல் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகள் இந்த அறிக்கையை பெறுகின்றன.
வாடிக்கையாளர்களும் இந்த அறிக்கையை விண்ணப்பித்து பெறலாம். ஆனால், அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். எனினும், ஆண்டுக்கு ஒரு முறை இந்த அறிக்கை கோரிக்கையின் பேரில் இலவசமாக வழங்கப்பட ரிசர்வ் வங்கி வழி செய்துள்ளது.தனி நபர்கள் இந்த அறிக்கை மூலம் தங்கள் கடன் தகுதியை அறிந்து கொள்ளலாம். பொதுவாக 300 முதல் 900 மதிப்பெண் வரை இவை அமைகின்றன. நல்ல கிரெடிட் மதிப்பெண் இருந்தால் கடன் கிடைக்கும் வாய்ப்பு அதிகம்.
எப்படி பெறுவது?புதிதாக கடன் கேட்டு விண்ணப்பிக்கும் போது வங்கிகளிடம் அளிக்கப்படும் கிரெடிட் அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்களை இலவச அறிக்கை மூலம் வாடிக்கையாளர்களும் பெற முடியும். இதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் அணுகலாம். அறிக்கையின் விசாரணை பகுதியில், எந்த வங்கிகள் எல்லாம் உங்கள் கடன் அறிக்கையை கேட்டு பெற்றுள்ளன என தகவலையும் தெரிந்து கொள்ளலாம். கடன் அறிக்கைக்கான மதிப்பீடு முறை நிறுவனங்களுக்கு இடையே மாறுபடுவது போலவே அவற்றை பெற விண்ணப்பிக்கும் முறையும் மாறுபடுகிறது. இதற்கான வழிமுறைகளை நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் குறிப்பிட வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
சிபில் வழங்கும் கடன் அறிக்கையை அதன் இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். சில நேரங்களில் மாதத்தவணை அல்லது கடன் தொடர்பான தவறான தகவல்களும் இடம்பெற்றிருக்கலாம். இவற்றை கண்டறிந்து சரி செய்வது உங்கள் கடன் வரலாற்றுக்கு நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|