பதிவு செய்த நாள்
13 பிப்2017
05:09

நமது வாழ்க்கையை மாற்றிக்கொள்வதும், மேம்படுத்திக்கொள்வதும் மிகவும் எளிதானது என்கிறார் பால் கிரெஸ்வெல். கடனில்லாத வாழ்க்கைக்கு வழிகாட்டும் வகையில் எழுதிய, ‘டோட்டலி டெப்ட் பிரி லைப்ஸ்டைல்’ புத்தகத்தின் அறிமுகத்தில், இதற்கான வழியை அவர் விவரிக்கிறார்:
வாழ்க்கையை மாற்றுவதற்கான வழி காண, ஒரு நோட்டுப் புத்தகமும், காகிதமும், பேனாவும் போதும். முதலில் காகிதத்தில் உங்கள் இலக்குகளை எல்லாம் எழுதுங்கள். உங்கள் வங்கி கணக்கில் கோடிகள் இருப்பது போன்ற உணர்வுடன் உற்சாகமாக இலக்குகளை குறித்து வையுங்கள்.இனி அந்த காகிதத்தின் மறுபக்கத்தை திருப்பி, அதில் நீங்கள் மிகவும் முக்கியமாக நினைக்கும் ஒரு இலக்கை குறிப்பிடுங்கள். அதன்கீழ், அந்த ஒற்றை இலக்கை அடைவதற்கு தேவையான வழிகள், தினமும் செய்ய வேண்டிய செயல்கள், தீர்வுகள் ஆகியவற்றை குறித்து வையுங்கள்.
உங்களிடம் உள்ள நோட்டு புத்தகத்தில், தினமும் செய்யும் செலவுகளை ஒன்றுவிடாமல் குறித்து வைக்கவும். மாத முடிவில் அவற்றை ஆய்வு செய்து, தேவையில்லாத செலவுகளை கண்டறிந்து நீக்கவும். இதை உங்களுக்கான சிறிய சம்பள உயர்வு போல கருதவும். இதில் ஒரு பகுதியை உங்கள் சுய மேம்பாட்டிற்காக செலவிடவும். உங்கள் மேம்பாட்டிற்கு நீங்கள் தான், முதலீடு செய்து கொள்ள வேண்டும்.இந்த தொகையில் இன்னொரு சிறு பகுதியை உங்கள் மாதாந்திர தவணை தொகை ஒன்றுடன் சேர்த்து செலுத்தவும். இவ்வாறு செய்வதன் மூலம் அந்த கடனை விரைவாக அடைத்து விடலாம்.
ஒரு கடன் முடிந்தவுடன் அடுத்த கடனை தேர்வு செய்து, இதேபோல் செய்யவும். ஒவ்வொரு மாதமும் செலவுகளை ஆய்வு செய்து தேவையில்லா செலவுகளை குறைத்துக்கொண்டே வரவும். ஒரு குளிர்பானத்தை குறைத்தால் கூட நீண்ட கால நோக்கில் பார்த்தால், பெரும் தொகையை மிச்சம் செய்யலாம். அடுத்ததாக, மேலும் கூடுதலாக சம்பாதிப்பதற்கான வழிகளை தேடுங்கள். அது பகுதி நேர வேலையாகவும் இருக்கலாம். வருவாய் தரக்கூடிய திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள். சிறிய அளவில் சுய தொழிலை துவக்கலாம்.
கூடுதல் வருமானத்தைக் கொண்டு உங்களுக்கான வளம் அல்லது சொத்துக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துங்கள். வருமானம் தரக்கூடிய சொத்தாக இருப்பது அவசியம்.இலக்குகளை குறித்து வைக்கும் தினத்தன்றே, அதை செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபடத் துவங்குங்கள். செயல்படத் துவங்கியதுமே இலக்குகள் மீது ஈடுபாடும், நம்பிக்கையும் உண்டாகும். செயல்படுவதை உங்களுக்கு நீங்களே, நிரூபித்துக்கொள்ளுங்கள். செயல்களை அடிக்கடி மறுபரிசீலனை செய்யுங்கள்.
செயல், நம்பிக்கை மற்றும் ஈடுபாடு ஆகிய மூன்றும், உங்கள் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். கூடுதல் வருமானத்தை தனி வங்கி கணக்கில் சேமித்து வையுங்கள்.தொடர்ந்து செய்யும் செயல்கள் ஒரு பழக்கமாகிவிடும். உங்கள் புதிய பழக்கம் வாழ்க்கைக்கு புதிய அர்த்தத்தை கொடுக்கும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|