பதிவு செய்த நாள்
27 பிப்2017
00:03

ரொக்கமில்லா பரிவர்த்தனை வசதியை மேலும் பரவலாக்கும் வகையில், ‘பாரத் கியூஆர் கோடு’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பணப் பரிவர்த்தனைக்கான பீம் செயலி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மத்திய அரசு சார்பில், தேசிய பேமென்ட் கார்ப்பரேஷன், விசா, மாஸ்டர் கார்டு ஆகிய நிறுவனங்கள் இணைந்து, ‘பாரத் கியூஆர் கோடு’ முறையை அறிமுகம் செய்துள்ளன. அமெரிக்கன் எக்ஸ்பிரசும் இணைய உள்ளது.
கியூஆர் கோடுஇயந்திரங்களால் ஸ்கேன் செய்யப்படுவதன் மூலம் உணரப்படும் இரு பரிமாண அடையாளமாக, கியூஆர் கோடு அமைகிறது. இதுவும் பார்கோடு போன்றது. ஸ்மார்ட்போன் கேமரா மூலம் ஸ்கேன் செய்யலாம். இதன் மூலம் கியூஆர் கோடில் உள்ள தகவல்களை உணர முடியும்.
என்ன சிறப்பு?வர்த்தகர்கள், நுகர்வோர் என, இரு தரப்பினருக்கும் இது எளிதானது. வர்த்தகர்கள், ஸ்வைப்பிங் இயந்திரம் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. வங்கியிடம் இருந்து தங்களுக்கான கியூஆர் கோடு அடையாளத்தை பெற்று, கடையில் இடம்பெறச் செய்தால் போதுமானது. வாடிக்கையாளர்கள் இந்த கோடை ஸ்கேன் செய்து பணம் செலுத்தலாம். வர்த்தகர் வங்கி கணக்கு போன்ற விபரங்களை உள்ளீடு செய்ய வேண்டாம்.
முக்கிய வேறுபாடு!தற்போது விசா நிறுவனம் எம்விசா கியூஆர் கோடு சேவையை வழங்குகிறது. பேடிஎம், பிரிசார்ஜ், மொபிகுவிக் போன்ற வாலெட்களும் கியூஆர் கோடு வசதியை அளிக்கிறது. ஆனால், இவை அனைத்தும் மூடப்பட்டவை. அதாவது அந்த அமைப்பில் மட்டும் தான் பயன்படுத்த முடியும். உதாரணமாக, பேடிஎம் கியூஆர் கோடு வசதியை பயன்படுத்த இரு தரப்பினருமே அந்த செயலியில் கணக்கு வைத்திருக்க வேண்டும். கியூஆர் கோடு பொதுவான முறை. விசா, மாஸ்டர் கார்டு, ருபே கார்டுகள் மூலமான பரிவர்த்தனை ஏற்கப்படும். வர்த்தகர்கள் பெறும் பணம் நேரடியாக வங்கி கணக்கில் சேர்ந்து விடும்; மாத வரம்பு கிடையாது.
எப்படி பயன்படுத்துவது?முதல் கட்டமாக, 15 வங்கிகள் இதில் இணைந்துள்ளன. இந்த வசதியை பயன்படுத்த வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில், வங்கி செயலியை தரவிறக்கம் செய்ய வேண்டும். பின், அந்த செயலியில் இருந்து வர்த்தகரின், கியூஆர் கோடை ஸ்கேன் செய்து, தொகையை குறிப்பிட்டு, ரகசிய எண்ணை டைப் செய்தால் பணம், டெபிட் கார்டில் இருந்து பெறப்பட்டு, வர்த்தகர் கணக்கில் சேர்க்கப்படும்.
மேலும் வசதிகியூஆர் கோடை இரு விதமாக பெறலாம். முதல் வகை ஸ்டேட்டிக் கோட். வர்த்தகர் ஒரு கோடை பெற்று அதை காட்சிப்படுத்தலாம். இதை ஸ்கேன் செய்து தொகையை செலுத்த வேண்டும். டைனமிக் கோடு முறையில், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் தனியே கோடை உருவாக்கி அளிக்கலாம். இதை ஸ்கேன் செய்யும் போது தொகையை உள்ளீடு செய்ய வேண்டாம். இந்த அமைப்பில், யு.பி.ஐ., மற்றும் ஆதார் எண் மூலம் செலுத்தும் வசதியும் இணைக்கப்பட உள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|