பதிவு செய்த நாள்
27 பிப்2017
00:04

ஐ.டி., துறை நிறுவனங்களின் அமைப்பான நாஸ்காம், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பை வெளியிடாமல் தள்ளி வைத்திருப்பது, இத்துறை வளர்ச்சி தொடர்பான கேள்விகளை எழுப்பியுள்ளது.
அண்மை காலமாகவே இந்திய ஐ.டி., துறை சவால்களையும், சோதனைகளையும் எதிர்கொண்டு வருகிறது. பிரெக்ஸிட் போன்ற சர்வதேச நிகழ்வுகளும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், இத்துறை அமைப்பான நாஸ்காம், அண்மையில் அடுத்த ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பை வெளியிடாமல் தள்ளி வைத்திருக்கிறது. இந்திய, ஐ.டி., நிறுவனங்களின் மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், பொருளாதார சூழல் ஆகியவற்றின் காரணமாக, நாஸ்காம் வளர்ச்சி கணிப்பு அறிக்கையை அடுத்த காலாண்டில் வெளியிடுவதாக தெரிவித்துள்ளது.
அறிக்கை தாமதம்நாஸ்காம் வளர்ச்சி கணிப்பு அறிக்கையை வெளியிடாமல் தள்ளி வைப்பது, இதுவே முதல் முறையாகும். ஐ.டி., துறை நிறுவனங்களின் நலன்களுக்காக குரல் கொடுப்பது, கொள்கை முடிவுகளை வகுக்க அழுத்தம் கொடுப்பது போன்றவற்றில் கவனம் செலுத்தி வரும் நாஸ்காம், ஆண்டுதோறும், அடுத்த நிதியாண்டுக்கான வளர்ச்சி கணிப்பை விரிவான அறிக்கையாக வெளியிட்டு, வழிகாட்டுவது வழக்கம். எனினும், 2017 – 18ம் ஆண்டுக்கான வளர்ச்சி கணிப்பு அறிக்கையை வெளியிடுவதை அடுத்த காலாண்டிற்கு தள்ளி வைத்துள்ளதாக, நாஸ்காம் தெரிவித்துள்ளது.
மும்பையில் நடைபெற்ற நாஸ்காம் மாநாட்டை ஒட்டி பேசிய போது, இந்த தகவலை தெரிவித்த நாஸ்காம் சேர்மன் சி.பி.குர்னானி, அரசியல் சூழல் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தால் ஐ.டி., துறையின் தற்போதைய நிலை காரணமாக, அடுத்த காலாண்டு வரை அறிக்கையை தள்ளி வைத்துள்ளதாக தெரிவித்தார். தற்போதைய நிலையில் புதிதாக தெரிவிக்க எதுவும் இல்லை என்றும், ஒட்டுமொத்த பொருளாதார சூழல், ரூபாயின் ஏற்ற இறக்கம், அமெரிக்காவில் புதிய அரசால் ஏற்பட்டுள்ள அரசியல் சூழலால் நிச்சயமற்றத்தன்மை இருப்பதாக, நாஸ்காம் தலைவர் சந்திரசேகர் தெரிவித்தார்.
தொழில்நுட்பத்தின் தாக்கத்தால், இதற்கு முன் இல்லாத அளவு வேகத்தில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக, குர்னானி தெரிவித்தார். இந்த சூழலில் வளர்ச்சி கணிப்பு பற்றி தீர்மானிக்க மேலும் தகவல்கள் தேவையென, அவர் கூறினார்.
வேலைவாய்ப்பு குறைவு நடப்பு நிதியாண்டை பொருத்தவரை, ஐ.டி., துறை வளர்ச்சி, 8.6 சதவீதமாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இது, 10 முதல், 12 சதவீதமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டு, பின்னர் நவம்பர் மாதம் வெளியான கணிப்பில், 8 முதல், 10 சதவீதமாக வளர்ச்சி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த கணிப்பிற்கு ஏற்ப வளர்ச்சி விகிதம் அமைந்திருந்தாலும், வேலை வாய்ப்பு வளர்ச்சி, 5 சதவீதமாகவே இருப்பது தெரிய வந்துள்ளது. வருவாய் வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்பு வளர்ச்சிக்குமான இடைவெளி தொடரும் என, எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய, ஐ.டி., துறை துவக்கத்தில் இருந்தே பல்வேறு சவால்களை சந்தித்து வந்துள்ளது என்றாலும், தற்போதைய சூழலில் பலமுனைகளில் தீவிரமான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். முதல் சவால், டிஜிட்டல் தொழில்நுட்ப போக்கு காரணமாக சர்வதேச நிறுவனங்கள் செயல்படும் விதத்தில், பெரும் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. வழக்கமாக பன்னாட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களிடம் மென்பொருள் உருவாக்கும் பணிகளை ஒப்படைக்கும். ஆனால், சில நிறுவனங்கள் இப்போது மிகவும் எளிமையான மென்பொருட்கள் மற்றும் மிகவும் முக்கியமான மென்பொருட்களை தாங்களே உருவாக்கி கொள்ளத் துவங்கியுள்ளன. இரண்டாவதாக, ஐ.டி., துறையில் வெகுவேகமாக தானியங்கிமயமாக்கல் நிகழ்ந்து வருவதால், வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளன.
அமெரிக்க சிக்கல்இதே போல மென்பொருட்களுக்கான மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், வெளிநாடுகளுக்கு பணிகளை ஒப்படைப்பது, எச்1பி விசா வழங்குவது ஆகியவற்றில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இது போன்ற சவால்கள் இந்திய, ஐ.டி., துறை நிறுவனங்களின் வளர்ச்சி வேகத்தை பாதிப்பதாக அமைந்துள்ளது. எனினும், இந்த சூழலுக்கு ஏற்ப முன்னணி ஐ.டி., நிறுவனங்கள், தங்கள் செயல்பாடுகளை மாற்றி அமைத்துக்கொள்ளும் பணியை ஏற்கனவே துவக்கியிருக்கின்றன. வரும் மாதங்களில் நிறுவனங்களின் செயல்பாடு மற்றும் அவற்றின் உத்திகளுக்கு ஏற்பவே வளர்ச்சி விகிதத்தின் போக்கு அமையும் என, கருதப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|