பதிவு செய்த நாள்
27 மார்2017
03:17

பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து, இந்திய சந்தையில் முதலீடு செய்து வருவது, சந்தைக்கு ஒரு நிலையான தன்மையை தந்து வருகிறது.
உள்நாட்டு முதலீட்டாளர்களான, பரஸ்பர நிதி நிறுவனங்கள், தொடர்ந்து பங்குகளை இந்த வாரமும் ரூ.2,589 கோடிக்கு விற்றனர். அதேசமயம், எப்.ஐ.ஐ., முதலீடு ரூ.3,714 கோடியாக இருந்தது. பங்குகளை, எப்.ஐ.ஐ., நிறுவனங்கள் அதிகம் வாங்கியும், சந்தை சென்ற வாரத்தைவிட, நிப்டியில் 0.57 சதவீதமும், சென்செக்ஸில் 0.77 சதவீதமும் குறைவாகவே முடிந்தது. தொடர்ந்து எப்.ஐ.ஐ., முதலீட்டாளர்கள், இந்திய பங்குகளை வாங்கிக் குவித்தால், இந்திய முதலீட்டாளர்களும் வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவர். இதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
வரும் வாரத்தில், உலகச் சந்தைகள், அமெரிக்காவில் நிலவும் ஒபாமாகேர் என்ற மருத்துவ காப்பு திட்டம் சார்ந்த அரசியல் நகர்வுகளை கூர்ந்து கவனிக்கும். இந்த திட்டம் அகற்றப்பட வேண்டும் என்ற, ட்ரம்ப் அரசின் நோக்கு நிறைவேறத் தவறினால், சந்தையில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் ஏராளம். சந்தையில் இவற்றின் தாக்கம் போகப் போகத்தான் தெரியும்.
கேள்விக்குறிஅமெரிக்க மக்கள் பலருக்கு, இந்த திட்டம் கொடுக்கும் மருத்துவ வசதிகளை திரும்ப பெற திட்டமிட்டே, ட்ரம்ப் மாற்றங்களை கொண்டு வருகிறார். இதில் அவர் வெற்றி பெற்றால், பல அமெரிக்கர்கள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். உலகளவில், மருந்து உற்பத்தி தொழிலும் பின்னடைவுகளை சந்திக்கும் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த சர்ச்சையில் முடிவு எப்படி ஏற்படும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
அண்மையில் வெளிவந்த, இந்திய ஏற்றுமதி சார்ந்த புள்ளிவிபரங்கள் மிகவும் உற்சாகம் ஊட்டும் வகையில் அமைந்தன. தொடர்ந்து மார்ச் மாதம் வரும் எண்கள், பொருளாதார திருப்பத்தின் வேகத்தை தெளிவுபடுத்தும். வரி வசூல் சார்ந்து வெளிவந்த புள்ளிவிபரங்கள், சற்றே மந்த நிலையை உணர்த்தினாலும், அரசு தொடர்ந்து வரி வசூலை நிலைநாட்ட தொடர்முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
ஏற்றுமதியை கூட்டுவதும், வரி வசூலை பெருக்குவதும் மோடி அரசின் பொருளாதார சீரமைப்பின் முக்கிய நகர்வுகள். இதில் அரசு வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த முயற்சிகளின் வெற்றி, நிதி பற்றாக்குறையை திட்டமிட்டபடி கட்டுப்படுத்த, அரசுக்கு அவசியம். கடந்த வார சந்தையின் முக்கிய நிகழ்வாக, டிமார்ட் நிறுவனம் வெளியிட்ட பங்கின் பட்டியலிடுதலை சொல்லலாம். முதல்நாள் அன்றே இருமடங்கு விலை உயர்ந்த இந்த பங்கு, இந்தியாவின் முக்கிய முதலீட்டாளரான ராதாகிஷன் தமானி அவர்களால் நிறுவப்பட்டது.
இந்த பங்கு வெளியீட்டின் அபார வெற்றி, சந்தையில் சிறந்த பங்குகளை வாங்க இருக்கும் அசாதாரண மோகத்தையே வெளிக்காட்டுகிறது. இதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் முக்கிய காரணம் என்றாலும், நிதி நிறுவனங்கள் கொடுக்கும் முதலீட்டு கடன்களும் முக்கிய காரணம் என்று சொல்ல வேண்டும். தொடர்ந்து பல நிறுவனங்கள் தங்கள் பங்குகளை சந்தைமயப்படுத்துவதற்கு டிமார்ட் பங்கு வெளியீடு ஒரு திருப்பு முனை என்றே சொல்ல வேண்டும்.
நம்பிக்கைஇந்த வாரம், நிதியாண்டின் இறுதி வாரம். இந்த காலத்தில், பரஸ்பர நிதிகள் தங்கள் திட்டங்களின் மதிப்பைக் கூட்டும் வகையில் முதலீடுகளை அமைப்பது வழக்கம். எப்.அண்ட்.ஓ.,வின் முடிவும் சேர்ந்து வருவதால் சந்தையில் ஏற்ற நகர்வு ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம். இறக்க ஏற்றங்கள் நிறைந்த நிதியாண்டு முடிவுக்கு வருவது முதலீட்டாளர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுக்கும் என்பது உறுதி.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|