பதிவு செய்த நாள்
01 மே2017
04:19
புதுடில்லி : இ.பி.எப்., எனப்படும், தொழிலாளர் சேம நல நிதியத்தின் உறுப்பினர்கள், மருத்துவ சிகிச்சைக்கு, மருத்துவர் சான்றிதழ் இன்றி, தங்கள், இ.பி.எப்., கணக்கில் இருந்து பணம் எடுக்கும் வசதி அமலுக்கு வந்துள்ளது.
தற்போது, இ.பி.எப்., உறுப்பினர்கள், தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்பத்தினருக்கோ, மருத்துவ சிகிச்சைக்காக முன்பணம் பெற, மருத்துவர் சான்றிதழுடன், ஏராளமான சான்றுகளையும், விண்ணப்பங்களையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. அத்துடன், இ.பி.எப்., உறுப்பினர்கள் அல்லது அவர்களின் குடும்பத்தினர், இ.எஸ்.ஐ., எனப்படும், தொழிலாளர் அரசினர் ஈட்டுறுதி திட்டத்தில் இடம் பெறவில்லை என, பணிபுரியும் நிறுவனத்திடம் சான்று பெற வேண்டும்.
அது போல, மாற்றுத்திறனாளிகள், தங்களுக்குத் தேவையான சாதனங்களை வாங்க, தொழிலாளர் சேம நல நிதியத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரி அல்லது பயிற்சி மருத்துவரிடம் சான்றிதழ் பெற வேண்டும். இது போன்ற நடைமுறைகளால், இ.பி.எப்., உறுப்பினர்களுக்கு, தேவையற்ற அலைச்சல், பணம், நேரம் வீணாவதை கருத்தில் கொண்டு, மருத்துவ சிகிச்சைக்கு முன்பணம் பெறுவதற்கு, மருத்துவர் சான்றிதழ் கோரும் சட்ட விதிமுறைகளில், திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
அது போல, மாற்றுத்திறனாளிகள், தங்களுக்கு தேவையான சாதனங்கள் வாங்குவதற்கு, மருத்துவ சான்று பெறுவதற்கான விதியிலும், மத்திய தொழிலாளர் அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அத்துடன், ஏராளமான விண்ணப்ப படிவங்களுக்கு பதிலாக, இ.பி.எப்., உறுப்பினர்கள், தங்களின் சுய சான்றுடன், ஒரே விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, முன்பணம் பெறவும் வசதி செய்யப்பட்டு உள்ளது.
எதற்கு?இ.பி.எப்., உறுப்பினர்கள், எலும்புருக்கி நோய், தொழுநோய், பக்கவாதம், புற்றுநோய், மனநிலை பாதிப்பு, இதய நோய் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற, தங்கள் கணக்கில் இருந்து, முன்பணம் பெறலாம். மருத்துவமனையில், ஒரு மாதம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தங்கி சிகிச்சை பெறுவதற்கும், அறுவை சிகிச்சை உள்ளிட்ட செலவுகளுக்கும் பணம் கோரலாம்.
எவ்வளவு?இ.பி.எப்., உறுப்பினர்கள், ஆறு மாதங்களுக்கு மிகாத, தங்களின் அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படியை, மருத்துவ சிகிச்சைக்கு, முன்பணமாக பெறலாம் அல்லது தங்களின் சொந்த பங்களிப்பையும், அதற்கான வட்டித் தொகையை பெறலாம்.
எத்தனை?இ.பி.எப்.,பில் நான்கு கோடிக்கும் அதிகமானோர் உறுப்பினராக உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|