பதிவு செய்த நாள்
05 ஜூன்2017
07:44

உங்கள் முதலீட்டு ஆளுமை என்ன என்பது உங்களுக்குத்தெரியுமா? முதலீட்டு ஆளுமையே ஒருவரது நிதி முடிவுகள் மீது தாக்கம் செலுத்துவதால், இதை அறிந்திருப்பது அவசியம். முதலீடு தொடர்பான ரிஸ்க் தன்மை, அவை தரும் பலன்கள் போன்றவை குறித்த நம்பிக்கை அடிப்படையில் முதலீடு செய்யும் தன்மை அமைகிறது. இதன் அடிப்படையில், தீவிர முதலீட்டாளர்கள், அமைதியான முதலீட்டாளர்கள், தள்ளிப்போடும் முதலீட்டாளர்கள், அறியாமை கொண்ட முதலீட்டாளர்கள் என, முதலீட்டாளர்கள் நான்கு வகையாக பிரிக்கப்படுகின்றனர்:
தீவிர முதலீட்டாளர்கள்:
* ரிஸ்க் அதிகம் என்றாலும், பலனும் அதிகம் இருக்கும் என கருதுபவர்கள். எடுத்த எடுப்பில் முதலீடு செய்பவர்கள். அதிக பலனுக்கான கனவில் மிதக்கும் சூதாடிகள்.
* மற்றவர்கள் ரிஸ்கை பார்க்கும் இடத்தில் லாபத்தை காண்பதால், பங்குகளில் அதிகம் முதலீடு செய்கின்றனர். முதலீட்டை பரவலாக்குவதில்லை.
* சில நேரங்களில் அசலுக்கு மோசம் வரலாம். எனவே யதார்த்தமான நிதி இலக்குகள் தேவை. நீண்ட கால இலக்கிற்கு பங்குகள் மற்றும் குறுகிய கால இலக்கிற்கு கடன் சார் முதலீடுகளை நாடலாம்.
அமைதியான முதலீட்டாளர்கள் :
* பாதுகாப்பையே முக்கியமாக கருதுபவர்கள். தவறு செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர்கள். அநேகமாக ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். சர்ச்சையையும், பரபரப்பையும் தவிர்ப்பவர்கள்.
* பெரும்பாலும் வைப்பு நிதி, பி.எப், காப்பீடு போன்ற கடன் சார் முதலிடுகளை நாடுபவர்கள். நிதி இலக்கிற்கு ஏற்ப முதலீடுகளின் பலனை ஆய்வு செய்வதில்லை.
* இந்த வகை முதலீட்டால், அதிகம் செல்வம் சேர்க்க முடியாது. பணவீக்கம் பாதிப்பை ஏற்படுத்தும். நிதி ஆலோசனை பெற்று தகுந்த மாற்றங்கள் செய்து கொள்ள வேண்டும்.
அறியாமை கொண்ட முதலீட்டாளர்கள் :
* நிதி விஷயத்தில் அதிக தகவல்கள் இல்லாததால், எப்போதுமே மற்றவர்கள் சொல்வதை கேட்டு முடிவெடுப்பவர்கள். தகவல்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.
* இந்த வகை முதலீட்டாளர்கள் மற்றவர்களால் எளிதாக ஏமாற்றப்படும் வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் மற்றவர்கள் வழியை பின்பற்றி முதலீடு செய்கின்றனர்.
* இவர்கள், முதலில் நிதி விழிப்புணர்வு பெற வேண்டும். தொழில்முறை நிதி ஆலோசனையை நாடலாம். மற்றவர்கள் சொல்வதை கேட்காமல், நிதி இலக்கை மனதில் கொள்ள வேண்டும்.
தள்ளிப்போடும் முதலீட்டாளர்கள்:
* சோம்பல் மிக்கவர்கள். போதிய தகவல்கள் கைவசம் இருந்தாலும் அதனடிப்படையில் முடிவு எடுக்காமல், நல்ல வாய்ப்பை தவறவிடும் பழக்கம் கொண்டவர்கள்.
* போதுமான புரிதல் மற்றும் வங்கிக்கணக்கில் அதிக பணம் இருந்தாலும், நல்ல வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதில்லை. சேமிப்பு கணக்கில் பணம் முடங்கி கிடக்கும்.
* செயல்படத் துவங்குவது தான் முதலில் செய்ய வேண்டியது. ஏதாவது ஓரிடத்தில் இருந்து துவங்குவது நல்லது. உடன் செய்வது இன்னும் நல்லது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|