பதிவு செய்த நாள்
04 ஜூலை2017
05:03

புதுடில்லி : சென்னை அருகே, எண்ணுாரில் அமைந்துள்ள காமராஜர் துறைமுகத்தை, தனியாருக்கு தாரை வார்க்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பின் திட்டத்திற்கு, கப்பல் போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட, ‘நிடி ஆயோக்’ அமைப்பின் பரிந்துரையை ஏற்று, ‘ஏர் – இந்தியா’ நிறுவனத்தை தனியாருக்கு விற்பனை செய்ய, மத்திய அமைச்சரவைக் குழு, சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இதை தொடர்ந்து, லாபகரமாக இயங்கி வரும் பொதுத் துறையைச் சேர்ந்த, ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் காமராஜர் துறைமுகம் உள்ளிட்ட சில துறைமுகங்களையும் தனியார்மயமாக்க, நிடி ஆயோக் பரிந்துரைத்து உள்ளது. இதற்கு, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தலைமையிலான, கப்பல் போக்கு வரத்து அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து, அமைச்சகத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவன பங்கு விற்பனை மூலம், 72,500 கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்து உள்ளது. இதில், ஒருசில பொதுத் துறை நிறுவனங்களின் பெரும்பான்மை பங்குகளை விற்பனை செய்து, 15 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது. இதுவரை, எஸ்.யு.யு.டி.ஐ., மூலம், எல் அண்டு டி நிறுவனத்தில் கொண்டிருந்த பங்குகளை விற்பனை செய்த வகையில், 6,800 கோடி ரூபாய் திரட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஏர் – இந்தியா, ஷிப்பிங் கார்ப்பரேஷன், காமராஜர் துறைமுகம் மற்றும் இதர துறைகளைச் சார்ந்த, சில பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளையும் விற்பனை செய்ய, நிடி ஆயோக் பரிந்துரைத்து உள்ளது. இதை ஏற்க, அமைச்சகம் மறுத்துவிட்டது. துறைமுகங்களை நவீனமயமாக்கும், ‘சாகர்மாலா’ திட்டம், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து திட்டம் ஆகியவற்றை தீவிரமாக செயல்படுத்த, மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், அதற்கு போதுமான நிதி, பட்ஜெட்டில் ஒதுக்கப்படவில்லை.
துறைமுகங்களின் பங்கு விற்பனை மூலம், இந்த திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல மத்திய அரசு விரும்புகிறது. ஆனால், துறைமுகங்களில் இருந்து பெறப்படும் லாபம் மூலம், கடலோர பகுதிகளை நவீனமயமாக்கவும், உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தவும் அமைச்சகம் விரும்புகிறது. கடந்த நிதியாண்டில், 12 பெரிய துறைமுகங்கள் மூலம், மத்திய அரசுக்கு, 5,000 கோடி ரூபாய் லாபம் கிடைத்துள்ளது. ஷிப்பிங் கார்ப்பரேஷன் நிறுவனமும், இரு ஆண்டுகளாக லாபமீட்டி வருகிறது. இத்தகைய சூழலில், அந்நிறுவனங்களை தனியார்மயமாக்குவது ஏற்புடையதல்ல என, அமைச்சகம் கருதுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பங்கு மூலதனம்:
பொதுத் துறையைச் சேர்ந்த, ஷிப்பிங் கார்ப்பரேஷன், காமராஜர் துறைமுகம் ஆகிய நிறுவனங்களில், மத்திய அரசு, முறையே, 63.75 சதவீதம் மற்றும் 66.67 சதவீத பங்கு மூலதனத்தை கொண்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|