பதிவு செய்த நாள்
04 செப்2017
07:34

சராசரி இந்திய இல்லங்கள் நிதிச் சொத்துகளில் குறைந்த முதலீட்டையே கொண்டிருப்பதை சுட்டிக்காட்டும், ரிசர்வ் வங்கி குழு, இது தொடர்பான பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும் போது, இந்திய குடும்பங்களில் சொத்துகள் அமைந்திருக்கும் விதத்தில் பெருமளவு வேறுபாடு இருக்கிறது. சராசரி இந்திய குடும்பங்களில் 95 சதவீத சொத்துகள் ரியல் எஸ்டேட், தங்கம், வாகனங்கள், உபகரணங்கள் ஆகியவற்றின் வடிவிலேயே அமைந்துள்ளன. இவற்றில், 77 சதவீதம் ரியல் எஸ்டேட்டிலும், 11 சதவீதம் தங்கத்திலும் உள்ளன. 5 சதவீதம் மட்டுமே நிதிச் சொத்துக்களாக உள்ளன. இதற்கு மாறாக, வளர்ந்த நாடுகளில் குடும்பங்களின் வளத்தில் நிதிச் சொத்துகளின் விகிதம் அதிகமாக இருக்கிறது.
நிதிச் சொத்துகள்:
ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட குழு, அண்மையில் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.இந்திய குடும்பங்களின் நிதி செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக, ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு குழு ஒன்றை அமைத்தது. பொருளாதார பேராசிரியர் தருண் ராமதுரை தலைமையிலான இந்த குழு, அண்மையில் தன் அறிக்கையை தாக்கல் செய்தது. இந்த அறிக்கை, இந்திய குடும்பங்களில் சொத்துகள் அமைந்து இருக்கும் விதம், ஓய்வூதிய தயார் நிலை, காப்பீடு ஆகிய அம்சங்கள் குறித்த தகவல்களை அளித்துள்ளன.
இந்திய குடும்பங்களில் நிதிச் சொத்துகள் குறைவாக இருப்பதாக இந்த அறிக்கை தெரிவிக்கிறது. பெரும்பாலான சராசரி குடும்பங்களில் ரியல் எஸ்டேட், தங்கம் போன்ற பவுதீக வடிவிலேயே சொத்துகள் இருக்கின்றன. இது, இந்தியாவுக்கு மட்டும் உரித்தான அம்சமாக கருதப்படுகிறது. மற்ற நாடுகளில் நிதிச் சொத்துகளில் முதலீடு விகிதம் அதிகமாக உள்ளது. அது மட்டும் அல்லாமல், இந்திய குடும்பங்களின் அங்கத்தினர்களுக்கு வயதாகும் போது கடன் சுமை அதிகரிப்பதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும், பெரும்பாலான கடன்கள் ஈடுசெய்யப்படாதவையாக இருப்பதும் தெரியவந்துள்ளது. வங்கி அமைப்புக்கு வெளியில் இருந்து கடன் பெறப்படுவதை இது உணர்த்துகிறது. வளர்ந்த நாடுகளில், பொதுவாக வாழ்வின் மத்திய கட்டத்தில் அதிக கடன் பெறும் போக்கு இருக்கிறது. ஓய்வு பெறும் காலத்தில் கடனை அடைத்துவிட்டு, நிதிச் சாதனங்களில் செய்த முதலீடுகள் மூலம் வருவாய் பெறும் பாதுகாப்பு இருக்கிறது.
வயோதிக கேள்விக்குறி:
இந்தியாவில் மட்டும் தான், வயதாகும் நிலையில் கடன் பொறுப்பில் வீட்டுக்கடன் போன்ற அடமான கடன்கள் பெரும்பகுதி வகிப்பதாகவும், இதனால் ஓய்வூதிய காலத்திலும் கடனை அடைக்கும் நிலை தொடரும் வாய்ப்பு இருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.வாழ்க்கையில் பிந்தைய கட்டங்களில் கடன் வாங்கும் போக்கு அதிகம் இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்கு, சமூக நோக்கிலான அம்சங்களும் ஒரு காரணமாகிறது.
பெரும்பாலான குடும்பங்கள் கடன் சுமை பெறுவதற்கான முக்கிய காரணங்களாக, விளைச்சல் பொய்ப்பது, கால்நடைகள் பாதிப்பு மற்றும் மருத்துவ அவசர தேவைகள் உள்ளிட்டவை அமைகின்றன. இவை அனைத்துமே காப்பீடு மூலம் சமாளித்து விடக்கூடியவை எனும் போது, இந்திய குடும்பங்கள் போதிய காப்பீடு பெறாமல் இருப்பது ஏன் எனும் கேள்வி எழுகிறது. காப்பீடு தொடர்பான விழிப்புணர்வு பரவலாக இருந்தாலும், அவற்றை பெறுவதில் சிக்கல் இருக்கிறது.
எளிய தீர்வுகள்:
இத்தகைய அம்சங்களை ஆய்வு செய்துள்ள குழு, சேமிப்பின் பெரும் பகுதியை நிதிச் சாதனங்களை நோக்கி திருப்புவது, குடும்பங்களுக்கு நலன் பயக்கும் என்று தெரிவித்துள்ளது. இதற்காக, அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளையும் பரிந்துரைத்துள்ளது. நிதிச் சேவைகளை எளிமையாக்கி அனைவரையும் பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. காப்பீட்டு துறையிலும் எளிமையான, செலவு குறைந்த இல்ல காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் தேவை என குறிப்பிடப்பட்டுள்ளன.
வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ரெப்போ விகிதத்துடன் இணைக்கப்பட்டு, வட்டி குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் மற்றும் தங்கத்தில் அதிக முதலீடு செய்யும் நிலை தொடர்ந்தால், வரும் ஆண்டுகளில் இவற்றுக்கான தேவை மேலும் அதிகரிக்கும் என்பதோடு, போதிய காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்டம் இல்லாமல் இருப்பது குடும்பங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இல்லங்களின் நிதி :
* ரியல் எஸ்டேட், தங்கம் போன்றவற்றில் தான் அதிகம் முதலீடு செய்யப்படுகிறது* நிதிச் சாதனங்களில் முதலீடு குறைவாக உள்ளது* காப்பீடு மற்றும் ஓய்வூதிய திட்ட பாதுகாப்பு குறைவு* எளிமையான நிதிச் சேவைகள் அவசியம்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|