பதிவு செய்த நாள்
09 அக்2017
00:16

ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யாததால், வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் குறைவதற்கான வாய்ப்பும் குறைந்திருப்பது, என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும்?
வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் மேலும் குறையும் வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு, ஏமாற்றம் அளிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி அண்மையில், ரெப்போ விகித மாற்றம் இல்லாமல் தொடரும் என அறிவித்துள்ளது. வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்திலும் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுவாக ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டால், வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதமும் குறையும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் பெறுவதால், அதற்கேற்ப அவையும் கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.
புதிய வாடிக்கையாளர்:
நடைமுறையில் ரெப்போ வட்டி குறைப்பின் பலன் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக மாற்றப்படுவதில்லை எனும் விமர்சனம் இருந்தாலும், அண்மையில் வெளியிட்ட நிதிக்கொள்கை அறிவிப்பில், ரெப்போ விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்கவில்லை என்பதால், வங்கிகள் தரப்பில் வட்டி குறைப்பிற்கான எதிர்பார்ப்பும் வடிந்துவிட்டது. தற்போதைய நிலையில் வங்கிகள் வீட்டுக்கடனுக்கு வழங்கும் வட்டி விகிதம் சராசரியாக, 8.5 சதவீதம் என இருக்கிறது. பல வங்கிகள் ஏற்கனவே, எம்.சி.எல்.ஆர்., அடிப்படையிலான வட்டி விகிதத்தை குறைத்து விட்டதால், மேலும் குறைக்கப்பட அதிக வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது.
வீட்டுக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் ஆகியவை எம்.சி.எல்.ஆர்., விகிதத்துடன் இணைக்கப்பட்டிருப்பதால் இந்த விகிதத்திற்கு ஏற்பவே அவற்றின் வட்டி விகிதமும் அமையும்.கடந்த, 2016 ஏப்ரலுக்கு பின், எல்லா கடன்களும் எம்.சி.எல்.ஆர்., விகிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. எனினும் புதிதாக கடன் பெற திட்டமிட்டு உள்ள வாடிக்கையாளர்கள் இந்த விகிதத்தை மட்டும் கணக்கில் கொண்டால் போதாது.
வட்டி விகிதம்:
வட்டி விகிதம் தவிர, மார்க் அப் மற்றும் ரீசெட் காலத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் முதல் முறையாக வீடு வாங்க இருப்பவர்கள் வீட்டுக்கடன் வட்டிக்கான மத்திய அரசின் மானிய திட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்புள்ளதா என்பதையும் பரிசீலிக்க வேண்டும். ஏற்கனவே கடன் பெற்றவர்களை பொறுத்தவரை, எம்.சி.எல்.ஆர்., விகிதத்தில் கடன் பெற்றவர்கள் மற்றும் அதற்கு முந்தைய பேஸ் ரேட் முறையில் கடன் பெற்றவர்கள் என, இரண்டு பிரிவினர் உள்ளனர். எம்.சி.எல்.ஆர்., முறையில் கடன் பெற்றவர்களுக்கு ரிசர்வ் வங்கி முடிவால், உடனடியாக எந்த தாக்கமும் இருக்காது. ஏனெனில் ரெப்போ விகிதம் குறைக்கப்பட்டிருந்தாலும், கடன் விகிதத்திற்கான ரிசெட் காலம் வரை மாற்றம் இருந்திருக்காது.
விழாக்கால சலுகை:
இந்த சூழலில், வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதம் தொடர்பாக முடிவெடுப்பது, அவற்றின் லாப விகிதத்தை பொறுத்தே அமையும். ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை குறைக்கவில்லை என்றாலும், எஸ்.எல்.ஆர்., விகிதம், 0.5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அல்லது மாநில அரசுகள் வசம் வங்கிகள் செய்ய வேண்டிய கட்டாய டிபாசிட் விகிதமாக இது அமைகிறது. இது குறைக்கப்பட்டுள்ளதால், வங்கிகள் கடன் கொடுப்பதற்கான தொகையும் அதிகரிக்கலாம் என கருதப்படுகிறது. இந்த பின்னணியில் வங்கிகள் அளிக்கக் கூடிய பண்டிகை கால சலுகைகள் முக்கியமாகின்றன. வங்கிகள் பலவிதமான சலுகைகளை அறிவிக்கத் துவங்கியிருந்தாலும் வட்டி குறைப்பை விட, செயல் முறை கட்டணம் போன்றவற்றில் தான் சலுகைகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் போட்டி காரணமாகவும், வங்கிகள் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அளிக்கலாம். எனவே வீட்டுக்கடன் பெற திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், இந்த அம்சங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.
முக்கிய விகிதங்கள்:
* சி.ஆர்.ஆர்., எனப்படும் ரொக்க இருப்பு விகிதம், வங்கிகள் மத்திய வங்கியிடம் வைத்திருக்க வேண்டிய ரொக்கத்தை குறிக்கிறது
* எஸ்.எல்.ஆர்., விகிதம் வங்கிகள் மத்திய மற்றும் மாநில அரசுகள் பத்திரங்களில் செய்ய வேண்டிய டிபாசிட்டை குறிக்கிறது
* ரெப்போ விகிதம் என்பது வங்கிகள் மத்திய வங்கியிடம் இருந்து பெறும் கடனுக்கான வட்டி விகிதமாகும்
* ரிவர்ஸ் ரெப்போ விகிதம், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கு அளிக்கப்படும் வட்டியாகும்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|