பதிவு செய்த நாள்
05 டிச2017
00:41

புதுடில்லி:'ரிசர்வ் வங்கி, நாளை வெளியிடும் நிதிக் கொள்கையில், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்பில்லை' என, நிதி வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு, இரு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, நிதிக் கொள்கையை அறிவிக்கிறது.
இதன்படி, ஆகஸ்டில், வங்கிகள், ரிசர்வ் வங்கியிடம் இருந்து பெறும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதம், 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, ஏப்., - ஜூன் காலாண்டிற்கான, மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த, அரசின் புள்ளி விபரம் வெளியானது.அதில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தி, 5.7 சதவீதமாக குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.மேலும், ஜூனில், 1.54 சதவீதமாக இருந்த சில்லரை பணவீக்கம், செப்டம்பரில், 3.28 சதவீதமாக அதிகரித்தது. பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டில், ரிசர்வ் வங்கி, அக்டோபரில் வெளியிட்ட நிதிக் கொள்கையில், 'ரெப்போ' விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை.
இந்நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, சில்லரை பணவீக்கம் ஆகியவற்றின் மதிப்பீட்டில் அதிருப்தி தெரிவித்த, பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான, ஆஷிமா கோயல், 'ரிசர்வ் வங்கி, 'ரெப்போ' விகிதத்தை குறைக்க வேண்டும்' என, சமீபத்தில் வலியுறுத்தி இருந்தார்.
இந்நிலையில், ஜூலை - செப்., காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி, 6.3 சதவீதமாக உயர்ந்துள்ள தகவல் வெளியானது.அதே சமயம், அக்டோபரில், சில்லரை பணவீக்கம், ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 3.58 சதவீதமாக அதிகரித்துள்ளது.அதனால், ரிசர்வ் வங்கி, நாளை, 'ரெப்போ' விகிதத்தை குறைக்காது; அடுத்து, 2018 பிப்ரவரியில் வெளியிட உள்ள நிதிக் கொள்கையிலும், வட்டியில் மாற்றம் இருக்காது என, வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.
கச்சா எண்ணெய் விலை உயர்வு, ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையால் அதிகரித்துள்ள பணப்புழக்கம், பணவீக்கம் அதிகரிப்பு போன்றவற்றால், இத்தகைய நிலைப்பாட்டை ரிசர்வ் வங்கி எடுக்கும்.இது, வட்டியை குறைக்க விரும்பும், மத்திய அரசின் விருப்பத்திற்கு மாறான நிலைப்பாடாக இருக்கும் எனவும், அவர்கள் கூறியுள்ளனர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|