பதிவு செய்த நாள்
15 ஜன2018
01:58

தமிழ்நாடு எம்.எல்.ஏ.களுக்கு மட்டும்தான் சம்பள உயர்வா, நமக்கு இல்லையா என்று மத்தியமர்கள் ஏங்க வேண்டாம். பல்வேறு தொழிற்துறையினர் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று, நல்ல செய்தியைச் சொல்கிறது. இந்த ஆண்டு சம்பள உயர்வுகள் எப்படி இருக்கப் போகின்றன?
‘மெர்சர்’ என்ற அமைப்பு, ‘இந்தியா டோட்டல் ரெமுனரேஷன் சர்வே’யை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி, முடிவுகளை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு, இந்த அமைப்பு பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 791 நிறுவனங்களிடம் மேற்கொண்ட ஆய்வில், பல சுவாரசியமான தகவல்கள் வெளியாகிஉள்ளன. அதில் முக்கியமானது, சம்பள உயர்வு.
சுமார், 10 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு தருவதற்கு இந்த நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. சென்ற ஆண்டுகளில், 8 முதல் 13 சதவீதம் வரை சம்பள உயர்வு வழங்குவது என்ற திட்டமிருந்தது. இந்த ஆண்டு, வளர்ச்சி சூழ்நிலை சுமுகமாகியுள்ளதால், 10 சதவீத சம்பள உயர்வு நிச்சயமாகியுள்ளது.
10 சதவீத சம்பள உயர்வு என்பது மிகப்பெரியதா? ஆமாம். வில்லிஸ் டவர்ஸ் வாட்சன் என்ற மற்றொரு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை, இப்படித்தான் தெரிவிக்கிறது. அதாவது ஆசிய பசிபிக் பகுதியில், இந்தியாவில் தான் அதிகபட்ச சம்பள உயர்வு இருக்கப் போகிறதாம்.இந்தோனேசியாவில் சம்பள உயர்வு, 8.5 சதவீதமாக இருக்க, சீனாவில், 7 சதவீதம், பிலிப்பைன்ஸில், 6 சதவீதம், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இது, 4 சதவீத அளவுக்கே இருக்கப் போகின்றன. அதனோடு ஒப்பிடும்போது, இந்திய நிறுவனங்கள் கூடுதலான உயர்வையே வழங்கவுள்ளன.
சம்பள உயர்விலும் துறைக்குத் துறை மாறுபாடும், பல்வேறு படிநிலைகளில் வேறுபாடும் இருக்கப்போகிறது. இடைநிலை மேலாளர்கள் மத்தியில் கூட சாதாரணமான வேலைசெய்பவர்கள், 2 – 3 சதவீத உயர்வு வழங்கப்பட, நன்றாகச் செயல்பட்டவர்கள் 15 சதவீத அளவுக்கு உயர்வு கொடுக்கப்பட வாய்ப்புண்டு என்று கூறுகிறது வில்லிஸ் டவர்ஸ் வாட்சன்.புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கம் பற்றிய ‘மெர்சர்’ தெரிவிக்கும் தகவலும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆய்வுசெய்யப்பட்ட, 791 நிறுவனங்களில், 55 சதவீத நிறுவனங்கள், புதிய நபர்களை வேலைக்கு எடுத்துக்கொள்ள உத்தேசித்திருக்கின்றன.
சென்ற ஆண்டு, 48 சதவீத நிறுவனங்களே புதிய வேலைகளை உருவாக்க முன்வந்திருந்தன. இம்முறை நிலைமை மாறியிருப்பதால், நிறுவனங்களுக்கு நம்பிக்கை பிறந்திருக்கிறது. அதனால், ஆளெடுப்பின் எண்ணிக்கையும் உயர்வதற்கான வாய்ப்புள்ளது.இது வழக்கமான ஓய்வு பெற்றவர்கள் மற்றும் வேலையை விட்டு வெளியேறியவர்களுக்கான ‘மாற்று நபர்’ என்று சொல்லப்படும் ரீப்ளேஸ்மென்ட் ஆளெடுப்பு அல்ல; முற்றிலும் புதிய பதவிகள் உருவாக்கப்படுவதனால், ஏற்பட்டுள்ள ஆளெடுப்பு.
எந்தெந்த துறைகளில் ஆளெடுப்பு நடக்கப் போகிறது? சில்லறை வர்த்தகம், எப்.எம்.சி.ஜி., உற்பத்தித் துறை மற்றும் மருந்துகள் தயாரிப்புத் துறை ஆகியவற்றில் வேலைவாய்ப்புகள் பெருகியுள்ளன. அதேபோல், சப்ளை செயின் திட்டமிடல், அனாலிடிக்ஸ், டிமாண்ட் பிளானிங், கம்ப்யூட்டர் இமேஜரி, ஸ்டோர் டிசைன், வர்த்தகவியல் போன்ற துறைகளில் புதிய வேலைகள் உருவாகியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு, கணினி கற்பித்தல், தானியங்கி தொழில்நுட்பம், ரோபோடிக்ஸ், இன்டர்நெட் ஆப் திங்க்ஸ் ஆகிய நவீனகால சவால்கள் பெருகிவருவதால், தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்கள், தங்களைத் தொடர்ந்து மேம்படுத்திக்கொள்ள வேண்டிய தேவை உருவாகியுள்ளது. இன்றைய காலகட்டத்துக்கான திறன்களோடும் படிப்புகளோடும் வருபவர்களுக்கே, வேலைவாய்ப்புக்கான கதவுகள் திறந்துள்ளன.
வேலைவாய்ப்பில் உள்ள மற்றொரு அளவீடும் முக்கியமானது. அது ‘அட்ரிஷன்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் வேலையைவிட்டுச் செல்பவர்களின் எண்ணிக்கை. அது, 1.8 சதவீதம் குறைந்துள்ளது. 2017ல் 13.3 சதவீதமாக இருந்த அட்ரிஷன், 2018ல் 11.5 சதவீதமாகக் குறைந்துஉள்ளது.இதற்கு முக்கிய காரணம், நிறுவனங்கள், தகுதியுள்ள நபர்களைத் தக்கவைத்துக்கொள்ள மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை.
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களான இன்போசிஸ், டி.சி.எஸ். ஆகியவை, சமீபத்தில் வெளியிட்ட மூன்றாம் காலாண்டுக்கான அறிக்கைகளில், பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வதற்குச் செய்திருக்கும் செலவுகளைக் குறிப்பிட்டுள்ளன.குறிப்பாக, ஆய்வு மற்றும் மேம்பாட்டுத் துறை (ஆர்.& டி.) மற்றும் விற்பனைத் துறையைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து ‘தாவி’க்கொண்டே இருக்கிறார்கள்.
அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதுதான், சவாலாக இருக்கிறது என்று தெரிவிக்கின்றன, ஐ.டி., நிறுவனங்கள். இன்போசிஸில், 2017 – -18 இரண்டாம் காலாண்டில், 17.2 சதவீதமாக இருந்த அட்ரிஷன், மூன்றாம் காலாண்டில், 15.8 சதவீதமாகக் குறைந்து உள்ளது. டி.சி.எஸ்., முற்றிலும் வேறொரு அணுகுமுறையைப் பின்பற்றுகிறது. சென்ற ஆண்டுகளில், கல்லுாரிகளிலேயே சென்று ஆளெடுப்பு நடத்தி, ஆபர் கடிதங்களை வழங்கி, பின்னர் வேலைக்குச் சேர்த்துக்கொண்டன.
இதன்மூலம், எப்போதும் ஒரு குறிப்பிட்ட அளவிலான பணியாளர்கள் ‘பெஞ்ச்’ என்று சொல்லப்படும் ‘காத்திருப்பில்’ இருப்பார்கள். இப்போது அந்த நிலை மாறிவிட்டது. தேவை ஏற்படும்போது, புதிய பணியாளர்களைச் சேர்த்துக்கொள்கிறது, டி.சி.எஸ்.,இதன் தொடர்ச்சியாக புரிந்துகொள்ளவேண்டிய இன்னொரு அளவீடும் முக்கியமானது. அதற்கு பணியாளர் பயனீட்டு அளவு (எம்ப்ளாயீ யுடிலைசேஷன் லெவல்) என்று பெயர். டிசம்பர் காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் பணியாளர் பயனீட்டு அளவு 84.9 சதவீதம். ஆறு மாதங்களுக்கு முன் இதுவே, 81.9 சதவீதமாக இருந்தது.
அதாவது நூறு பேரில், 85 பேர், இன்போசிஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களிடம் நேரடியாக வேலை செய்கிறார்கள். மீதமுள்ள பதினைந்து பேர் ஒன்று ‘காத்திருப்பில்’ வைக்கப்பட்டுள்ளார்கள், அல்லது நிறுவனத்தின் சொந்த திட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள். பயனீட்டு அளவை அதிகரிப்பதில்தான் நிறுவனங்கள் முனைப்போடு இருக்கின்றன.
இவை தனியார் துறை, தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்படக்கூடிய சம்பள உயர்வுகள் பற்றிய தகவல்கள். இந்திய அளவில் இத்துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நம்பிக்கையினால் இத்தகைய கணிப்புகள் செய்யப்படுகின்றன.
பணவீக்கத்தையும் விலைவாசி உயர்வையும் சமாளிக்க மட்டுமே, இத்தகைய உயர்வுகள் போதுமானவை. உண்மையான தனிநபர் வளர்ச்சி என்பது இதற்கு அப்புறம், கையில் தேங்கக்கூடிய உபரியினால் ஏற்படுவது. 2018ல் அந்த உபரி கிடைத்தால், மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.-– ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|