பதிவு செய்த நாள்
08 பிப்2018
21:14

புதுடில்லி : ‘‘பொதுத் துறை வங்கிகளில், புதிய வாராக்கடன் பெருகவில்லை,’’ என, பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர், பிபேக் தெப்ராய் தெரிவித்து உள்ளார்.
‘நடப்பு, 2017 – -18ம் நிதியாண்டில், ஜூலை – செப்., காலாண்டு நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், 7.34 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது’ என, ரிசர்வ் வங்கி தெரிவித்து உள்ளது.இந்நிலையில், 2017ல் அறிமுகமான, நிறுவன திவால் சட்டம் மூலம், பல நிறுவனங்களின் சொத்துகளை விற்று, வாராக்கடனை வசூலிக்கும் பணியை, பொதுத் துறை வங்கிகள் முடுக்கி விட்டுள்ளன.
மேலும், கடன் தவணையை செலுத்த தவறும் நிறுவனங்களுக்கு, துவக்க நிலையிலேயே எச்சரிக்கை விடுத்து, கடனை வசூலிக்கும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளன. அதனால், வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில், நிறுவனங்களின் சேர்க்கை கட்டுப்படுத்தப்பட்டு, புதிய வாராக்கடன்கள் உருவாவது குறைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து, பிபேக் தெப்ராய் கூறியதாவது: பொதுத் துறை வங்கிகளின் கணக்கு ஏடுகள் தவிர்த்து, மெய்நிகர் அளவில், புதிய வாராக்கடன்கள் பெருகுவது நின்று விட்டது. தீவிரமான கடன் வசூலிப்பு நடவடிக்கைகள் காரணமாக, பல நிறுவனங்களின் வாராக்கடன் நிலுவையில் மாறுதல் ஏற்பட்டுள்ளது.
அதனால், பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்காது என, நான் கருதுகிறேன். வருமான வரி மற்றும் இதர நேரடி வரிகளை நீக்கி, அவற்றை மறைமுக வரிகளில் சேர்ப்பது சாத்தியமே. இந்தியா போன்ற ஏழை நாடுகளில், மறைமுக வரிகளை கண்காணிப்பதும் சுலபமே.
இந்தியாவில், தனிநபர்கள் வருமான வரி செலுத்துவது குறைவாக உள்ளது. ஊரகத் துறை முழுவதும், வரி விதிப்பின் கீழ் கொண்டு வரப்படாததே, வருமான வரி வருவாய் குறைவாக உள்ளதற்கு காரணம். அது, மாநில அரசுகளின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்பதால், மத்திய அரசால் ஒன்றும் செய்ய முடியாது.
பண்ணை வருவாய்க்கு வரி விலக்கு அளிக்கப்படுவதன் காரணமாகவே, அரசுக்கு, வருமான வரி வாயிலான வருவாய் குறைவாக உள்ளது. பண்ணை வருவாயில், குறிப்பிட்ட வரம்பிற்கு மேற்பட்ட தொகைக்கு வரி விதிக்கலாம். ஆனால், பல வல்லுனர்கள் இதை வலியுறுத்தாமல் இருப்பது, வருந்தத்தக்கது.
நம்மில் எவ்வளவு பேர், பண்ணை வருவாய்க்கு வரி விதிக்க ஆதரவு தெரிவிப்பர் என்பது தான், என் கேள்வி. அவ்வாறு வரி விதிக்கப்பட்டாலும், அதுவும் குறிப்பிட்ட வருவாய் வரம்பிற்கு மேற்பட்டு தான் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
என்ன காரணம்?
நடப்பு நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறை, இலக்கு அளவான, 3.2 சதவீதத்தை விட, உயர்ந்து, 3.5 சதவீதமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. ஜி.எஸ்.டி., 11 மாதங்களுக்கு மட்டுமே கணக்கீடு செய்யப்படுவதால், நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இல்லையென்றால், 3.2 சதவீதத்தை நெருங்கி இருக்கும்.
-பிபேக் தெப்ராய் ,பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவர்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|