பதிவு செய்த நாள்
02 மார்2018
00:25

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, முன்னணி வங்கிகளின், லாபமீட்டாத,
35 வெளிநாட்டு கிளைகளை மூட, மத்திய அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தவிர, மேலும், 69 வெளிநாட்டு வங்கி கிளைகளை மூடுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.
நடப்பு, 2017 -– 18ம் நிதியாண்டில், செப்., இறுதி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் வாராக்கடன், 7.34 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. வாராக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள, பொதுத் துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு ஏற்கனவே, மறு பங்கு மூலதன திட்டத்தை
அறிவித்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் நேஷனல் வங்கியில், போலி கடன் பொறுப்பேற்பு கடிதம் மூலம், நிரவ் மோடி, மெஹல் சோக்சி உள்ளிட்டோரின், 11,400 கோடி ரூபாய் மோசடி, கடந்த மாதம் அம்பலமானது. இதனால், போலி ஆவணத்தின்படி கடன் வழங்கிய, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அலகாபாத் பேங்க், யூகோ பேங்க் உள்ளிட்ட வங்கிகளும் பாதிக்கப்பட்டு உள்ளன.
மேலும், ஓரியன்டல் பேங்க் ஆப் காமர்ஸ் உட்பட, மேலும் பல வங்கிகளில், ரோட்டோமேக், துவாரகா தாஸ் சேத் போன்ற பல நிறுவனங்களின் மோசடிகளும் வந்த வண்ணம் உள்ளன.
அதனால், பொதுத் துறை வங்கிகளில், மோசடி தொகை, 20 ஆயிரம்கோடி ரூபாயை தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இதன் காரணமாக, மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து, புரையோடிக் கொண்டிருக்கும் பொதுத் துறை வங்கிகளை சீரமைப்பதில், தீவிரமாக களமிறங்கி உள்ளன.
மத்திய அரசு, அதன் பங்கிற்கு, ஏற்கனவே மறு பங்கு மூலதன திட்டத்தின் கீழ், பொதுத் துறை வங்கிகளுக்கு, 2.11 லட்சம் கோடி ரூபாய் அளிப்பதாக அறிவித்து, முதல்கட்ட ஒதுக்கீடும் செய்துள்ளது.இதையடுத்து, வங்கி ஆய்வு குழு அளித்துள்ள பரிந்துரையை ஏற்று, லாபகரமற்ற அல்லது மிகக் குறைவாக லாபமீட்டுகிற பொதுத் துறை வங்கிகளின், வெளிநாட்டு கிளைகளை மூட முடிவு செய்துள்ளது.
இது குறித்து, நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல்கட்டமாக, பொதுத் துறை வங்கிகளின், வெளிநாட்டு கிளைகளில், 35 கிளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், 65 கிளைகள்மற்றும் வெளிநாடுகளில் உள்ள, அவற்றின்அலுவலகங்கள்,
வங்கி சேவை சார்ந்த துணை நிறுவனங்கள், கூட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை மூடுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.
அனைத்து பொதுத் துறை வங்கிகளின், வெளிநாட்டு கிளைகளையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைத்து, வெளிநாட்டு நிர்வாகச் செலவுகளை குறைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
நீண்ட கால பயன்கள்
ரிசர்வ் வங்கியின், இடர்ப்பாட்டு கடன்கள் தொடர்பான புதிய விதிமுறைகளால், இப்பிரிவின்
பெருமளவு கடன், அடுத்த ஆறு மாதங்களில், வாராக்கடன் பிரிவிற்கு மாறும். இது, வங்கிகளின் வாராக்கடன் சுமையை அதிகமாக்கினாலும், நீண்ட கால பயன்களை அளிக்கும்.
சவுரப் முகர்ஜி
தலைமை செயல் அதிகாரி, ஆம்பிட் கேப்பிட்டல்
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|