பதிவு செய்த நாள்
11 ஏப்2018
00:56

சென்னை:‘‘மேக் இன் இந்தியா திட்டத்தில், ஏற்றுமதி இலக்கை எளிதாக எட்ட, சென்னையில் நடக்கும் ராணுவ கண்காட்சி, மிகப்பெரிய உதவியாக இருக்கும்,’’ என, இந்திய ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் சங்கத்தின் தலைவர், பாபா கல்யாணி கூறினார்.
இது குறித்து, சென்னையில், அவர் கூறியதாவது:சென்னையில், பிரமாண்ட ராணுவ கண்காட்சி இன்று துவங்குகிறது. இதுவரை நடந்த ராணுவ கண்காட்சிகளில், வெளிநாட்டு நிறுவனங்களின் உற்பத்தி தளவாடங்கள் தான், அதிகம் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.ஆனால், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாட்டினர் பார்வையிடும் வகையிலான கண்காட்சி நடப்பது, இதுவே முதல் முறை.இந்த கண்காட்சியில், சிறு, குறு தொழில் நிறுவனங்களின் உற்பத்தி தளவாடங்கள், அதிகம் இடம் பெறுகின்றன.
ராணுவ தளவாட பொருட்களின் உற்பத்தி மையமாக, இந்தியா சிறந்து விளங்குகிறது என்பதை, இந்தக் கண்காட்சி உணர்த்தும். இதற்கு, ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதல் கொள்கை – 2016; ராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி கொள்கை – 2018 போன்றவை, வகுக்கப்பட்டதே முக்கிய காரணம்.
‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில், இதுவரை, 1,950 கோடி ரூபாய்க்கு, உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளோம். 2025க்குள், 35 ஆயிரம் கோடி ரூபாய் என்ற, ஏற்றுமதி இலக்கை எட்ட, சென்னையில் நடக்கும் ராணுவ கண்காட்சி, மிகப் பெரிய உதவியாக இருக்கும்.ராணுவத்தில், தற்போது வெளிப்படைத்தன்மை அதிகம் உள்ளது. புதிதாக, உற்பத்தி நிறுவனங்கள் துவங்குவதற்கான வழிமுறைகள் எளிமையாக்கப்பட்டு உள்ளன.மேலும், தமிழகம் மற்றும் உத்தர பிரதேசத்தில், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனம் அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
அதில், உற்பத்தி செய்யப்படும் தளவாடப் பொருட்களை ஆய்வு செய்ய, கோவையில் ஆய்வு மையம் அமைக்க, திட்டமிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சென்னை, திருச்சி ஆகிய இடங்களிலும், ஆய்வு மையங்கள் அமைய வாய்ப்புள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|