பதிவு செய்த நாள்
05 மே2018
01:05

புதுடில்லி:‘கடந்த ஏப்ரலில், நாட்டின் சேவைகள் துறை, சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது; ஏழு ஆண்டுகள் இல்லாத வகையில் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது’ என, ‘நிக்கி – மார்கிட்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனம், இந்தியாவில் சேவைகள் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் மாதாந்திர வர்த்தகச் செயல்பாடுகளை ஆய்வு செய்து, அறிக்கை வெளியிட்டு வருகிறது.
புதிய ஆர்டர்கள்
இதன்படி, ஏப்ரலில் சேவைகள் துறையின் செயல்பாடுகள் குறித்து, இந்நிறுவனம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த ஏப்ரலில், தேவைப்பாடு அதிகரித்ததால், சேவை துறை நிறுவனங்களுக்கு அதிக அளவில், புதிய ‘ஆர்டர்’கள் குவிந்தன.மேலும், நாட்டின் பணவீக்கத்தில் ஏற்பட்டுள்ள சரிவும், சேவை நிறுவனங்களின் வர்த்தக வளர்ச்சிக்கு துணை புரிந்துள்ளது.
இதனால், சேவைகள் துறை வளர்ச்சியை குறிக்கும், என்.எம்.எஸ்.பி.எம்.ஐ., குறியீடு, ஏப்ரலில், 51.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. இது, மார்ச்சில், 50.3 புள்ளிகளாக இருந்தது.இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரியில், முறையே, 47.8 மற்றும், 51.7 புள்ளிகள் என்ற அளவில், குறியீடு காணப்பட்டது.இக்குறியீடு, 50 புள்ளிகளுக்கு மேல் இருந்தால், அது வளர்ச்சியை குறிக்கும்.
வளர்ச்சி விகிதம்
புதிய ஆர்டர்கள் அதிகரித்ததால், சேவை நிறுவனங்கள் அதிக அளவில் பணியாளர்களைநியமித்தன.இதன் காரணமாக, ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, அதாவது, 2011 ஜூன் மாதத்திற்கு பின், ஏப்ரலில், சேவை நிறுவனங்களின் வேலைவாய்ப்பு வளர்ச்சி விகிதம் மிகவும் அதிகரித்துள்ளது.
நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின் துவக்கமே, சேவை துறைக்கு சிறப்பாக அமைந்துள்ளது. தொடர்ந்து, ஆறு மாதங்களாக, இந்தியாவில் தயாரிப்பு துறை சார்ந்த நிறுவனங்களுக்கு, புதிய ஆர்டர்கள் அதிகம் கிடைத்துள்ளன.சந்தையில், பொருட்களுக்கான தேவை பெருகியுள்ளதால், நிறுவனங்கள், அதிக அளவில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகின்றன.இத்துறையின் வளர்ச்சி, மிதமான அளவிற்கே உள்ளது. இருந்த போதிலும், மிக விரைவாக இத்தகைய நிலையை எட்டியிருப்பது கவனிக்கத்தக்கது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எவை எவை?இந்திய சேவைகள் துறையில், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஓட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த சேவைகள் அடங்கிஉள்ளன.
கடந்த, 2017 ஜூன் முதல், நிறுவனங்களின் மூலப்பொருட்கள் செலவினம், மிகச் சிறிய அளவில் உயர்ந்து வருகிறது. அதற்கேற்ப, நிறுவனங்கள், சேவைகளுக்காக வசூலிக்கும் தொகையும் அதிகரித்துள்ளது. இது, இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் மிதமான விலை உயர்வுக்கு வழி வகுத்துள்ளது. இந்தாண்டு, பிப்ரவரியில், சேவைகள் துறை வளர்ச்சியில், தற்காலிக தொய்வு ஏற்பட்டது. அதன் பின், தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளதுஆஷ்னா தோதியா பொருளாதார வல்லுனர், ஐ.எச்.எஸ்., மார்கிட்
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|