பதிவு செய்த நாள்
24 ஆக2018
06:38

புதுடில்லி : ‘குறைந்த அளவில் விற்பனையாகும் ஆடம்பர கார்களை தயாரிக்கும் திட்டம் இல்லை’ என, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிறுவனத்தின், 37வது ஆண்டு பொதுக் குழு கூட்டம், டில்லியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான பங்கு முதலீட்டாளர்கள் பங்கேற்று, பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அவற்றுக்கு, மாருதி சுசூகி இந்தியா நிறுவனத்தின் தலைவர், ஆர்.சி.பார்கவா அளித்த பதிலின் தொகுப்பு:
நடப்பு நிதியாண்டின், முதல் காலாண்டில், பயணியர் வாகன சந்தையில், மாருதி சுசூகி நிறுவனத்தின் பங்களிப்பு, 52.54 சதவீதமாக உயர்ந்துள்ளது.இது, கடந்த நிதியாண்டின், இதே காலாண்டில், 50.43 சதவீதமாக இருந்தது. கார் சந்தையில், 50 சதவீதத்திற்கும் மேல் நிறுவனத்தின் பங்கு உயர்ந்துள்ளதால், ஆடம்பர கார் தயாரிப்பில் இறங்க வேண்டும் என்கின்றனர்.
ஆனால், அத்தகைய திட்டம் எதுவும் நிறுவனத்திடம் இல்லை. அதேசமயம், ஆடம்பர கார்களில் உள்ள உயர் தரமான வசதிகளை, குறைந்த விலையில் விற்கப்படும் புதிய கார்களில், மாருதி சுசூகி புகுத்தி வருகிறது. புதிய, ‘சியஸ்’ காரில், ஆடம்பர கார்களில் உள்ள சில வசதிகள் உள்ளன.
குறைந்த விலை :
இந்திய மக்கள், வாங்கக்கூடிய விலையில் பொருட்கள் கிடைக்க வேண்டும். அது, தரமாகவும் இருக்க வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்கள். அத்தகையோரை குறி வைத்து, குறைந்த விலையில், அதிக வசதிகள் உள்ள கார்களை, நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அதிகமான கார்களை தயாரித்து, நியாயமான விலையில் விற்பனை செய்ய வேண்டும் என்பதே, நிறுவனத்தின்கொள்கை மற்றும் வலிமையும் கூட.
அதனால், குறைந்த எண்ணிக்கையில் ஆடம்பர கார்களை தயாரிக்கும் திட்டம், நிறுவனத்தின் வர்த்தக கொள்கைக்கு ஒத்து வராது. நாங்கள் கார்களின் தரத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு வசதிகளையும் புகுத்தி வருகிறோம். வாடிக்கையாளர்களுக்கு, நியாயமான விலையில், திருப்திகரமான வாகனத்தை வழங்க வேண்டும் என்பது தான் எங்கள் கொள்கை. அதேசமயம், ஆடம்பர கார் தயாரிப்பு குறித்து, நிர்வாக குழுவின் முடிவிற்கு விட்டுவிடுவோம்.
லாப வரம்பு :
நிறுவனத்தின் செயல்பாட்டு லாப வரம்பில் தேக்க நிலை காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக, மூலப்பொருட்கள் விலையேற்றம், அன்னியச் செலாவணி மதிப்பு, சர்வதேச வர்த்தக பிரச்னைகள் போன்றவை தான், செயல்பாட்டு லாப வளர்ச்சியை தீர்மானிக்க கூடியவை. இருந்தபோதிலும், இந்தியாவில், இதர கார் தயாரிப்பு நிறுவனங்களை விட, மாருதி சுசூகியின் செயல்பாட்டு லாப வரம்பு தான் அதிகம் என்பதை கூறிக் கொள்கிறேன்.
இந்திய பொருளாதாரம், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது. பருவ மழை பொழிவும் நன்கு உள்ளது. ஜி.எஸ்.டி., அமல் காரணமாக, நிறுவனங்கள் அதிக முதலீடுகளை மேற்கொண்டு, தொழிற்சாலைகளை நவீனமயமாக்கும் வளர்ச்சி திட்டங்களை கையிலெடுத்துள்ளன. இவையெல்லாம், ஒட்டுமொத்த வாகன துறைக்கு சாதகமான அம்சங்கள்.
ஆனால், அவற்றின் முழுப் பயனை பெற முடியாதபடி, அமெரிக்கா – சீனா இடையிலான வர்த்தகப் போர், கச்சா எண்ணெய் விலையேற்றம், ஈரான் மீதான பொருளாதார தடை ஆகிய பிரச்னைகள் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
விற்பனை விறுவிறு :
நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டின், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், இந்தியாவில் பயணியர் கார் விற்பனை, 19.91 சதவீதம் அதிகரித்து, 8,73,501 ஆக உயர்ந்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில், 7,28,483 ஆக இருந்தது. இதே காலத்தில், மாருதி சுசூகி நிறுவனத்தின் கார் விற்பனை, 24.93 சதவீதம் உயர்ந்து, 3,67,386லிருந்து, 4,58,967 ஆக அதிகரித்துள்ளது. சந்தை பங்கு, 2.11 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|