பதிவு செய்த நாள்
16 செப்2018
00:59

புதுடில்லி:மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், 1.50 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலிக்குமாறு, பொதுத் துறை வங்கிகளுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளது.இது, கடந்த நிதியாண்டு வசூலித்த வாராக் கடனை விட, இரு மடங்கு அதிகம். இந்தாண்டு மார்ச்சுடன் முடிந்த, 2017 -– 18ம் நிதியாண்டில், இந்திய வங்கித் துறையின் வாராக் கடன், 10.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
இது, வங்கித் துறை அளித்த கடன்களில், 11.8 சதவீதமாகும்.கடந்த நிதியாண்டில் மட்டும், வாராக் கடன், 3.13 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த, 21 வங்கிகளின் வாராக் கடன், 8.97 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, 2.23 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனுடன் முதலிடத்தில் உள்ளது.அதிகரிக்கும்இந்நிலையில், மத்திய அரசின் நடவடிக்கைகளும், ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகளும், வாராக் கடன் வசூலை அதிகரிக்க துணை புரிந்துள்ளன.
கடந்த ஆண்டு அமலுக்கு வந்த, திவால் சட்டத்திற்கு அஞ்சி, பல நிறுவனங்கள் வாராக் கடனை திரும்பச்செலுத்த துவங்கி உள்ளன.இதனால், கடந்த நிதியாண்டை விட, நடப்பு, 2018 -– 19ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் வசூல் அதிகரிக்கும் என, தெரிகிறது.
இது குறித்து, மத்திய அரசு மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:கடந்த நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகள், 74 ஆயிரம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலித்தன. நடப்பு நிதியாண்டில், ஏப்., – ஜூன் வரையிலான முதல் காலாண்டில், 36,500 கோடி ரூபாய் வாராக் கடன் வசூலாகி உள்ளது.
இதே காலத்தில், வங்கித் துறையின் வாராக் கடன், 10.25 லட்சம் கோடி ரூபாயில் இருந்து, 10 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்துள்ளது.இந்நிலையில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடன் தொடர்பாக, 80 நிறுவனங்களுக்கு, ரிசர்வ் வங்கி விதித்த, ‘கெடு’ கடந்த ஆகஸ்ட், 27ல் முடிவடைந்துள்ளது. இக்கடன்கள் தொடர்பான தீர்வு மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு அளித்த, 15 நாள் கூடுதல் அவகாசமும் கடந்த வாரம் முடிந்தது.
திவால், ‘நோட்டீஸ்’
இதையடுத்து, கடனுக்கு தீர்வு காண முன்வராத நிறுவனங்கள் மீது, வங்கிகள், தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், திவால் நோட்டீஸ் அளிக்க உள்ளன.அதே நேரத்தில், சில நிறுவனங்கள், திவால் நடவடிக்கையை தவிர்க்க, வாராக் கடனை திரும்ப செலுத்த முன்வந்துள்ளன.அதனால், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன் வசூல், ஜூலை – செப்., வரை, 75,000 – 80,000 கோடி ரூபாயாக உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இந்த கணக்கீட்டின் அடிப்படையில், 2019, மார்ச்சுக்குள், 1.50 லட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை வசூலிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்காவை உள்ளடக்கிய, ‘பிரிக்ஸ்’ நாடுகளை பொறுத்தவரை, வங்கித் துறையில், அதிக அளவில் வாராக் கடனுடன், இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஸ்பெயின் உள்ளிட்ட, பி.ஐ.ஐ.ஜி.எஸ்., நாடுகளில், அதிக வாராக் கடனில், இந்தியா, ஐந்தாவது இடத்தில் உள்ளது.‘கேர்’ தர நிர்ணய நிறுவன ஆய்வறிக்கை
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|