பதிவு செய்த நாள்
28 செப்2018
23:51
புதுடில்லி: ‘‘விரைவில், தேசிய வேளாண் ஏற்றுமதி கொள்கைக்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கும்,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, விவசாயிகள் வருவாயை, 2022ல் இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. மேலும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை, தற்போதைய, 3,000 கோடி டாலரில் இருந்து, 6,000 கோடி டாலராக உயர்த்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இதையடுத்து, ‘தேசிய வேளாண் ஏற்றுமதி வரைவு கொள்கை’ வெளியிடப்பட்டது. அதில், வளர்ந்து வரும் சந்தைகளுக்கு தேவையான புதிய வேளாண் பொருட்களை உருவாக்குதல், அடிப்படை கட்டமைப்பு மற்றும் சரக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் பொருட்கள் ஏற்றுமதியில், மாநில அரசுகளின் பங்களிப்பை அதிகரிப்பதற்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. வர்த்தக கொள்கையை நிலையாக கடைபிடிக்கவும், வேளாண் பொருட்கள் சந்தை குழு சட்டத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவும், வரைவு கொள்கை வகை செய்கிறது.அத்துடன், நில குத்தகை விதிமுறைகளை தளர்த்தவும், வேளாண் பொருட்கள் விற்பனைக்கான சந்தை கட்டணத்தை சீரமைக்கவும், வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், டில்லியில், வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் கூட்டத்தில், சுரேஷ் பிரபு பேசியதாவது: தேசிய வேளாண் ஏற்றுமதி கொள்கை குறித்து, பல்வேறு அமைச்சகங்களுடன் நடைபெற்று வரும் ஆலோசனை, இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. அடுத்த சில நாட்களில், இக்கொள்கைக்கு, மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளிக்கும். இக்கொள்கை அமலுக்கு வரும்பட்சத்தில், வேளாண் துறையின் ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|