பதிவு செய்த நாள்
16 ஜன2020
01:40

மும்பை:கடந்த டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 7.35 சதவீதமாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, ஜனவரியில் பணவீக்கம், 8 சதவீதமாக உயரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டியில் எந்த மாற்றமும் செய்யாது என எதிர்பார்ப்பதாக, எஸ்.பி.ஐ., எகோரேப் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆண்டு அக்டோபரில், சில்லரை விலை பணவீக்கம், 4.62 சதவீதமாக இருந்தது. இதையடுத்து, டிசம்பர் மாத நிதிக் கொள்கை குழு கூட்டத்தில், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை.இந்நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், சில்லரை விலை பணவீக்கம், 7.35 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, ஜனவரியில், 8 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, இந்நிலையில் அடுத்த மாதம், 6ம் தேதி நடைபெற இருக்கும், நிதிக்கொள்கை குழு கூட்டத்திலும், ரிசர்வ் வங்கி, வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், தற்போதைய நிலையே தொடரும் என அறிவிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. கடந்த ஆண்டில், பிப்ரவரி முதல் அக்டோபர் வரையிலான காலத்தில், தொடர்ந்து, ஐந்து முறை வட்டிவிகிதத்தை குறைத்து வந்தது, ரிசர்வ் வங்கி. இக்காலகட்டத்தில் மொத்தம், 1.35 சதவீதம் அளவுக்கு வட்டியை குறைத்து அறிவித்தது.
இருப்பினும், கடந்த டிசம்பர் மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில், வட்டி விகிதத்தில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், நடப்பு, 5.15 சதவீத வட்டியே தொடரும் என அறிவித்தது.
நடப்பு நிதியாண்டில், பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து இருக்கும் என்ற நிலையில், இந்த ஆண்டு முழுவதுமே வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கலாம். நடப்பு ஆண்டு ஜூன், ஜூலை வரை சில்லரை விலை பணவீக்கம், 6 சதவீதம் என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய புள்ளியியல் அலுவலகத்தின் முன்கூட்டிய மதிப்பீடுகள், நடப்பு நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி,5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.உலக வங்கியும், நடப்பு நிதியாண்டில், வளர்ச்சி இதே நிலையில்தான் இருக்கும் என தெரிவித்து உள்ளது. ரிசர்வ் வங்கியும், 5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
குறைவான வளர்ச்சி, அதிகமான பணவீக்கம் ஆகியவை நிலவும் சூழலில், வட்டிவிகிதத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கிக்கு இது ஒரு சோதனையான காலகட்டமே.இவ்வாறு, எஸ்.பி.ஐ., எக்கோரேப் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைவான வளர்ச்சி, அதிகமான பணவீக்கம் ஆகியவை நிலவும் சூழலில், வட்டிவிகிதத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கிக்கு இது ஒரு சோதனையான காலகட்டமே.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|