பதிவு செய்த நாள்
15 அக்2020
22:19

புதுடில்லி:ஆடையிலிருந்து, ஆடம்பர கார்கள் வரை விற்பனை செய்யும், டாடா குழுமம், தற்போது தன்னுடைய மின்னணு வர்த்தகத்தை பலப்படுத்த, ஆன்லைன் சில்லரை விற்பனை நிறுவனங்களை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.ஏற்கனவே, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதன் சில்லரை வணிக விற்பனைக்காக, பல்வேறு நிறுவனங்களை கையகப்படுத்தி வருவதுடன், முதலீடுகளையும் அதிகளவில் ஈர்த்து வருகிறது.
மொத்த விற்பனை
அண்மையில், ரிலையன்ஸ் பியூச்சர் குழுமத்தின் சில்லரை விற்பனை வணிகம், மொத்த விற்பனை வணிகம், மற்றும் கிடங்குகள் வணிகம் ஆகியவற்றை, 24 ஆயிரத்து, 713 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தியது.இந்நிலையில், தற்போது டாடா குழுமம் இத்தகைய முயற்சியில் இறங்கியுள்ளது.டாடா குழுமம்,‘பி டூ பி’ எனும், நிறுவனங்களுக்கிடையேயான வணிகத்தில் ஈடுபட்டிருக்கும், இந்தியா மார்ட் இண்டர்மெஷ் எனும் நிறுவனத்தின் வணிகத்தை கையகப்படுத்த இருப்பதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வருகின்றன.
இதுமட்டுமின்றி,‘பிக்பாஸ்கெட்’ நிறுவனத்தின் பங்குகளை வாங்கி கையகப்படுத்தவும் டாடா குழுமம் முயற்சிப்பதாக சொல்லப்படுகிறது.இந்தியா மார்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, இந்தியாவின் ஆன்லைன்,‘பி டூ பி’ வணிகத்தில், 60 சதவீதம் தன் வசம் இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
1999ம் ஆண்டில் துவக்கப்பட்ட இந்நிறுவனத்திற்கு, நாடு முழுக்க மொத்தம், 84 அலுவலகங்கள் உள்ளன.பிக்பாஸ்கெட், 2011ம் ஆண்டில் துவங்கப்பட்டது. 7,300 கோடி ரூபாய்க்கும் மேல் சந்தை மதிப்பு கொண்டதாக இருக்கிறது.ஆன்லைன் சில்லரை வணிகங்களை வளைப்பதற்கான முயற்சியில் ஒருபக்கம் இறங்கியுள்ள டாடா குழுமம், இன்னொரு பக்கம், மிகப்பெரிய அளவிலான டிஜிட்டல் தளத்தை உருவாக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது.
டாடா குழுமத்தின் அனைத்து வணிகங்களையும், ஒரே ஒரு மெகா செயலியில் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. மேலும், இந்த டிஜிட்டல் தளத்தில், முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளிலும் இறங்கி இருக்கிறது.
ஒரே புள்ளி
டாடாவின் இந்த மெகா செயலியின் மூலம், தனிஷ்க் ஜூவல்லரியில் துவங்கி, டைட்டன் வாட்ச், ஸ்டார் பஜார், ஐ.டி.சி., ஓட்டல்கள், ஸ்டார்பக்ஸ் என அனைத்து வணிகத்தையும் ஒரே புள்ளியில் இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.அமேசான், வால்மார்ட், ரிலையன்ஸ் என, பல பெரிய நிறுவனங்கள், ஆன்லைன் சில்லரை வணிகத்தில் கடும் போட்டியை துவக்கி இருக்கும் நிலையில், தற்போது களத்தில் டாடாவும் குதித்திருக்கிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|