பதிவு செய்த நாள்
03 ஜன2021
21:35

மருத்துவச் செலவுகளுக்கு, குடும்பத்தினரது எதிர்காலத்துக்கு, விபத்துகளுக்கு, இயற்கைப் பேரிடர்களுக்கு எல்லாம் காப்பீடு வந்துவிட்டது. வேலையிழப்பு, வருவாய் இழப்பு ஆகிய சூழ்நிலைகளை எதிர்கொள்ள, ஒரு காப்பீடு இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பவர்களா நீங்கள்? இதோ அதுவும் வந்துவிட்டது.
கொரோனா கொள்ளை நோயும், ஊரடங்கு உத்தரவுகளும் பல நிறுவனங்களை கடுமையாகப் பாதித்துள்ளது. அதனால், ஏராளமான பணிநீக்கங்களும் நடைபெற்றுள்ளன. கடந்த ஆண்டு, ஜனவரி முதல் மார்ச் வரையான நான்காம் காலாண்டில், இந்திய நகர்புறங்களில் வேலையின்மை, 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள், 8.7 சதவீதம் பேர் வேலையற்றிருக்க, பெண்களோ, 10.5 சதவீதம் பேர் வேலையின்மையால் தவிக்கின்றனர்.இது கொரோனாவுக்குச் சற்று முன்பு உள்ள நிலை.
கடந்த, 9 மாதங்களில் நிலைமை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இப்போது தான் படிப்படியாக பல துறைகள் மீண்டு வருகின்றன.இந்நிலையில் தான், காப்பீட்டு நிறுவனங்கள் ஒரு புதிய பாலிசியை அறிமுகம் செய்துள்ளன. அதற்கு, ‘வேலையிழப்பு, வருவாய் இழப்பு காப்பீட்டுப் பாலிசி’ என்று பெயர். பொதுவாக இதுநாள் வரை இந்தக் காப்பீடு தனியாக விற்கப் பட்டதில்லை.
இரண்டு அம்சங்கள்
வேறு பாலிசிகளோடு சேர்ந்தே வழங்கப்பட்டு வந்த இந்தக் காப்பீடு, தற்போது தனியாகவும் விற்கப்படுகிறது. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன.ஒன்று, பணிநீக்கம், ஆட்குறைப்பு, செலவினங்களைக் குறைத்தல் ஆகிய காரணங்களுக்காக, பணியில் இருந்து விலக்கப் படுபவர்களுக்கு உரியது. இவர்கள் வாங்கியிருக்கக்கூடிய பல்வேறு கடன்களின் இ.எம்.ஐ.,யை அடுத்த மூன்று மாதங்களுக்குச் செலுத்துவதற்குத் தேவையான தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.இரண்டாவது, ஏதேனும் அசம்பாவித சம்பவங்களால், பகுதியளவோ, முழுமையாகவோ உடற்குறைபாடு அல்லது மரணமோ நிகழ்ந்துவிட்டால், அந்த பாலிசிதாரருக்கு, அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை, வாராந்திர வருவாய் வழங்கப்படும்.
இந்த பாலிசிகளை, மாத சம்பளதாரர்களும், சுயதொழில் செய்வோரும் வாங்கலாம். பாலிசிக்கு செலுத்தும் பிரிமியத்துக்கு, ‘80 டி பிரிவின்படி வரிவிலக்கும் பெற முடியும்.இந்த காலகட்டத்துக்கு மிகவும்தேவையான பாலிசியாக இது அறிமுகமாகியிருக்கிறது. மூன்று மாதத் தொகையை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற கேள்வி எழத்தான் செய்யும்.
ஆனால், வேலையிழப்பு என்பது திடீர் அதிர்ச்சி. பல நிறுவனங்களில், மூன்று மாதச் சம்பளம் வழங்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுவர். வேறு சில தனியார் நிறுவனங்களில், எந்தவிதமான பணிப் பாதுகாப்பும் இல்லாத நிலையும் உள்ளது.அத்தகையவர்களுக்கு இந்த பாலிசி நிச்சயம் உதவும்.எஸ்.பி.ஐ., ஜெனரல், ஸ்ரீராம் ஜெனரல், யுனிவர்சல் சம்போ, ஆதித்ய பிர்லா ஆகிய நிறுவனங்கள் இந்தப் புதிய வகை பாலிசியை வழங்க முன்வந்துள்ளன.
புத்தாண்டு முற்றிலும் வேறொரு பாணியில் தொடங்கியிருக்கிறது. இந்த ஆண்டு கடைசி வரை, நிரந்தரச் சேமிப்புகளுக்கு கிடைக்கும் வட்டி விகிதம் உயரப் போவதில்லை. பணவீக்க உயர்வால், உங்கள் பணம் வளரும் விகிதத்தைவிட, தேயும் விகிதம் அதிகம். ஒருபக்கம் விலைவாசி உயர்வால், குடும்பச் செலவுகள் மிதமிஞ்சி இருக்கப் போகின்றன. இன்னொரு பக்கம், நிறுவனங்களால், பெரிய சம்பள உயர்வுகளை இந்த ஆண்டு கொடுக்க முடியாது. தேக்கமே நிலவும்.இந்நிலையில், பணத்தைச் சேமியுங்கள், இந்தத் திட்டங்களில் போடுங்கள், அதில் முதலீடு செய்யுங்கள் என்றெல்லாம் ஆலோசனை சொல்வதில் அர்த்தமே இல்லை.
நம்பிக்கை
அதற்கு மாறாக, கூடுதல் நேரம் உழையுங்கள், ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளைப் பாருங்கள், வீட்டில் உள்ள உழைக்கும் தகுதியுள்ளோர் அனைவரையும் வேலை பார்த்து, குடும்ப வருவாய்க்கு பங்களிப்புச் செய்யச் சொல்லுங்கள் என்பதே சரியான ஆலோசனையாக இருக்க முடியும்.இதில், எவருக்கேனும் வேலை போய்விட்டது என்றால், குடும்ப நிலைமையைச் சமாளிக்க, இந்த வேலையின்மை காப்பீடு உதவும். இதனால், பெரிய லாபம் இல்லாமல் இருக்காமல் இருக்கலாம். ஆனால், அலைகடலில் தத்தளிக்கும்போது, பிடித்துக் கொள்ளும் சிறு துரும்பாக, இந்தக் காப்பீடு விளங்கும் என்பதே நம்பிக்கை.
ஆர்.வெங்கடேஷ்
pattamvenkatesh@gmail.com
9841053881
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|