பதிவு செய்த நாள்
22 ஜூலை2011
00:16

மும்பை: ஜே.கே. பேப்பர் நிறுவனம், காகிதங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு, ஒடிசா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் காகித தயாரிப்பு தொழிற்சாலைகள் உள்ளன. காகித தயாரிப்பில், இந்நிறுவனம், 28 சதவீத சந்தை பங்களிப்பை கொண்டுள்ளது. இந்நிறுவனம், ஒடிசாவில் உள்ள அதன் காகித தொழிற்சாலையின் உற்பத்தி திறனை, தற்போதைய ஆண்டுக்கு, 1.25 லட்சம் டன் என்ற அளவிலிருந்து, 1.65 லட்சம் டன்னாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும், இங்கு, ஆண்டுக்கு 2.15 லட்சம் டன் காகிதகூழ் தயாரிக்கும் வகையில், புதிய தொழிற்சாலை ஒன்றையும், சுயதேவைக்காக 55 மெகாவாட் மின் உற்பத்தி திட்டம் ஒன்றையும் தொடங்க உள்ளது.இந்த விரிவாக்க நடவடிக்கைகள் 1,650 கோடி ரூபாய் திட்ட செலவில் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு தேவையான பகுதி நிதியை, திரட்டும் பொருட்டு நிறுவனம், அதன் பங்குதார்களுக்கு, நான்கு பழைய பங்குகளுக்கு, மூன்று புதிய பங்குகள் என்ற விகிதத்தில் உரிமைப் பங்குகளை வெளியிட்டு 246 கோடி ரூபாயை திரட்ட முடிவு செய்துள்ளது என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஹர்ஷ் பட்டி சின்கானியா தெரிவித்தார்.இந்த உரிமைப் பங்கு ஒன்று 42 ரூபாய் என்ற விலையில் (10 ரூபாய் முகமதிப்பு +32 ரூபாய் உயர்மதிப்பு), மொத்தம் 5.86 கோடி பங்குகள் வெளியிடப்பட உள்ளன. உரிமைப் பங்கு வெளியீட்டிற்கான பதிவு தேதி ஜூலை 27. இப்பங்கு வெளியீடு, ஆகஸ்ட் 8ம் தேதி தொடங்கி 23ம் தேதியுடன் நிறைவடைகிறது. தற்போது இந்நிறுவனத்தின் பங்கு ஒன்று, பங்கு சந்தையில், 47 ரூபாய் என்ற அளவில் விலை போய்க் கொண்டுள்ளது.இந்த உரிமைப் பங்கு வெளியீட்டிற்கு பிறகு, நிறுவனத்தின் பங்கு மூலதனம் 78 கோடி ரூபாய் என்ற அளவிலிருந்து, 175 கோடி ரூபாயாக அதிகரிக்கும். நிறுவனத்தின், குஜராத் காகித ஆலையின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 1.39 லட்சம் டன் என்ற அளவில் உள்ளது என, சின்கானியா மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|