பதிவு செய்த நாள்
16 அக்2011
14:10

சென்னை;உள்ளாட்சி தேர்தல் மற்றும் மழைக் காலத்தையொட்டி, சென்னை ஏரியாவில் 40 சதவீதம் கட்டுமானப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மணல் விலை குறைந்துள்ளது.சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நடைபெறும் கட்டுமானப் பணிகளுக்கு, ஒரு நாளைக்கு 9,000 லோடு மணல் தேவை. சென்னைக்கு அருகில் உள்ள மணல் குவாரிகளிலிருந்து போதுமான மணல் கிடைக்காததால், வெளிமாவட்டங்களிலிருந்து மணல் கொண்டு வருவதற்கு செலவு அதிகமாவதால், சென்னையில் ஒரு லோடு (2 யூனிட்) மணல், கடந்த மாதம் வரை 9,000 ரூபாயாகவும், டாரஸ் லாரியில் ஒரு லோடு (4 யூனிட்) மணல் 17 ஆயிரத்திலிருந்து 18 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. இந்நிலையால் தற்போது, ஒரு லோடு (4 யூனிட்) மணல், 12 ஆயிரம் ரூபாயாகக் குறைந்துள்ளது. ஒரு யூனிட் மணல் 4,500 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகக் குறைந்து விட்டது.இது குறித்து, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலினாலும், இனி மழைக்காலம் என்பதாலும், சென்னையில் ஒரு மணி நேரம் மழை பெய்தாலே, பல பகுதிகள் தண்ணீரில் மிதக்கும் நிலை உள்ளதாலும், கட்டுமானப் பணிகள் பல இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு அக்டோபர், நவம்பம், டிசம்பர் மாதங்களில் கட்டுமானப் பணிகள் வெகுவாகக் குறையும் என்றும் பேசப்படுகிறது. இதனால், தற்போது 60 சதவீத கட்டுமானப் பணிகள் தான் நடந்து வருகின்றன. இதனால், மணல் தேவை குறைந்துள்ளதால், மணல் விலையும் குறைந்துவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் பலவேரி, காவாங்கந்தலம் திருவள்ளூர் மாவட்டம் தாராட்சி மணல் குவாரிகளிலிருந்து சென்னைக்கு மணல் கொண்டு வரப்படுகிறது. இக்குவாரிகளிலிருந்து கிடைக்கும் மணல் அழுக்காக இருப்பதால், சிமென்ட் பூச்சு பணிக்கு பயன்படுத்த நன்றாக இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலிருந்து எடுத்து வரும் மணல் நல்ல மணல் என்றாலும், பல்வேறு சிக்கல்களும்,செலவும் அதிகமாகிறது. சென்னையில் கட்டுமானப் பணிகள் குறைந்துள்ள நிலையில், வெளிமாவட்டங்களிலிருந்து மணல் எடுத்து வந்து, விலையை உயர்த்தி விற்றால், பொதுமக்கள் வாங்கமாட்டார்கள் என்பதால், வெளி மாவட்டங்களிலிருந்து மணல் எடுத்து வருவது குறைந்துவிட்டது.அரசு மணல் குவாரிகளில் 2 யூனிட் மணலுக்கு 626 ரூபாயும், 4 யூனிட் மணலுக்கு 1,250 ரூபாயும் கொடுக்கிறோம். இத்துடன், லாரியில் மணல் ஏற்றுவதற்கு 2 யூனிட்டுக்கு 700 ரூபாய் வரையும், 4 யூனிட்டுக்கு 1,100 ரூபாய் வரையும் கூடுதல் செலவு செய்ய வேண்டியுள்ளது. இத்துடன், குவாரிக்கு அருகிலுள்ள கிராமங்களில் உள்ள முக்கிய கட்சிகளின் அரசியல் பிரமுகர்கள் லாரிக்கு,"முன் வரிசை' என்ற பெயரில் "டோக்கன்' விற்பனை செய்வதன் மூலம், ஒரு லாரிக்கு 100 ரூபாய், 200 ரூபாய் வரை பணம் கொடுக்க வேண்டியுள்ளது. குவாரியிலிருந்து மணல் ஏற்றி வரவும் குறைந்தது இரண்டு நாள் வரை காத்திருக்க வேண்டியிருப்பதால், செலவு அதிகமாகிறது. சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படாத வகையில், புதிய மணல் குவாரிகளை அரசு திறந்தால், மணல் ஏற்றிவர லாரிகள் காத்திருக்கும் நேரம் குறையும். மணல் விலையும் குறையும். கட்டடப் பணிகளுக்கு நல்ல மணலும் கிடைக்கும். ஆந்திராவிலிருந்து திருட்டுத்தனமாக கொண்டு வரும் சிலிகான் மணலையும் மக்கள் வாங்க மாட்டார்கள். குவாரிகளிலிருந்து மணல் அள்ளும் சிலர், அருகிலேயே கொட்டி வைத்து, ஒரு லோடு (2 யூனிட்) மணல் 2,000 ரூபாய் வரை விற்கின்றனர். மணலுக்காக லாரிகள் காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக, மணல் லாரி உரிமையாளர்கள் அதிக விலை கொடுத்து இம்மணலை வாங்கி விற்கும் போது, பொதுமக்களிடம் மணல் விலையை உயர்த்தி விற்க வேண்டியுள்ளது.இனி மழைக்காலம் என்பதால், சிலர் மணலை சென்னை நகரத்தில் தேவையான இடங்களில் பதுக்கி வைத்து, பிறகு விலை ஏற்றி விற்கவும் முயற்சிக்கலாம். இவற்றைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்.பொதுமக்களின் நலன் கருதி, இரண்டாவது விற்பனை முழுவதுமாக தடை செய்யப்பட வேண்டும்.இவ்வாறு, மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|