பதிவு செய்த நாள்
18 அக்2011
00:11

மும்பை : நாட்டின் பங்கு வர்த்தகம், வாரத்தின் தொடக்க தினமான திங்கள்கிழமையன்று, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. ஐரோப்பா மற்றும் இதர ஆசிய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், நன்கு இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, பங்குகள் விற்பனை செய்யப்பட்டதால், குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை, மிகவும் குறைந்து காணப்பட்டது. பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், 5,703 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, 15.8 சதவீதம் (4,923 கோடி ரூபாய்) அதிகம். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை, 57 ஆயிரத்து 479 கோடியிலிருந்து, 78 ஆயிரத்து 569 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் லாபம் அதிகரித்துள்ள போதிலும், இதில் பெரும்பகுதி, முதலீடுகள் மற்றும் கருவூல நடவடிக்கைகளின் மூலம் கிடைத்துள்ளது. இதனால், திங்களன்று, இதன் பங்கின் விலை 3.88 சதவீதம் சரிவடைந்து, 833 ரூபாயில் நிலைபெற்றது. நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், எண்ணெய், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம், பொறியியல், மருந்து, உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்திருந்தது. அதேசமயம், வங்கி, நுகர்பொருள்கள், ரியல் எஸ்டேட், மோட்டார் வாகனம், நுகர்வோர் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும்போது, 57.60 புள்ளிகள் குறைந்து, 17,025.09 புள்ளிகளில் நிலை கொண்டது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண் அதிகபட்சமாக 17,188.55 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 16,928.38 புள்ளிகள் வரையிலும் சென்றது. "சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 14.05 புள்ளிகள் சரிவடைந்து, 5,118.25 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,160.20 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,084.50 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|