பதிவு செய்த நாள்
17 டிச2011
01:08

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில், தங்கம் மற்றும் வைரம் ஆகியவற்றின் விலை அதிகரித்ததைத் தொடர்ந்து, நாட்டின், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 15 சதவீதம் வளர்ச்சி காணும் என, நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் ராஜீவ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜீவ் கூறியதாவது:நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாத காலத்தில், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. வரும் மாதங்களிலும், இவற்றின் ஏற்றுமதி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, தங்கம் மற்றும் கச்சா வைரங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து, அவற்றை மதிப்புக் கூட்டப்பட்ட ஆபரணங்களுக்காக ஏற்றுமதி செய்கிறது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான எட்டு மாத காலத்தில், இவற்றின் ஏற்றுமதி, 15.5 சதவீதம் வளர்ச்சியடைந்து, 2,900 கோடி டாலராக (1 லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது. இதே காலத்தில், தங்கம், வைரம் மற்றும் நவரத்தினங்கள் விலை, 12-13 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
நடப்பு முழு நிதியாண்டில், இவற்றின் ஏற்றுமதி, 15 சதவீதம் வளர்ச்சி கண்டு, 4,950 கோடி டாலராக (2 லட்சத்து 47 ஆயிரத்து 500 கோடி ரூபாய்) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த நிதியாண்டில், 4,300 கோடி டாலராக (2 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய்) இருந்தது.மூலப் பொருட்களின் விலை உயர்வு மற்றும் மேற்கத்திய நாடுகளில் தேவைப்பாடு குறைந்துள்ள நிலையிலும், இவற்றின் ஏற்றுமதி மதிப்பின் அடிப்படையில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாட்டின் மொத்த ஆபரணங்கள் ஏற்றுமதியில், ஐக்கிய அரபு நாடுகள் 43 சதவீத பங்களிப்பை கொண்டு முதலிடத்தில் உள்ளன. இதைத் தொடர்ந்து, ஹாங்காங், 30 சதவீத பங்களிப்பும், அமெரிக்கா 17 சதவீத பங்களிப்பையும் கொண்டுள்ளன. மேலும், லத்தீன் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய புதிய சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு ஜெயின் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|