பதிவு செய்த நாள்
04 ஜன2012
01:37

சேலம்:வடமாநிலங்களில் மட்டுமின்றி, தமிழகத்திலும் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ள தால், கடுகிற்கு தேவை அதிகரித்து, அதன் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து ஒரு குவிண்டால் கடுகின் விலை 4,700 ரூபாயாக அதிகரித்துள்ளது. சமையலில், கடுகு முக்கிய பங்கு வகிக்கிறது. நறுமணப் பொருளாகவும், மருத்துவப் பொருளாகவும், கடுகு அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, தமிழகத்துக்கு வடமாநிலங்களில் இருந்தே கடுகு அதிக அளவில் விற்பனைக்கு வருகிறது.
தமிழகத்தின் கடுகு தேவையை, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களே பூர்த்தி செய்கின்றன. ஆனால், கடந்த சில வாரங்களாக அம்மாநிலங்களில் இருந்து, தமிழகத்துக்கு விற்பனைக்கு வரும் கடுகின் வரத்து, 50 சதவீதம் வரை குறைந்துள்ளது.தமிழகத்தை விட பிற மாநிலங்களில், சமையலில் கடுகு எண்ணெய் அதிக அளவில் உபயோகப் படுத்தப்படுகிறது. குளிர் காலங்களில், வட மாநிலத்தவர்களின் உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ளும் வகையில், கடுகு எண்ணெய் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
இதனால், வடமாநில எண்ணெய் ஆலைகள், அதிக அளவில் கடுகை கொள்முதல் செய்து வருகின்றன. வடமாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து கொண்டிருந்த கடுகின் வரத்தில், சரிவு ஏற்பட்டதை அடுத்து, அதை இருப்பு வைத்துள்ள வியாபாரிகள், தங்களின் சுய லாபத்துக்காக கடுகு விலையை உயர்த்தியுள்ளனர்.கடந்த வாரம் வரை மொத்த விலை சந்தையில் குவிண்டால், 3,700 ரூபாய்க்கு விற்ற கடுகு விலை, தற்போது, 4,700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில்லரை விற்பனையில் கிலோ, 40 ரூபாய்க்கு விற்ற கடுகு, 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. வட மாநிலங்களில், குளிர் காலம் முடியும் வரை இதே நிலை தொடரும் என்பதால், தமிழகத்தில் கடுகு விலையில் மேலும் உயர்வு ஏற்படும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.
சேலம் செவ்வாப்பேட்டையை சேர்ந்த மொத்த கடுகு வியாபாரி குமார் கூறியதாவது: தமிழகத்துக்கு தேவையான கடுகை அளித்து வந்த வடமாநில வியாபாரிகள், தற்போது நாங்கள் வழங்கும் ஆர்டரையே எடுக்க மறுக்கின்றனர். கடந்த மாதம் வரையில், தவணை முறையிலும், கடனுக்கும் கடுகை சப்ளை செய்த வியாபாரிகள், தற்போது ரொக்கம் செலுத்தினால் மட்டுமே, கடுகு அனுப்பப்படும், என்கின்றனர்.அதுவும், புதிய விலைப்படி, அதாவது குவிண்டாலுக்கு, 800 ரூபாய் முதல், 1,100 ரூபாய் வரை உயர்த்தி அனுப்ப வேண்டும் என்கின்றனர். அதனால், தற்காலிகமாக கடுகுக்கு ஆர்டர் கொடுப்பதை நிறுத்தி விட்டு,கையிருப்பில் உள்ள கடுகை மட்டும் விற்பனை செய்து வருகிறோம். இவ்வாறு குமார் கூறினார்.
மேலும் விலைவாசி நிலவரம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|