பதிவு செய்த நாள்
21 ஜன2012
00:18

புதுடில்லி:வோடபோன் நிறுவனம் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற மும்பை ஐகோர்ட்டின் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வோடபோன் இண்டர்நேஷனல் ஹோல்டிங்ஸ் நிறுவனம், ஹாங்காங்கை சேர்ந்த ஹட்சிஸன் குழுமத்தின், ஹட்சிஸன் - எஸ்ஸார் நிறுவனத்தின், 67 சதவீத பங்குகளை 2007ம் ஆண்டு மே மாதம் வாங்கியது. 1,120 கோடி டாலர் மதிப்பிலான இந்த பரிவர்த்தனைக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை,வோடபோன் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால், இந்தியாவிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு, வரி விதிப்பு பொருந்தாது என வோடபோன் தெரிவித்தது. இது தொடர்பான வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என தீர்ப்பளித்தது.
இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.எச்.கபாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மும்பை ஐகோர்ட்டின் உத்தரவை தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:இந்தியாவிற்கு வெளியே, பதிவு செய்த இரண்டு நிறுவனங்களுக்குள் நடைபெற்ற பரிவர்த்தனை என்பதால், அது வருமான வரித்துறையின் சட்ட வரையறைக்கு உட்படாது. எனவே, இந்த பரிவர்த்தனை, வருமான வரிச் சட்டம் 163வது பிரிவின் கீழ் வராது.இவ்வழக்கு தொடர்பாக வோடபோன் நிறுவனம் டெபாசிட் செய்துள்ள 2,500 கோடி ரூபாயை இரண்டு மாதங்களுக்குள், 4 சதவீத வட்டியுடன் வருமான வரித்துறை வழங்க வேண்டும்.
மேலும், வோடபோன் சார்பில் சுப்ரீம் கோர்ட் பதிவாளரிடம் வழங்கப்பட்ட 8,500 கோடி ரூபாய் வங்கி உத்தரவாதத்தையும், ஒரு மாதத்திற்குள் திரும்ப அளிக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு குறித்து, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்துடன் அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித், தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பின்பே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|