பதிவு செய்த நாள்
04 பிப்2012
00:12

ரயில்வே அமைச்சகம், வரும் 2012-13ம் நிதி ஆண்டில், 9,079 கோடி ரூபாய் மதிப்பிற்கான திட்டச் செலவை குறைக்க உள்ளதாக தெரியவந்துள்ளது.சிறப்பான அளவில் லாபம் ஈட்டி வரும் பொதுத்துறை நிறுவனங்கள், வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக அளவில் செலவிட்டு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துணைபுரிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரயில்வே அமைச்சகம், அதன் திட்ட செலவினங்களை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.அதிகரித்து வரும் செலவினங்கள், இலக்கை எட்ட முடியாத அளவிற்கு வருவாய் இல்லாதது போன்றவற்றால், ரயில்வே அமைச்சகம் இத்தகைய முடிவிற்கு வந்துள்ளதாக, இந்த அமைச்சகத்தின் உயரதிகாரிகள் தெரிவித்தனர்சர்வதேச அளவில், கடந்த 2008ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையிலும், இந்திய ரயில்வே துறை 1,000 கோடி ரூபாய் அளவிற்குத்தான் திட்டச் செலவுகளை குறைத்தது.
வருவாய் குறைந்ததால், கடந்த சில ஆண்டுகளில் ரயில்வே பட்ஜெட் அறிவிப்புகளில், 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டச் செலவினங்கள் குறைக்கப்பட்டன.ஆனால், வரும் நிதி ஆண்டில் தான், ரயில்வே அமைச்சகம், இதுவரை இல்லாத அளவில், அதன் திட்டச் செலவினத்தில் 16 சதவீத அளவிற்கு (9,079 கோடி ரூபாய்) குறைக்க உள்ளது. எனினும், இது குறித்த இறுதி விவரம், வரும் ரயில்வே பட்ஜெட்டில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ரயில்வே துறை செயல்படுத்த உள்ள திட்டங்கள் குறையும் என்பதால், அவற்றுக்காக, இந்தியன் ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்திடம் இருந்து பெறும் கடனும் 4,800 கோடி ரூபாய் அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பு 2011-12ம் நிதி ஆண்டின் தொடக்கத்தில், ரயில்வே அமைச்சகம் பல்வேறு நிதியாதாரங்கள் வாயிலாக, 57ஆயிரத்து 630 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்திருந்தது.
இதற்காக, உள்வள நிதியாதாரங்கள் மூலம் 14 ஆயிரத்து 219 கோடி ரூபாயையும், பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு திட்டங்கள் வாயிலாக 1,776 கோடி ரூபாயையும் மற்றும் மத்திய அரசிடமிருந்து பெறும் 20 ஆயிரம் கோடி ரூபாயையும் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. மேலும், டீசல் தீர்வை மூலம் 1,041 கோடி ரூபாயும், இதர கடன்கள் வாயிலாக 20 ஆயிரத்து 594 கோடி ரூபாயும் திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.இதன்படி, சென்ற நவம்பர் வரை, ரயில்வே துறை, அதன் திட்டச் செலவில் 27 ஆயிரத்து 964 கோடி ரூபாயை செலவிட்டுள்ளது. இது, பட்ஜெட் வருவாய் மதிப்பீட்டில் 48.5 சதவீதமாகவும், மறுமதிப்பீட்டில் 58 சதவீதமாகவும் உள்ளது.
ரயில்வே ஊழியர்களின் ஊதியச் செலவு உயர்ந்துள்ளதாலும், எரிபொருள் மற்றும் திட்டமிடப்படாத செலவினங்கள் அதிகரித்துள்ளதாலும், ரயில்வே துறையின் நடைமுறை செலவினங்கள் 5,138 கோடி ரூபாய் அளவிற்கு உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இது குறித்து ரயில்வே உயரதிகாரி மேலும் கூறுகையில்,"முன்னுரிமை திட்டங்களை தேர்ந்தெடுத்து அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது' என்றார்.
ரயில்வே நடைமுறை செலவினத்தில் கூடுதலாக 1,139 கோடி ரூபாய் செலவாகும் என மறுமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. வரும் 2012-13ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட்டில், ரயில்வே கட்டணங்கள் உயரவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|