பதிவு செய்த நாள்
14 பிப்2012
01:49

உள்நாட்டில், கார்களுக்கான தேவையை விட, உற்பத்தி பன்மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், கார் விற்பனை வளர்ச்சியில் சரிவு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.கடந்த இரண்டாண்டுகளாக, உள்நாட்டில் கார் விற்பனை வளர்ச்சி, 30 சதவீதம் என்றளவில் இருந்தது. இந்நிலையில், உள்நாட்டில் கார் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பல நிறுவனங்கள், அவற்றின் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், ஒட்டுமொத்த அளவில், 600 கோடி டாலரை (30 ஆயிரம் கோடி ரூபாய்) முதலீடு செய்துள்ளன.
மாருதி சுசூகி இந்தியா:இதையடுத்து, நாட்டின் கார் உற்பத்தித் திறன்,அடுத்த சில ஆண்டுகளில், ஆண்டுக்கு, 60 லட்சத்துக்கும் அதிகமாக உயரும். ஆக, கார்களுக்கான தேவையை விட, உற்பத்தி, 40 சதவீதம் அதிகரிக்கும்.இந்தியாவில், கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், கடந்த 2010ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், 39 கோடி டாலரை (1,950 கோடி ரூபாய்) முதலீடு செய்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் கார் உற்பத்தித் திறன் கூடுதலாக ஆண்டுக்கு, 2.50 லட்சம் என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.
கடந்த 2010-11ம் நிதியாண்டில், இந்தியாவில், 25 லட்சம் கார்கள் விற்பனையாகி உள்ளன. இது, அதற்கு முந்தைய இரண்டு நிதியாண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 63 சதவீதம் (10 லட்சம் கார்கள்) அதிகமாகும்.நடப்பு 2011-12ம் நிதியாண்டில், உள்நாட்டில், கார்கள் விற்பனை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத சரிவு நிலையாகும். பல கார் தயாரிப்பு நிறுவனங்கள், தேவைக்கும் அதிகமாக, கார்களை உற்பத்தி செய்துள்ளன. ஆனால், அந்தளவிற்கு கார்களுக்கு தேவையில்லை என மதிப்பிடப்பட்டுள்ளது.
உற்பத்தித் திறன்:இதுகுறித்து மாருதி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா கூறியதாவது:உள்நாட்டில், கார்கள் உற்பத்தி, தேவைக்கும் அதிகமாக உள்ளது. பல நிறுவனங்களின் உற்பத்தித் திறன், பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், கார் தயாரிப்பு நிறுவனங்கள், போட்டியின் காரணமாக, குறைந்த லாப விகிதத்தில், கார்களை விற்பனை செய்து வருகின்றன. அடுத்த ஒரு சில ஆண்டுகளில், கார்கள் உற்பத்தித்திறன், தேவையை விட, 30-40 சதவீதம் அதிகமாக இருக்கும். நடப்பு நிதியாண்டில், கார் விற்பனை, 11 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு பார்கவா கூறினார்.
"வரும் மார்ச் மாதத்துடன் நிறைவடையும் நிதியாண்டில், இந்தியாவில், கார்கள் விற்பனை, 25 லட்சத்திற்கும் குறைவாக தான் இருக்கும் என, இந்திய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. விற்பனை குறைவிற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், வங்கிகளுக்கான வட்டி விகிதம், 13 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர, பெட்ரோல் மற்றும் மூலப் பொருட்களின் விலை உயர்வும், கார் விற்பனை வளர்ச்சியை வெகுவாக குறைத்துள்ளது.
தற்போது, உள்நாட்டில் கார் தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தித் திறன், 45 லட்சம் என்றளவில் உள்ளது. இது, அடுத்த சில ஆண்டுகளில், ஆண்டுக்கு, 60 லட்சம் என்ற எண்ணிக்கையில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கார் ஏற்றுமதி :கார் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது என்றாலும், நடப்பு நிதியாண்டில், 5 லட்சத்து 50 ஆயிரம் கார்கள் மட்டுமே ஏற்றுமதியாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரப்பர், அலுமினியம், உருக்கு உள்ளிட்ட பல மூலப் பொருட்களின் விலை உயர்ந்து வரும் அதே நேரத்தில், போட்டியின் காரணமாக, கார் தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு சலுகை திட்டங்களுடன் கார்களை விற்பனை செய்து வருவதால், இந்நிறுவனங்களின் லாப வரம்பு மிகவும் குறைந்து போயுள்ளது.
டொயோட்டா மோட்டார் கார்ப்பரேஷன் நிறுவனம், அதன் கார் உற்பத்தித் திறனை இரண்டு மடங்கு அதிகரிக்கும் வகையில், 22 கோடி டாலரை முதலீடு செய்வதாக கடந்த ஜூலை மாதம் அறிவித்தது. இதையடுத்து, வரும் 2013ம் ஆண்டில், இதன் கார் உற்பத்தி திறன், 3 லட்சத்து 10 ஆயிரம் என்ற எண்ணிக்கையாக அதிகரிக்கும். இதேபோன்று, போர்டு மோட்டார் கம்பெனி, 90 கோடி டாலர் முதலீட்டில், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, இதன் கார் உற்பத்தித் திறன், 6 லட்சமாக அதிகரிக்கும்.
முதலீடு:ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த 2011ம் ஆண்டில், இந்தியாவில், 1 லட்சத்து 11 ஆயிரத்து 510 கார்களை விற்பனை செய்துள்ளது. இது, 2010ம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட விற்பனையை விட, 700 கார்கள் அதிகமாகும். இந்நிறுவனம், அதன் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் வகையில், 50 கோடி டாலரை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் கார் உற்பத்தித் திறன், 4 லட்சத்திற்கும் அதிகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், ஏற்றுமதி நோக்குடன், இந்தியாவில் தொழிற்சாலையை கொண்டு செயல்பட்டு வரும், ரெனால்ட் நிசான் நிறுவனம், அதன் கார் உற்பத்தித் திறனை, இரண்டு மடங்கு அதிகரித்து, 4 லட்சமாக உயர்த்தும் வகையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில், இந்தியாவில், கார் உற்பத்தி தேவையை விட அதிகரித்துள்ளது. இதனால், இனி வரும் ஆண்டுகளில், கார்களின் விற்பனை வளர்ச்சி குறையும் என, இத்துறையைச் சேர்ந்த பல ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|