பதிவு செய்த நாள்
19 பிப்2012
02:02

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை அழித்து, செங்கல் சூளைகள் அமைப்பது ஆண்டுக்காண்டு அதிகரித்து வருவதால், மண்ணின் உயிர் தன்மை பாதிக்கப்பட்டு, வரும் காலங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்த பரப்பான, 15 ஆயிரத்து, 143 சதுர கி.மீ., ஒரு லட்சத்து, 97 ஆயிரம் ஹெக்டேரில் வேளாண் பயிர்களும், 50 ஆயிரம் ஹெக்டேரில் தோட்டக்கலை பயிர்களும் சாகுபடி செய்யப்படுகிறது.
குறிப்பாக நெல், 27 ஆயிரம் ஹெக்டேரிலும், சிறுதானியங்கள், 87 ஆயிரம் ஹெக்டேரிலும், எண்ணைய் வித்து பயிர், 40 ஆயிரம் ஹெக்டேரிலும், தென்னை, 12 ஆயிரம் ஹெக்டேரிலும், மா, 33 ஆயிரம் ஹெக்டேரிலும், மலர் பயிர், 10 ஆயிரம் ஹெக்டேரிலும் சாகுபடி செய்யப்படுகிறது. மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுபடுகை பகுதியில் மட்டும் மூன்று போகம் சாகுபடி நடக்கிறது. மற்ற இடங்களில் மழை பெய்வதை பொறுத்து விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த நான்காண்டுக்கு முன், சென்னை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரில் கட்டடங்கள் கட்ட செங்கலுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டதால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பலர் விவசாய நிலங்களை அழித்து செங்கல் சூளைகளை வைத்தனர்.
விவசாயத்தில் கிடைத்த லாபத்தை விட, பல மடங்கு லாபம் செங்கல் சூளையில் கிடைத்ததால், ஆண்டுக்காண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செங்கல் சூளை அமைப்பது அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில், களிமண்ணும் மற்றும் மேட்டுபாங்கான நிலத்தில் செம்மண்ணும் உள்ளது. இந்த வகை மண் செங்கல் செய்வதற்கு ஏற்றதாக உள்ளதால் பல விவசாயிகள், தங்களது விவசாய நிலத்தில் பயிர் செய்வதற்கு பதிலாக செங்கல் சூளைகளை அமைத்து வருகின்றனர்.செங்கல் செய்வதற்கு தேவையான களிமண்ணை அருகில் உள்ள ஏரிகளில் இருந்தும் செம்மண்ணை மற்ற இடங்களில் உள்ள நிலங்களில் இருந்தும் எடுத்து உபயோகித்து வருகின்றனர். இவ்வாறு நிலத்தில் உள்ள செம்மண் தோண்டி எடுக்கும் போது, மண்ணின் தன்மை முற்றிலும் மாறிவிடுகிறது.
நிலத்தின் மேல்பகுதியில் உள்ள மண்ணில் உள்ள தாது உப்புகள் மற்றும் உயிர் தன்மை மாறிவிடுதால் அந்த நிலத்தில் அதன் பிறகு எந்த பயிரும் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது கிடைக்கும் பணத்துக்கு ஆசைப்பட்டு பல விவசாயிகள் இதில் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.செங்கல் சூளை எரியூட்டும் போது, அதிலிருந்து வெளியாகும் வெப்பத்தால் சூளை அமைந்துள்ள பகுதியில், 300 அடி தூரம் உள்ள நிலங்களின் உயிர் தன்மையும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளிலும் விவசாயம் கேள்விக்குறியாகியுள்ளது.
காவேரிப்பட்டணம், நெடுங்கல், பெண்ணேஸ்வரடம், கிருஷ்ணகிரி, ஜெகதேவி, போச்சம்பள்ளி, அரசம்பட்டி, மத்தூர், பனகமுட்லு, வேப்பனப்பள்ளி, பர்கூர், ராயக்கோட்டை, வரட்டனப்பள்ளி ஆகிய பகுதிகளில் தற்போது விவசாய நிலங்களை அழித்து செங்கல் அறுக்கும் சூளைகள் அமைப்பது அதிகரித்துள்ளது. இதன்படி மாவட்டத்தில் ஏற்கனவே உள்ள செங்கல் சூளைகள் போக தற்போது புதியதாக, 2,000 செங்கல் சூளைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த பகுதிகளில், வரும் காலங்களில் விவசாயம் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும், செங்கல் சூளைக்கு அதிகளவில் மரங்களை வெட்டி பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலும் பாதிப்படைகிறது. எனவே செங்கல் சூளை அமைக்க மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என, விவசாய ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|