பதிவு செய்த நாள்
19 பிப்2012
02:10

நாட்டின் பங்கு வர்த்தகம், தொடர்ந்து நடப்பு வாரத்திலும் சிறப்பாக இருந்தது. இந்தியாவில் மட்டுமின்றி, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம், ஒட்டு மொத்த அளவில் நன்கு உள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள்:கடந்த பல மாதங்களாக, பங்குச் சந்தையில் இருந்து ஒதுங்கியிருந்த முதலீட்டாளர்கள், மீண்டும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர். அன்னிய நிதி நிறுவனங்களும், இந்திய பங்குச் சந்தைகளில் படிப்படியாக முதலீட்டை அதிகரித்து வருகின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு பிப்ரவரி மாதத்தில், இதுவரையிலுமாக, அன்னிய நிதி நிறுவனங்கள் 11 ஆயிரத்து 612 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளன. இந்த முதலீடு, சென்ற ஜனவரி மாதத்தில், 10 ஆயிரத்து 358 கோடி ரூபாயாக இருந்தது. ஆக, கடந்த இரு மாதங்களாக, அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில் செய்யும் முதலீடு உயர்ந்து வருகிறது.
நடப்பாண்டு ஜனவரி, பிப்ரவரி ஆகிய இரு மாதங்களில், பங்கு வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால், முதலீட்டாளர்கள் கொண்டுள்ள, நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு உயர்ந்துள்ளது.'சென்செக்ஸ்' :சென்ற வெள்ளிக்கிழமையன்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 135 புள்ளிகள் அதிகரித்து, 18,289 புள்ளிகளிலும், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் 'நிப்டி' 42 புள்ளிகள் உயர்ந்து, 5,564 புள்ளிகளிலும் நிலை பெற்றன. பங்கு வர்த்தகம் சிறப்பாக உள்ளதால், மேற்கண்ட இரண்டு பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண், கடந்த ஏழு மாதங்களுக்குப் பிறகு, மீண்டும் பழைய உச்சத்தைத் தொட்டுள்ளன. ஆக, நடப்பு வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 517 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
நாட்டின் பங்கு வர்த்தகம் நன்கு உள்ளதற்கு, பல்வேறு காரணங்கள் உள்ளன. இதில், குறிப்பாக டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜாகுவார், லேண்ட் ரோவர் பிராண்டுகளின் வெளிநாட்டு, கார் விற்பனை அதிகரித்ததையடுத்து, இந்நிறுவனத்தின் லாபம் கூடியுள்ளது. இது, சந்தைக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது. ஏனெனில், லேண்ட் ரோவர் காரின் விலை மிகவும் அதிகமானது. இதன் விற்பனை அதிகரித்துள்ளது என்பது, மக்களிடம் பணப்புழக்கம் உயர்ந்து வருகிறது என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளது. இதையடுத்து, இந்தியாவிலும் விலை உயர்ந்த கார்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பாக, டாட்டா குழுமம், லேண்ட் ரோவர் பிராண்டை கையகப்படுத்தியது. அப்போது, டாட்டா நிறுவனத்தின் இந்த முதலீடு சரியானது தானா என்று பலராலும்பேசப்பட்டது. ஆனால், இன்று இந்த பிராண்டுகள் தான், டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தின் லாப வரம்பைக் கூட்டி வருகிறது. ஆனால், இந்தியாவில், இந்நிறுவனத்தின் கார் விற்பனை அந்த அளவிற்கு உற்சாகம் அளிப்பதாக இல்லை.
மேலும், உள்நாட்டில், பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வங்கி, மோட்டார் வாகனம், வீட்டு வசதி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்குத் தேவை அதிகரித்து வருகிறது.
அன்னிய முதலீடும் உயர்ந்து வருகிறது. இது போன்ற பல காரணங்களால், பங்கு வர்த்தகம் நன்கு உள்ளது. உணவு தானிய உற்பத்தி:பங்கு சந்தை உயர்விற்கு, பல்வேறு சாதகமான அம்சங்கள் உள்ள நிலையில், நடப்பு ஆண்டில், நாட்டின் உணவு தானியங்கள் உற்பத்தி, 25 கோடி டன்னை தாண்டும் என அரசு அறிவித்துள்ளது. இது, நிச்சயம் உணவுப் பொருட்களின் விலையைக் குறைக்க உதவும். மத்திய மற்றும் மாநில அரசுகள், சிறந்த அளவில் சேமிப்புக் கிடங்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால், உணவுப் பொருட்களின் விலையை அதிக ஏற்றம் இறக்கம் இன்றி பார்த்துக் கொள்ள முடியும்.என்ன பங்குகள் வாங்கலாம்?நுகர்பொருட்கள் தயாரிப்புத் துறைக்கு, வளமான எதிர்காலம் உள்ளது. இத்துறையின் வளர்ச்சியும் நன்கு உள்ளது. எனவே, இத்துறை நிறுவனப் பங்குகளை வாங்கி வைத்திருந்தால், அது நீண்ட கால அடிப்படையில் பலன் அளிக்கும்.
காலாண்டு முடிவுகள்:டாட்டா மோட்டார்ஸ், தாமஸ் குக், கிளாக்ஸோ ஆகிய நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட, சிறப்பான அளவில் உயர்ந்துள்ளன.
புதிய வெளியீடு:முன்பேர வர்த்தகத்தில் ஈடுபட்டுவரும், மல்டி கமாடிட்டி எக்சேஞ்ச் (எம்.சி.எக்ஸ்) நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, வரும் 22ம் தேதி துவங்கி 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இந் நிறுவனம் பங்கின் விலையை, 860 - 1,032 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இப்பங்கு வெளியீட்டின் மூலம், இந் நிறுவனம் 565 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. இது, நடப்பு 2012ம் ஆண்டின் முதல் பங்கு வெளியீடாகும். இதன் பங்குகளில் முதலீடு செய்யலாம்.தங்கம் இறக்குமதி:தங்கத்தின் விலை பெரிய அளவில் குறையவில்லை என்றாலும், இறக்குமதி நான்காவது காலாண்டில், 44 சதவீதம் குறைந்துள்ளது.
பங்கு வர்த்தகம் சூடுபிடித்துள்ளதால், பல முதலீட்டாளர்கள், தங்கத்திற்கு பதிலாக, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யத் தவங்கியுள்ளனர். இதனால், தங்கத்தின் விலை மேலும் சிறிது குறைய வாய்ப்புள்ளது.வரும் வாரம் எப்படி இருக்கும்?கடந்த வாரங்களைப் போன்று, வரும் வாரத்திலும் பங்கு வர்த்தகம் சூடுபிடித்துக் காணப்படும். இந்த நிலை, மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் வரை தொடரும் என எதிர்பார்க்கலாம். அதன் பின், பட்ஜெட் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்து, பங்கு வர்த்தகம் இருக்கும். -&சேதுராமன் சாத்தப்பன்& -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|