பதிவு செய்த நாள்
08 மார்2012
11:56

மதுரை : சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய்க்கு பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடையில் லிட்டர் ரூ.14 க்கு விற்கப்படும் மண்ணெண்ணெய் கள்ளச்சந்தையில் ரூ.60 க்கு விற்கப்படுகிறது.
கடந்த ஜனவரி முதல் சமையல் காஸ் தட்டுப்பாடு நிலவுகிறது.நேற்றைய நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் மட்டும் 1.90 லட்சம் பேர் "காஸ்' பெற பதிவு செய்துள்ளனர். இதை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.800 முதல் 1000 வரை விற்கப்பட்டது. திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் ரூ.1200 வரை விற்கப்பட்டது. தனியார் சிலர் கிலோ ரூ.70 முதல் ரூ.80 க்கு காலி சிலிண்டர்களில் ஏற்றித்தந்தனர்.
மதுரை மாவட்டத்தில் எட்டரை லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில் ஆறரை லட்சம் பேர் காஸ் இணைப்புகள் வைத்துள்ளனர். (இதில் ஒன்றரை லட்சம் பேர் அரசின் இலவச காஸ் இணைப்பை பெற்றவர்கள்). தற்போது டீலர்களிடம் சமையல் "காஸ் சிலிண்டர்' ஸ்டாக் இல்லாததால், மக்கள் வேறு வழியின்றி மண்ணெண்ணெயை நாடுகின்றனர். சமையல் காஸ் இரு சிலிண்டர் இணைப்பு உள்ளவர்களுக்கு ரேஷன் மண்ணெண்ணெய் கிடையாது. ஒரு இணைப்பு கார்டுதாரர்களுக்கு 3 லிட்டரும், இணைப்பே இல்லாதவருக்கு 8 லிட்டர் மண்ணெண்ணெயும் வழங்கப்படும். ஆனால் பலர் ரேஷன் கடைகளில் காஸ் இணைப்பு இல்லை என தவறான தகவலை தந்து தொடர்ந்து மண்ணெண்ணெய் பெறுகின்றனர். ரேஷனில் லிட்டர் ரூ.14 க்கு வாங்கி சிலர் கள்ளச்சந்தையில் விற்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக அதை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்குகின்றனர். இதனால் பிளாக்கில் மண்ணெண்ணெய் லிட்டர் ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களாக மாவட்டங்களுக்கு வழங்கப்பட்ட மண்ணெண்ணெயின் அளவு 75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திற்கு கடந்த மாதம் 2,364 கிலோ லிட்டரே வழங்கப்பட்டது. தற்போது சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக மண்ணெண்ணெய் கிடைப்பதிலும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதே நிலை தென்மாவட்டங்கள் முழுதும் நீடிக்கிறது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|