பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:29

பனமரத்துப்பட்டி:அடிக்கடி ஏற்படும் மின் தடையால், கட்டுமான பணிக்கு பயன்படும் கருங்கல் ஜல்லி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், அதன் விலை உயர வாய்ப்புள்ளது.சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பகுதியில், கெஜ்ஜல்நாயகன்பட்டி, பாரப்பட்டி, சந்தியூர், கோம்பைக்காடு, பொய்மான் கரடு உள்ளிட்ட இடங்களில், கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு, கப்பி சாலை, வீட்டு அடித்தளம் அமைக்கப் பயன்படும் 53 எம்.எம். கருங்கல் ஜல்லி, அடுக்குமாடி கட்டடம் கட்டவும், கான்கிரீட் சாலை அமைக்கவும் தேவைப்படும் 20 எம்.எம். ஜல்லி, தார்ச்சாலை பணிக்குப் பயன்படும் 12 எம்.எம். ஜல்லி, ஹலோ பிரிக்ஸ் கல் தயாரிக்கப் பயன்படும் 6 எம்.எம்., ஜல்லி சிப்ஸ், பிளை ஆஷ் பிரிக்ஸ் கல் தயாரிக்கத் தேவைப்படும் பவுடர் ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.இங்கு உற்பத்தி செய்யப்படும் ஒரு யூனிட் 53 எம்.எம்., 40 எம்.எம், 12 எம்.எம்., ஜல்லி தலா, 1,400 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 20 எம்.எம்., ஜல்லி 2,100 ரூபாய்க்கும், பவுடர், 1,000 ரூபாய்க்கும், கிரஷர் மணல், 1,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஜல்லிக் கற்கள் மற்றும் பவுடர்கள், சேலம், விழுப்புரம், சிதம்பரம், நெய்வேலி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், மின் தடையால் கடந்த சில மாதங்களாக சிறிய கிரஷர்களில் ஜல்லி உற்பத்தி, கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர் வைத்துள்ள ஒரு சில பெரிய கிரஷர்களில் மட்டும், ஜல்லி உற்பத்தி செய்யப்படுகிறது.தற்போது, அரசு சார்பில் மேற்கொள்ளப்படும் கான்கிரீட் மற்றும் தார் சாலை, பள்ளி கட்டடம், பொதுக் கழிவறை, பசுமை வீடுகள் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்நிலையில், மின் தடை காரணமாக, ஜல்லி உற்பத்தி குறைந்ததால், ஜல்லிக் கற்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் கட்டட உரிமையாளர்கள், அரசு பணி மேற்கொள்ளும் கான்ட்ராக்டர்கள், பிளை ஆஷ் பிரிக்ஸ் கல், ஹலோ பிளாக் கல் தயாரிக்கும் நிறுவனங்கள், ஜல்லி கற்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, கான்கிரீட் அமைக்கப் பயன்படும், 20 எம்.எம்., ஜல்லி, பிளை ஆஷ் பிரிக்ஸ் கல் தயாரிக்க உதவும் பவுடர், சிப்ஸ் ஜல்லிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஜல்லிகள் விலை உயரும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, கிரஷர் மேலாளர் ஒருவர் கூறியதாவது:மின்சாரம் மூலம் ஒரு யூனிட் ஜல்லி உற்பத்தி செய்ய, 18 ரூபாய் வரை செலவாகிறது. மின் தடையால், ஜெனரேட்டருக்கு டீசல் போட்டு ஜல்லி உற்பத்தி செய்வதால், ஒரு யூனிட்டுக்கு 44 ரூபாய் வரை செலவாகிறது. மின் தடை தொடரும் பட்சத்தில், ஜல்லி விலையை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|