பதிவு செய்த நாள்
01 ஏப்2012
00:32

நடப்பு வாரத்தில், நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. குறிப்பாக, செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு தினங்களில் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. ஆனால், திங்கள், புதன், வியாழன் ஆகிய மூன்று தினங்களில் வர்த்தகம் மிகவும் சுணக்கமாக இருந்தது.ஒட்டு மொத்த அளவில் நடப்பு வாரத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 351 புள்ளிகள் அதிகரித்து, வார இறுதியில், 17,404 புள்ளிகளில் நிலை பெற்றது.மத்திய பட்ஜெட் அறிவிப்புக்குப் பிறகு, பங்கு வியாபாரம் மிகவும் சுணக்கமாகவே உள்ளது. உற்பத்தி மற்றும் சேவை வரி அதிகரிப்பால், பங்கு வர்த்தகம் விறுவிறுப்பு இல்லாமல் இருந்தது.
இந்நிலையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள், அன்னிய நிதி நிறுவனங்களின் பங்கேற்பு ஆவணங்கள் (பார்டிசிபேட்டரி நோட்ஸ்) மூலம், இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு மேற்கொண்டு வந்தனர்.
அன்னிய நிதி நிறுவனங்கள்:இந்த முதலீடு மீது வரி விதிக்கப்படும் என்ற நிலைப்பாட்டால், இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து போனது. இதன் காரணமாகவே, புதன், வியாழன் ஆகிய இரு தினங்களில் பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மிகவும் சரிவடைந்தது.
இந்நிலையில், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 'பங்கேற்பு ஆவணங்கள் வாயிலாக, இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொள்ளப்படும் முதலீட்டிற்கு வரி விதிக்கப்படமாட்டாது' என அறிவித்தார்.
மேலும், சென்ற பிப்ரவரி மாதத்தில், நாட்டின் முக்கிய எட்டு துறைகளின் உற்பத்தி வளர்ச்சி, கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவிற்கு, 6.8 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது என்ற செய்தியாலும் வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகம் மிகவும் சூடுபிடித்தது. அன்றைய தினம், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும் பங்கு வியாபாரம் நன்கு இருந்தது. இது போன்ற பல சாதகமான அம்சங்களால், வாரத்தின் கடைசி வர்த்தக தினத்தில், எண்ணெய், எரிவாயு, வங்கி, ரியல் எஸ்டேட், உலோகம், மோட்டார் வாகனம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கைமாறின.
நிதியாண்டு:நேற்றுடன் நிறைவடைந்த 2011-12ம் நிதியாண்டை பொறுத்த வரையில், பங்குச் சந்தையில் கரடியின் பிடியே மேலோங்கி இருந்தது. சென்ற நிதியாண்டில் மட்டும், 'சென்செக்ஸ்' 2,000 புள்ளிகளை இழந்துள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில், 20,000 புள்ளிகளில் இருந்த 'சென்செக்ஸ்' ஆண்டின் இறுதியில், 17,400 புள்ளிகளாக சரிவடைந்தது. ஆக, இந்த நிதியாண்டில் 'சென்செக்ஸ்' 10.5 சதவீத இழப்பைச் சந்தித்தது. வர்த்தகத்தின் இடையே, 15,000 புள்ளிகள் வரையில் இறக்கத்தையும் கண்டது. ஒட்டு மொத்த அளவில், முதலீட்டாளர்கள் கொண்டுள்ள பங்குகளின் சந்தை மதிப்பு 6.40 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு குறைந்து போனது.
தங்கம், வெள்ளி:சென்ற நிதியாண்டில், தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய மதிப்பு மிகு உலோகங்களின் விலை மிகவும் அதிகரித்திருந்தது. குறிப்பாக, சென்ற 2011ம் ஆண்டு, ஏப்ரல் மாதத்தில், ஒரு கிலோ வெள்ளியின் விலை வரலாறு காணாத அளவிற்கு, 75 ஆயிரம் ரூபாய் வரை சென்றது. இதே ஆண்டு, நவம்பர் மாதத்தில், 10 கிராம் தங்கத்தின் விலை, 29 ஆயிரம் ரூபாய் வரை சென்றது.ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட கடன் பிரச்னை, அமெரிக்க பொருளாதாரத்தின் தெளிவற்ற நிலை போன்றவற்றால் சர்வதேச அளவிலும் பங்கு வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. அன்னியச் செலாவணி வரத்து குறைந்து போனது, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகரிப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்திருந்தது போன்றவற்றால், டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு, அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்தது.
நடப்பு வாரத்தில், கல்விச் சேவையில் ஈடுபட்டு வரும் எம்.டி.எஜுகேர் நிறுவனம் பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களமிறங்கியது. இந்நிறுவனம், பங்கு ஒன்றை 74-80 ரூபாயில் வெளியிட்டது. இதன் பங்கு வெளியீடு, சென்ற மாதம் 27ம் தேதி தொடங்கி 29ம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் பங்குகள் வேண்டி, 5 மடங்கிற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் வந்தன. இவ்வெளியீட்டின் வாயிலாக, இந்நிறுவனம் 35 கோடி ரூபாயை திரட்டிக் கொள்ள உள்ளது.
இதன் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும்போது, வெளியீட்டு விலையை விட அதிகரிக்கும் நிலையில், மேலும் பல நிறுவனங்கள் மூலதனச் சந்தையில் களமிறங்க வாய்ப்புள்ளது.பொதுத் துறை நிறுவனங்கள்:மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள, குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் வாயிலாக, 30 ஆயிரம் கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுள்ளது. ஆனால், சென்ற நிதியாண்டில், பங்கு வர்த்தகம் நன்கு இல்லாததால், மத்திய அரசால், பொதுத் துறை நிறுவனப் பங்குகள் விற்பனையில் மூலம் திரட்ட திட்டமிடப்பட்டிருந்த, 40 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கு எட்டப்படவில்லை.
வரும் வாரம் எப்படி?சென்ற வெள்ளிக்கிழமை பங்கு வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சர்வதேச மற்றும் சாதகமான உள்நாட்டு நிலவரங்களே இதற்கு முக்கிய காரணங்களாக இருந்தன. வரும் வாரத்தில், பங்குச் சந்தைக்கு அதிக பாதிப்பு அளிக்கும் செய்திகள் எதுவும் இல்லை. எனவே, புதிய நிதியாண்டு தொடக்கம் நாட்டின் பங்கு வர்த்தகத்திற்கு நல்ல துவக்கமாகவே இருக்கும்.- திருமை. பா. ஸ்ரீதரன்-
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|