பதிவு செய்த நாள்
21 ஏப்2012
09:49

சென்னை: மாநிலத்தில் உள்ள 350 கி.மீ., இடை வழித்தட மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் 1,150 கி.மீ., ஒரு வழித்தட மாவட்ட முக்கிய சாலைகள், 740 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அகலப்படுத்தப் படும் என, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். நெடுஞ்சாலைத் துறை மானியக் கோரிக்கை பதிலுரையில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
2012-13ம் ஆண்டில், 350 கி.மீ., இடை வழித்தட மாநில நெடுஞ்சாலைகளும்; 1,150 கி.மீ., ஒரு வழித்தட மாவட்ட முக்கிய சாலைகளும், 740 கோடி ரூபாய் செலவில் அகலப்படுத்தப்படும்.
தரம் உயர்வு : கடலூர், திருச்சி, ராமநாதபுரம், சேலம், வேலூர், திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில், ஒன்பது ரயில்வே மேம்பாலம் மற்றும் கீழ்பாலப் பணிகள், 322 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
கடலூர் - விருத்தாசலம் வழியாக, சேலம் சென்றடையும், 111 கி.மீ., நீளமுள்ள மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்படுகிறது. வரும் நிதியாண்டு முதல், தேசிய நெடுஞ்சாலையாக, இச்சாலை பராமரிக்கப்படும்.
நபார்டு வங்கி நிதி உதவியுடன், 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மாவட்ட முக்கிய சாலைகள் மற்றும் மாவட்ட இதர சாலைகளை மேம்பாடு செய்தல், புதுப்பித்தல் பணிகளும்; 235 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பாலப் பணிகளும் மேற்கொள்ளப்படும்.
நெரிசலை குறைக்க... : கோவையில், கணபதி (டெக்ஸ்டூல்) அருகில், கூடுதல் இருவழி மேம்பாலம் அமைக்கும் பணி, 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
மைலம்-பாண்டி மற்றும் வெள்ளிமேடுபேட்டை- மைலம் சந்திப்பில், 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், பல்லடுக்கு பாலம் கட்ட, திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். சேலம் மாவட்டம் எடப்பாடியில், புதிய நெடுஞ்சாலைக் கோட்டம் மற்றும் உட்கோட்டம் தோற்றுவிக்கப்படும். மணச்சநல்லூர், மன்னார்குடி, திருவள்ளூர், திருத்தணி நகரங்களுக்கு, புறவழிச்சாலைக்கான நில எடுப்புப் பணிகள், நடப்பாண்டில் மேற்கொள்ளப்படும். தாராமங்கலத்தில் புறவழிச் சாலை அமைக்க, ஆரம்பகட்ட பணிக்காக, ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|