பதிவு செய்த நாள்
22 ஏப்2012
00:07

கடந்த 2011-12ம் நிதியாண்டில், நாட்டின் பருத்தி நூலிழை ஏற்றுமதி, 15 சதவீதம் அதிகரித்து 82.76 கோடி கிலோவாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 72 கோடி கிலோவாக குறைந்து காணப்பட்டது என, அன்னிய வர்த்தக தலைமை இயக்குனரகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடி:சர்வதேச பொருளாதார நெருக்கடியிலும், பருத்தி நூலிழை ஏற்றுமதி அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது, உலக நாடுகள், பொருளாதார மந்த நிலையில் இருந்து மீண்டு வருவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. பருத்தி நூலிழை ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், நாட்டின் ஜவுளி ஏற்றுமதி குறைந்துள்ளது. குறிப்பாக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள், ஆயத்த ஆடைகளின் இறக்குமதியை குறைத்துக் கொண்டதுதான் இதற்கு காரணம்.
உலகில் பருத்தி நூலிழை உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது. எனினும் இந்நாடு, தற்போது அதிக மதிப்புள்ள ஆயத்த ஆடைகளின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனால், சென்ற நிதியாண்டில், சீனா இந்தியாவில் இருந்து அதிக அளவில் பருத்தி நூலிழையை இறக்குமதி செய்து கொண்டது. இதுவும், இந்தியாவின் பருத்தி நூலிழை ஏற்றுமதி அதிகரித்துள்ளதற்கு முக்கிய காரணமாகும் என, இந்திய ஜவுளி தொழிலக கூட்டமைப்பின் தலைமை செயலர் டீ.கே.நாயர் தெரிவித்துள்ளார்.நடப்பு 2012-13ம் நிதியாண்டிலும், மாதம் ஒன்றுக்கு 7 கோடி கிலோவிற்கும் மேலாக பருத்தி நூலிழை ஏற்றுமதியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுப்பாடு:கடந்த 2010-11ம் நிதியாண்டில், மத்திய அரசு பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதித்தது. உள்நாட்டு தேவையை சமாளிக்கும் பொருட்டு, அவ்வாண்டில் 72 கோடி கிலோ பருத்தி மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆனால், நிதியாண்டு முடிவடைவதற்கு, மூன்று மாதங்கள் இருக்கும் போதே இந்த இலக்கு எட்டப்பட்டு விட்டது. மேலும், பருத்தி நூலிழை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்கவில்லை. ஆனால், நடப்பு 2012-13ம் நிதியாண்டிற்கு பருத்தி நூலிழை ஏற்றுமதி தொடர்பாக, இதுவரை, மத்திய அரசு எந்தவித கட்டுப்பாடும் விதிக்கவில்லை.
சென்ற நிதியாண்டில், கூடுதலாக பருத்தி நூலிழை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்காததால், 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிற்கு நிகர இழப்பு ஏற்பட்டுள்ளது. உள்நாட்டிலும் பருத்தி நூலிழைக்கான தேவை உயர்ந்து, அதன் விலை கணிசமாக உயர்ந்திருக்கும். ஏற்றுமதி வாயிலான வருவாயும் அதிகரித்திருக்கும். பல பருத்தி நூலிழை ஆலைகள் மூடப்படாமல் இயங்கியிருக்கும். மத்திய அரசு, நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்காததால், பல நூற்பாலைகள் மூடப்பட்டதாக நாயர் மேலும் தெரிவித்தார்.
ஆயத்த ஆடைகள்:தற்போது, சீனா,வங்கதேசம்,ஹாங்காங், கொரியா, துருக்கி, பெரு மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி நூலிழை ஏற்றுமதி மேற்கொள்ளப்படுகிறது. ஆயத்த ஆடைகளை உற்பத்தி செய்யும் பாரம்பரிய நாடுகள் மட்டுமே பருத்தி நூலிழையை இறக்குமதி செய்து கொள்கின்றன. அதனால் பருத்தி நூலிழை ஏற்றுமதிக்கு புதிய சந்தை வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.
எனினும், பருத்தி நூலிழை உற்பத்தியில் முன்னணியில் உள்ள சீனா மற்றும் சில நாடுகள் மதிப்பு கூட்டப்பட்ட ஆயத்த ஆடைகளின் உற்பத்தியில் தீவிரம் காட்டி வருவதால், இந்திய பருத்தி நூலிழை ஏற்றுமதி, வரும் ஆண்டுகளில் மேலும் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.வரும் அக்டோபரில், பருத்தி பருவம் துவங்குகிறது. அதற்கு முன்பாக, மத்திய அரசு, பருத்தி மற்றும் பருத்தி நூலிழை தொடர்பான புதிய கொள்கையை அறிவிக்கும் என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும் ஜவுளி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|