பதிவு செய்த நாள்
22 ஏப்2012
04:46

நாட்டின் பங்கு வர்த்தகம், 'சென்னை சூப்பர் கிங்ஸ்' கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு போல், ஒரு வாரம் உயர்வதும், மறுவாரம் சரிவதும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.நடப்பு வாரத்தில், வெள்ளிக்கிழமை தவிர்த்த, ஏனைய நான்கு தினங்களில் வர்த்தகம் நன்கு இருந்தது. ஆனால், வெள்ளிக்கிழமையன்று சர்வதேச நிலவரங்களாலும், லாப நோக்கம் கருதி, அதிக எண்ணிக்கையில் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாலும், பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தது.
அன்றைய தினம், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 130 புள்ளிகள் சரிவடைந்து, 17,374 புள்ளிகளில் நிலைபெற்றது. ஆக, நடப்பு வாரத்தில் மட்டும் 'சென்செக்ஸ்' 223 புள்ளிகள் அதிகரித்துள்ளது.
வட்டி விகித குறைப்பு:நடப்பு வாரம் செவ்வாயன்று, ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான 'ரெப்போ ரேட்' விகிதத்தை 0.50 சதவீதம் குறைத்து, 8 சதவீதமாக ஆக்கியது. இது, சந்தை மதிப்பீட்டை விட, 0.25 சதவீதம் அதிகமாகும். அதேசமயம், வங்கிகள் திரட்டும் டெபாசிட்டில், குறிப்பிட்ட தொகையை ரிசர்வ் வங்கியில் வைக்க வேண்டிய ரொக்க இருப்பு விகிதத்தை (சி.ஆர்.ஆர்.) குறைக்கவில்லை. இது, 4.75 சதவீதம் என்றளவிலே தொடரும் என அறிவிக்கப்பட்டது.
வங்கிகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டதையடுத்து, அன்றைய தினம், வங்கி, மோட்டார் வாகனம், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை மளமளவென அதிகரித்தது.ரிசர்வ் வங்கியின், இந்த வட்டி குறைப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ஒரு சில வங்கிகள், வழங்கும் கடன் மற்றும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. மேலும், பல வங்கிகள் இம்மாத இறுதிக்குள் வட்டி விகிதத்தைக் குறைப்பதாக அறிவித்துள்ளன.
வீட்டு வசதி மற்றும் மோட்டார் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்ற நிலைப்பாட்டால், இத்துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை அதிகரித்தது. நாட்டின் பணவீக்கம் மிகவும் அதிகரித்ததையடுத்து, வங்கிகள் வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் பன்மடங்கு அதிகரித்தது. இதனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக, நிறுவனங்கள் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியை திரட்டிக் கொள்ள முடியாமல் போனது. இது, தொழில்துறை உற்பத்தி வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தியதுடன், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியிலும் தேக்க நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே, உள்நாட்டில் உள்ள பல தொழில் அமைப்புகள், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நிதிப்பற்றாக்குறை: பங்குச் சந்தையில் ஏற்பட்ட சுணக்க நிலையால், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப் படும் சொத்து மதிப்பும் வெகுவாகக் குறைந்து போனது. மத்திய அரசின், நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததாலும், அரசின் செலவினம், மற்றும் மானியச் செலவு அதிகரித்ததாலும் நாட்டின் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. இது போன்ற ஒரு சில பாதகமான அம்சங்கள் உள்ள நிலையிலும், நாட்டின் வேளாண் உற்பத்தி மற்றும் சேவைகள் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்துள்ளது.
வர்த்தக பற்றாக்குறை: கடந்த நிதியாண்டில், நாட்டின் ஏற்றுமதி 21 சதவீதம் வளர்ச்சி கண்டு, 15 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆனால், நாட்டின் இறக்குமதி, இதை விட அதிகமாக 32.1 சதவீதம் அதிகரித்து, 24 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஆக, ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகரித்ததையடுத்து, வர்த்தகப் பற்றாக்குறை 9 லட்சத்து 24 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவும், மத்திய அரசுக்கு இடர்பாடு அளிக்கும் அம்சமாக உள்ளது.
கடந்த 2011-12ம் நிதியாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை பல நிறுவனங்களும், வங்கிகளும் அறிவிக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை, வெளிவந்துள்ள பல நிறுவனங்களின் வருவாய் உயர்ந்துள்ளது என்றாலும், சில நிறுவனங்களின் லாப வளர்ச்சி பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதற்கு, மூலப் பொருட்களின் விலை உயர்வு, பணியாளர்கள் சம்பளம், வட்டி செலவினம் அதிகரிப்பு போன்றவை முக்கிய காரணங்களாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் சென்ற வெள்ளியன்று, பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு, பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில், முதலிடத்தில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், கடந்த நிதியாண்டு மற்றும் நான்காவது காலாண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டது. இதில், இந்நிறுவனத்தின் வருவாய், முந்தைய நிதியாண்டை விட 31.4 சதவீதம் வளர்ச்சி கண்டு, 3 லட்சத்து 39 ஆயிரத்து 792 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என்றாலும், இதன் நிகர லாபம், 1.2 சதவீதம் குறைந்து 20 ஆயிரத்து 40 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. சர்வதேச பொருளாதார சுணக்க நிலையால், இந்நிறுவனத்தின் சுத்திகரிப்பு லாப வரம்பு குறைந்துள்ளது. இதனால், நிகர லாபம் சற்று குறைந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது, பங்குச் சந்தையில் எந்தளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது, வரும் திங்களன்று தெரியவரும். வெள்ளியன்று இந்நிறுவனப் பங்கின் விலை, 1.39 சதவீதம் சரிவடைந்து, 731.45 ரூபாயில் நிலைபெற்றது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நிலை நிறுத்திட, அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு, அதிக முக்கியத்துவம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அடிப்படைக் கட்டமைப்பு நடவடிக்கைகளில் விறுவிறுப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, சிமென்ட், உருக்கு பொருட்களின் விற்பனை சூடுபிடிக்கும். இதனால், இத்துறை நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி உயரும்.
புதிய பங்கு வெளியீடு:நாட்டின் பங்கு வர்த்தகம் அதிக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருவதால், 'செபி' அமைப்பிடம் அனுமதி பெற்றுள்ள பல நிறுவனங்கள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தி வருகின்றன. இந்நிலையில், தங்கம், வைர ஆபரண வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் திரிபோவன்தாஸ் பீம்ஜி ஜவேரி நிறுவனம், வரும் செவ்வாயன்று பொதுமக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் களமிறங்குகிறது.
இந்நிறுவனம், பங்கு ஒன்றை 120-126 ரூபாய் என்றளவில் வெளியிடுகிறது. 26ம் தேதியுடன் நிறைவடைய உள்ள இப்பங்கு வெளியீட்டின் மூலம், இந்நிறுவனம், 210 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கு, முதலீட்டாளர்களிடமிருந்து எந்தளவிற்கு ஆதரவு கிடைக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வரும் வாரம் எப்படி?:உள்நாட்டு நிலவரங்கள் பங்குச் சந்தைக்கு சாதகமாகவே உள்ளன. ஆனால், தற்போது, உள்நாடு மட்டுமின்றி, அயல்நாடுகளிலும், பங்கு வர்த்தகம் என்பது சர்வதேச நடப்புகளை ஒட்டியே உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் நிறுவனங்களின் செயல்பாடு, துறைகளுக்குள்ள எதிர்காலம் உள்ளிட்ட பல காரணிகளை நன்கு ஆராய்ந்து, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தால் பாதிப்பு ஏற்படாது.
- திருமை. பா. ஸ்ரீதரன் -
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|