பதிவு செய்த நாள்
20 மே2012
00:25

மும்பை:சென்ற 2011-12ம் நிதியாண்டில், வங்கிகளின் வசூலாகாத கடன் 53.5 சதவீதம் உயர்ந்து 60 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய நிதியாண்டில் 39 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக குறைந்து காணப்பட்டது.பணப்புழக்கம் :பணவீக்கம் அதிகரிப்பு, வட்டி உயர்வு, பணப்புழக்கம் குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் நாட்டின் தொழில் வளர்ச்சி மந்தமடைந்துள்ளது. இதனால், பல நிறுவனங்கள், குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துவது குறைந்துள்ளது. இதன் தாக்கத்தால், வங்கிகளின் வசூலாகாத கடன், சென்ற நிதியாண்டில் அதிகரித்துள்ளதாக ஆய்வு நிறுவனமொன்று தெரிவித்துள்ளது.
இதுவரை, நாட்டில் முன்னணியில் உள்ள 28 வங்கிகள், சென்ற நிதியாண்டின், நான்காவது காலாண்டு முடிவுகளை அறிவித்துள்ளன. இதில், இவ்வங்கிகளின் வசூலாகாத கடன், சென்ற மார்ச்சுடன் முடிவடைந்த நான்காம் காலாண்டில், சராசரியாக 3.5 சதவீதம் அதிகரித்துள்ளது.குறிப்பாக, மின் உற்பத்தி குறைவால் பாதிக்கப்பட்ட மின் வாரியங்கள் மற்றும் கடன் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஏர்-இந்தியா நிறுவனம் ஆகியவை, வங்கிகளிடம் பெற்ற கடனை திரும்பச் செலுத்துவது குறைந்துள்ளது.
அடிப்படை கட்டமைப்பு :இது தவிர, உலோகம், ஜவுளி மற்றும் அடிப்படை கட்டமைப்பு துறைகளை சேர்ந்த பல நிறுவனங்களும், கடனை திரும்ப செலுத்துவது குறைந்துள்ளது. இத்தகைய காரணங்களால், வங்கிகளின் வசூலாகாத கடன், மதிப்பீட்டு காலத்தில் குறைந்துள்ளது.
இது குறித்து பிரைஸ் வாட்டர் கூப்பர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
இந்திய வங்கிகள், விமானத்துறை, தொலைதொடர்பு மற்றும் மின்உற்பத்தி துறைகளை சேர்ந்த பல நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் வழங்கியுள்ளன. தொழில் வளர்ச்சி குன்றியதை தொடர்ந்து, இத்துறைகளைச் சேர்ந்த பல நிறுவனங்கள், வங்கிகளிடம் பெற்ற கடனை, குறித்த காலத்தில் திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் பாதிக்கப்பட்ட வங்கிகள், மேற்கண்ட துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதில் தீவிரம் காட்டாமல் உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகளின் வசூலாகாத கடன் அதிகரித்ததாலும், பங்குச் சந்தை சரிவை கண்டதாலும், பீ.எஸ்.இ. வங்கித் துறை குறியீட்டு எண், சென்ற முழு நிதியாண்டில் 11.2 சதவீதமும், நான்காம் காலாண்டில் 11.4 சதவீதமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
முன்னணி வங்கிகளில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் பங்கின் விலை, ஓராண்டில் 16.6 சதவீதம் சரிவடைந்து, தற்போது 1,942 ரூபாயாக குறைந்துள்ளது. இதே காலத்தில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி பங்கின் விலை 22 சதவீதம் குறைந்து 805 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. ஆனால், எச்.டீ.எப்.சி. வங்கி பங்கின் விலை 10.2 சதவீதம் ஏற்றம் கண்டு 500 ரூபாய் என்ற அளவில் விலைபோய் கொண்டுள்ளது.
வசூலாகாத கடன்:சென்ற மார்ச் நிலவரப்படி, பொதுத்துறை வங்கிகளின் மொத்த நிகர வசூலாகாத கடன், 2.25 சதவீதத்தில் இருந்து 3.02 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதே காலத்தில், இவ்வங்கிகளின் நிகர வசூலாகாத கடன் 1.1 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.அது போன்று, நிகர வசூலாகாத கடன் வளர்ச்சி விகிதத்திற்கேற்ப, அதற்கான ஒதுக்கீட்டு விகிதத்தை வங்கிகளால் உயர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுத்துறையை சேர்ந்த 22 வங்கிகளில், 14 வங்கிகள், ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச 70 சதவீதத்திற்கும் குறைவாகவே, வசூலாகாத கடனுக்கு தொகையை ஒதுக்கியுள்ளன. பொதுத்துறை வங்கிகளின் நிலை இப்படியிருக்க, தனியார் வங்கிகள், கடந்த இரண்டாண்டு காலமாக அவற்றின் வசூலாகாத கடன்களை குறைத்துக் கொண்டு, சொத்து மதிப்பை அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் லேக்மேன் பிரதர்ஸ் வங்கியின் வீழ்ச்சிக்குப் பிறகு, தனியார் வங்கிகள், பாதுகாப்பில்லாத தனிநபர் கடன்கள் மற்றும் இடர்பாடான துறைகளுக்கு கடன் வழங்குவதை குறைத்துக் கொண்டன. இதனால், இவ்வங்கிகளின் வசூலாகாத கடன் குறைந்துள்ளது.
தொழில்நுட்பம்:இதனிடையே, பொதுத்துறை வங்கிகளின் வசூலாகாத கடன், ஏட்டளவில் குறையும் என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஒருங்கிணைந்த வங்கிச் சேவையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஏராளமான கடன் கணக்குகள், வசூலாகாத கடன் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளன. இக்குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும், அதன் பின்னர், வங்கிகளின் வசூலாகாத கடன் அளவு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|