பதிவு செய்த நாள்
22 மே2012
00:24

புதுடில்லி:வரும் 2012-13ம் வேளாண் பருவத்தில் (ஜூலை-ஜூன்), மத்திய அரசு, 25 கோடி டன் உணவு தானியங்களை, உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. வரும் பருவத்தில், நாடு தழுவிய அளவில், பருவ மழை நன்கு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அண்மையில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தென்மேற்கு பருவ மழை, முன்கூட்டியே தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வேளாண் அமைச்சகம் எனவே, நாடு தழுவிய அளவில், நடப்பு வேளாண் பருவத்தை போன்றே, வரும் ஆண்டிலும், நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் அடிப்படையில் தான், வரும் பருவத்தில், 25 கோடி டன் தானிய உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, மத்திய வேளாண் அமைச் சகத்தின் செயலர் பி.கே.பாசு தெரிவித்துள்ளார்.நடப்பு வேளாண் பருவத்தில், 24.50 கோடி டன், தானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில், சாதகமான பருவ நிலையால், நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக, 70 லட்சம் டன் உற்பத்தியாகி, 25.20 கோடி டன்னாக உயந்துள்ளது.
நடப்பு பருவத்தில், 10.40 கோடி டன், நெல் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதன் உற்பத்தி, 10.34 கோடி டன்னாக உள்ளது. அதேசமயம், நடப்பு பருவத்தில், 9.02 கோடி டன் கோதுமை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.ஆனால், இதன் உற்பத்தி, 8.60 கோடி டன்னாக சற்று குறைந்துள்ளது. இருப்பினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோதுமை உற்பத்தி, மிகவும் அதிகரித்ததால், இதை சேமித்து வைப்பதற்கு, போதிய கிடங்கு வசதி இல்லாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
எண்ணெய் வித்துக்கள்:வரும் வேளாண் பருவத்தில், 1.80 கோடி டன் பருப்பு வகைகள், உற்பத்தி செய்யவும், 3.30 கோடி டன் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி செய்யவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதேசமயம், வேளாண் அமைச்சகத்தின் மதிப்பீட்டின் படி, 2 கோடி டன் அளவிற்கு, பருப்பு வகைகள் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில், பருப்பு வகைகளுக்கான தேவை, 2.10 கோடி டன் என்றளவில் உள்ளது. தேவையை விட, உற்பத்தி குறைவாக உள்ளதால், பல நாடுகளிலிருந்து, 30 லட்சம் டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்படுகிறது.
இறக்குமதி:இதன் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு, உள்நாட்டில், இதன் உற்பத்தியை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக, மத்திய அரசின் உயரதிகாரி தெரிவித்தார்.நடப்பு 2011-12ம் வேளாண் பருவத்தில், 1.70 கோடி டன் பருப்பு வகைகள் உற்பத்தியாகும் என, மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதன் உற்பத்தி, 1.82 கோடி டன்னாக சற்று அதிகரித்துள்ளது. அதேசமயம், சென்ற வேளாண் பருவத்தில், 3.36 கோடி டன் எண்ணெய் வித்துகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதன் உற்பத்தி,
3 கோடி டன் அளவிற்கே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கோடை சாகுபடி:நடப்பு வேளாண் பருவத்தில், பருப்பு வகைகள் உற்பத்தி, இலக்கை விட, மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனெனில், பல மாநிலங்களில், கோடை சாகுபடியில் பருப்பு வகைகள், அறுவடைக்கு தயாராக உள்ளன.
குறிப்பாக, பாசி பயறு, அறுவடையாகி சந்தைக்கு வரும் நிலையில், ஒட்டுமொத்த பருப்பு வகைகள் உற்பத்தி, மேலும் உயர வாய்ப்புள்ளது என, வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.பருவமழை நன்கு இருக்கும் நிலையில், நடப்பு பருவத்தை விட, வரும் வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, சிறப்பான அளவில் அதிகரிக்க வாய்ப்புள்ளது என, வேளான் அமைச்சகத்தின் மூத்த அதிகாரி மேலும் கூறினார்.
கோதுமை ஏற்றுமதி செய்ய பரிந்துரை:கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோதுமை உற்பத்தி, மிகவும் அதிகரித்துள்ளது. எனவே, இதை சேமித்து வைப்பதற்கு, போதிய இட வசதி இல்லாமல் உள்ளது. இந்நிலையில், பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் சி.ரங்கராஜன் தலைமையில், அமைக்கப்பட்ட குழு, 20 லட்சம் டன் கோதுமையை ஏற்றுமதி செய்யலாம் என மத்திய அரசுக்கு, பரிந்துரை செய்துள்ளது.இதுதவிர, கூடுதலாக, 1.30 கோடி டன் கோதுமையை பொது விநியோக திட்டம் மற்றும் பொது சந்தையில் விற்கவும் ஆலோசனை வழங்கியுள்ளது. இக்குழுவின் பரிந்துரை குறித்து, கூடிய விரைவில் முடிவு எடுக்கப்படும் என, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|