பதிவு செய்த நாள்
23 ஜூலை2012
23:19

புதுடில்லி: இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் (எப்.ஐ.ஐ.), நடப்பு 2012ம் ஆண்டு ஜனவரி முதல் ஜூலை 20ம் தேதி வரையிலுமாக, மேற்கொண்ட முதலீடு, 1,017 கோடி டாலராக (55,935 கோடி ரூபாய்) உயர்ந்துள்ளது என, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான "செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பங்குகள்நாட்டின் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில்பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளிலும், அரசு மற்றும் தனியார் கடன் பத்திரங்களிலும், அன்னிய நிதி நிறுவனங்கள் முதலீடு செய்து வருகின்றன.நாட்டின் பங்கு வர்த்தகம், கடந்த ஒரு சில வாரங்களாக, அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையிலும், இந்திய பங்குச் சந்தைகளில், அன்னிய நிதி நிறுவனங்கள் மேற்கொள்ளும் முதலீடு அதிகரித்துள்ளது. இது, இந்திய பங்குச் சந்தைகளில், இந்நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக உள்ளது.நடப்பு ஜூலை மாதம், 20ம் தேதி வரை, அன்னிய நிதி நிறுவனங்கள், 167 கோடி டாலரை முதலீடு செய்துள்ளன. இருப்பினும், சர்வதேச பொருளாதார மந்த நிலை மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பில் ஏற்பட்ட சரிவு நிலை போன்றவற்றால் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக, 1,957 கோடி ரூபாயை விலக்கி கொண்டுள்ளன.நடப்பு ஜூலை 20ம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், மும்பை பங்கு சந்தையின் குறியீட்டு எண், 120.41 புள்ளிகள் குறைந்து, 17,158.14 புள்ளிகளில் நிலைபெற்றது.சென்ற மாத இறுதியில்,மத்திய நிதி அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த பிரணாப் முகர்ஜியின் ராஜினாமாவை அடுத்து, பிரதமர் மன்மோகன் சிங், நிதித் துறையையும் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார். இதையடுத்து, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற கருத்தால், பங்கு வர்த்தகம் சூடுபிடித்தது.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், ஆகஸ்ட் 8ம் தேதி துவங்க உள்ளது. அதற்கு முன்பாக, பல்வேறு பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டங்கள், விரைந்து அமல்படுத்தப்படும் நிலையில், பல்வேறு துறைகளில் வளர்ச்சி ஏற்படும் என்பதுடன், பங்கு வர்த்தகமும் சூடுபிடிக்கும்.நடப்பு ஜூலை மாதம் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரையிலான வர்த்தக தினங்களில், அன்னிய நிதி நிறுவனங்கள், 34,611 கோடி ரூபாய் மதிப்பிற்கு, பங்குகளில் முதலீடு செய்துள்ளன. அதேசமயம், 25,357 கோடி ரூபாய் மதிப்பிற்கான பங்குகளை விற்பனை செய்துள்ளன. இக்காலகட்டத்தில், இந்நிறுவனங்களின் நிகர பங்கு முதலீடு, 9,254 கோடி ரூபாயாக உள்ளது.கடன் பத்திரங்கள்அன்னிய நிதி நிறுவனங்கள், நடப்பு ஜூலை மாதத்தில் இதுவரையிலுமாக, கடன் பத்திரங்களில், 1,514 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன. கடந்த 2011ம் ஆண்டில், இந்நிறுவனங்களின் நிகர கடன் பத்திர முதலீடு, 20,293 கோடி ரூபாயாக இருந்தது.இவ்வாண்டில், இந்நிறுவனங்கள், பங்குச் சந்தைகளிலிருந்து, 2,812 கோடி ரூபாயை விலக்கி கொண்டன.பதிவு பெற்ற நிறுவனங்கள்கடந்த 2011ம் ஆண்டில், சர்வதேச மற்றும் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் நன்கு இல்லாததால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், முதலீடு செய்வதை வெகுவாகக் குறைத்துக் கொண்டன.ஜூலை 20ம் தேதி வரையிலுமாக "செபி' அமைப்பிடம் பதிவு செய்து கொண்டுள்ள அன்னிய நிதி நிறுவனங்களின் எண்ணிக்கை, 1,752 ஆகவும், துணை கணக்குகளின் எண்ணிக்கை, 6,350 ஆகவும் இருந்தது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|