பதிவு செய்த நாள்
20 செப்2012
00:58

பொதுவாக, பெரிய நிறுவனங்களின் போட்டியை தாக்குப்பிடிக்க முடியாமல், சிறிய நிறுவனங்கள் அழிவது வாடிக்கை. ஆனால், தமிழகத்தை பொறுத்தவரை, தீப்பெட்டிகளை தயாரிக்கும் குறு நிறுவனங்களை சமாளிக்க முடியாமல், பெரிய நிறுவனங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன என்பது தான் அதிர்ச்சிகரமான உண்மை.
கோவில்பட்டி:இந்திய தீப்பெட்டித் துறையின் சந்தை மதிப்பு 1,600 கோடி ரூபாயாக உள்ளது. உலகிலேயே மிக அதிகமாக தீப்பெட்டிகளை ஏற்றுமதி செய்யும் பெருமை கொண்டதாக தமிழகம் விளங்குகிறது. இங்கிருந்து, சென்ற ஆண்டு, 300 கோடி ரூபாய் மதிப்பிலான தீப்பெட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
கோவில்பட்டி, விருதுநகர், எட்டயபுரம், சாத்தூர் உள்ளிட்ட இடங்களில், மிகப் பெரிய அளவில் தீப்பெட்டி தயாரிப்பு தொழில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், அமைப்பு சார்ந்த தீப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களின்பங்களிப்பு 70 சதவீதமாகவும், அமைப்பு சாராமல், வீடுகளில் குடிசைத் தொழில் போல், தீப்பெட்டி தயாரிப்போரின் பங்களிப்பு 30 சதவீதமாகவும் இருந்தது.
ஆனால், தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் பங்களிப்பு 30 சதவீதமாக குறைந்தும், அமைப்பு சாராத குடிசை தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 70 சதவீதமாக உயர்ந்தும் காணப்படுகிறது.இந்த தலைகீழ் மாற்றத்திற்கு, அரசின் உற்பத்தி வரி விதிப்பு தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. முழுவதும் இயந்திர மயமாக்கப்பட்ட தொழிற்சாலை களில் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு, 12 சதவீத உற்பத்தி வரி விதிக்கப்படுகிறது.
பகுதி இயந்திரம் மூலம் தயாரிக்கப்படும் தீப்பெட்டிக்கான உற்பத்தி வரி, நடப்பு 2012-13ம் நிதியாண்டு பட்ஜெட்டில், 10 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், கையால் தயாரிக்கப்படும் தீப்பெட்டிகளுக்கு உற்பத்தி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதை அமைப்பு சாரா பிரிவை சேர்ந்த பலர் தவறாக பயன்படுத்தி, அரசுக்கு வரி செலுத்தாமல், குறைந்த விலையில் தீப்பெட்டிகளை விற்பனை செய்கின்றனர். இதனால், இந்த அமைப்பினருடன், பெரிய நிறுவனங்களால் போட்டி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளர் கூட்டமைப்பின் செயலர் ஜே.தேவதாஸ் கூறும்போது, ""அமைப்பு சாரா பிரிவினர், சட்டத்திற்கு புறம்பாக இயந்திரங்களை வாங்கி, வீடுகளில் நிறுவி தீப்பெட்டிகளை தயாரித்து வருகின்றனர்'' என்று தெரிவித்தார்.
10 -15 பேருடன் இயங்கும் இத்தகைய குடிசைத் தொழில்களின் போக்கு காரணமாக, அமைப்பு சார்ந்த நிறுவனங்கள் அழிந்து வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், தென்னிந்தியாவில் 10 ஆயிரம் தீப்பெட்டித் தொழிற்சாலைகள் இருந்தன. இவற்றில், கிட்டத்தட்ட 7.50 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். தற்போது தீப்பெட்டி தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஆயிரம் ஆகவும், தொழிலாளர் எண்ணிக்கை 50 ஆயிரமாகவும் கிடுகிடு வென... சரிவடைந்துள்ளது.
தீ விபத்து:தீப்பெட்டி தயாரிப்பு துறை, ஆண்டுக்கு 10 -15 சதவீத வளர்ச்சி கண்டு வரும் நிலையிலும், கடந்த 1995ம் ஆண்டு 15 கோடி பண்டல் என்ற அளவில் இருந்த, அமைப்பு சார்ந்த நிறுவனங்களின் தீப்பெட்டி உற்பத்தி, தற்போது 7.5 கோடி பண்டலாக குறைந்துள்ளது.தற்போது, 80 சதவீத தொழிற்சாலைகள், பகுதி இயந்திரங்களுடனும், 20 சதவீத தொழிற்சாலைகளில், முற்றிலும் இயந்திரங்கள் மூலமும் தீப்பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. அமைப்பு சாரா துறையினரால், அரசுக்கு வரி இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி, அனுமதியின்றி இயங்கும் தொழிற்சாலைகளால் தீ விபத்துகளும், உயிர்இழப்புகளும் ஏற்படுகின்றன.
வரி சலுகை:"ஒரு காலத்தில், தீப்பெட்டி தயாரிப்பு தொழில், 100 சதவீதம் அமைப்பு சார்ந்ததாக இருந்தது. தற்போது 80 சதவீதம், அமைப்பு சாராத தொழிலாக மாறி விட்டது. இது, ஆரோக்கியமான போக்கு அல்ல' என்று தேவதாஸ் மேலும் கூறினார்.
அமைப்பு ரீதியாக செயல்படும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், வரிச் சலுகைகளை வழங்கினால், தீப்பெட்டி ஏற்றுமதி, 300 கோடியில் இருந்து 1,000 கோடி ரூபாயாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தீக்குச்சிக்கு பற்றாக்குறை:தீக்குச்சி தயாரிக்க பயன்படும் மரங்கள் வெகுவாக குறைந்து விட்டன. இதே நிலை நீடித்தால், அடுத்த 3-4 ஆண்டுகளில் தீக்குச்சிக்கு தட்டுப்பாடு ஏற்படும். இத்தகைய மரம் வளர்ப்புக்கு, தமிழகத்திற்கு 600 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் முன் வந்தது. இதன்படி மரம் வளர்த்தால் ஏழரை ஆண்டுகளில் 1,000 தொழிற்சாலைகளையும், 50 ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் உருவாக்கலாம்.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|