பதிவு செய்த நாள்
08 அக்2012
00:19

சேலம்:மண்டிகளில் வியாபாரிகள் இருப்பு வைத்த, பல லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் சமீபத்தில் பெய்த மழையால், துளிர் விட்டதால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், நங்கவள்ளி, ஜலகண்டபுரம், தாரமங்கலம், வனவாசி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட தேங்காய் மண்டிகள் உள்ளன.
மகாராஷ்டிரா:வியாபாரிகள் சுற்றுப்பகுதி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் தேங்காய்களை, மண்டியில் நார் உரித்து மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர். சீசன் காலங்களில் மட்டும் ஜலகண்டபுரம் சுற்றுப்பகுதியில் இருந்து தினமும், 10 லட்சம் தேங்காய்களுக்கு மேல் வெளிமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். நடப்பாண்டு தேங்காய் உற்பத்தி அதிகரித்த நிலையில், ஜூலை மாதம், ஆறு ரூபாய்க்கு வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்த தேங்காய், செப்டம்பர் மாதம், நான்கு ரூபாய் 50 காசாக வீழ்ச்சியடைந்தது.விலை, 25 சதவீதம் வீழ்ச்சியடைந்ததால் விரக்தியடைந்த வியாபாரிகள் வெளிமாநிலங்களுக்கு தேங்காய்களை அனுப்பாமல், தங்கள் மண்டியிலேயே இருப்பு வைத்தனர்.
ஜலகண்டபுரம் சுற்றுப்பகுதியில் மட்டும், 50 லட்சம் தேங்காய்கள் இருப்பு வைக்கப்பட்டன. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தேங்காய் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், தேங்காய் விலை அதிகரிக்காதது வியாபாரிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தேங்காய்களை, 90 நாட்களுக்கு மேல் இருப்பு வைத்தால் அழுகி விடும். ஏற்கனவே இரு மாதம் இருப்பு வைத்த நிலையில், சில நாட்களுக்கு முன் பெய்த மழையால், பெரும்பாலான தேங்காய் துளிர்த்து விட்டது. இதனால், வியாபாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.விரக்தி;இது குறித்து, ஜலகண்டபுரம் மண்டி உரிமையாளர் குட்டியப்பன் கூறியதாவது:மண்டியில், ஒரு லட்சம் தேங்காய் இருப்பு வைத்ததில், மழையால்,
65 ஆயிரம் தேங்காய்கள் துளிர்த்து விட்டன. இந்த தேங்காய்களை விற்பனைக்கு அனுப்ப முடியாது. மீதமுள்ள, 35 ஆயிரம் தேங்காய்களை கட்டாயம் விற்பனைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. துளிர் விட்ட தேங்காய்களை வெட்டி உலர வைத்து எண்ணெ# நிறுவனத்துக்குத்தான் அனுப்ப முடியும். துளிர் விட்ட தேங்காய்களால், பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஜலகண்டபுரம் சுற்று வட்டார பகுதி மண்டிகளில் இருப்பு வைத்த, 25 லட்சத்துக்கும் மேற்பட்ட தேங்காய்கள் துளிர் விட்டதால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் கடும் விரக்தியில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|