பதிவு செய்த நாள்
11 அக்2012
01:28

புதுடில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டிய தொகை, 772 கோடி ரூபாயாக, மிகவும் சரிவடைந்துள்ளது.இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், திரட்டப்பட்ட தொகையை விட, 92 சதவீதம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்வம் இல்லை:நாட்டின், பங்கு வர்த்தகம், நடப்பு நிதியாண்டின் பல மாதங்களில், அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது. இதனால், பல நிறுவனங்கள், பொது மக்களுக்கு, பங்குகளை வெளியிட்டு, மூலதனச் சந்தையில் களம் இறங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால், நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 19 ஆக மிகவும் சரிவடைந்திருந்தது என, தெரியவந்துள்ளது.
ஆக, மதிப்பீட்டு காலத்தில், பங்கு வெளியீட்டின் மூலம் நிறுவனங்கள் திரட்டிக் கொண்ட, சராசரி தொகை, 37 கோடி ரூபாய் என்ற அளவில் மிகவும் குறைவாக இருந்தது.கடந்த, 2011-12ம் நிதியாண்டின், இதே ஆறு மாத காலத்தில், இந்திய நிறுவனங்கள், பங்கு வெளியீட்டின் மூலம் திரட்டிய தொகை, 9,553 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், பங்கு வெளியீட்டை மேற்கொண்ட நிறுவனங்களின் எண்ணிக்கை, 30 ஆக இருந்தது என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில் மேற்கொள்ளப்பட்ட, 19 பங்கு வெளியீடுகளில், 13 நிறுவனங்கள், புதிய பங்கு வெளியீட்டு வாயிலாகவும், மீதமுள்ள ஆறு நிறுவனங்கள் பங்குச் சந்தை மூலம் பங்குகளை விற்பனை செய்தும், நிதி திரட்டிக் கொண்டன.கடந்த, 2011-12ம் நிதியாண்டின், இதே காலத்தில் மேற்கொள்ளப்பட்ட, 30 பங்கு வெளியீடுகளில், 29 புதிய பங்கு வெளியீடுகளும், ஒரு நிறுவனத்தின் இரண்டாவது பங்கு வெளியீடும் அடங்கும்.
மத்திய அரசு:இதுகுறித்து, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரித்வி ஹால்டியா கூறியதாவது:நடப்பு நிதியாண்டின், முதல் ஆறு மாத காலத்தில், பங்கு வெளியீட்டின் எண்ணிக்கையும், திரட்டப்பட்ட தொகையும் வெகுவாக குறைந்துள்ளது.
30 ஆயிரம் கோடி ரூபாய் குறிப்பாக, மத்திய அரசு, நடப்பு நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களில் கொண்டுள்ள மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.ஆனால், நடப்பு நிதியாண்டில், முதல் ஆறு மாத காலத்தில், ஒரு பொதுத் துறை நிறுவனத்தின் பங்கு வெளியீடு கூட மேற்கொள்ளப்படவில்லை.
இதுவும், ஒட்டுமொத்த பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்பட்ட தொகை மற்றும் எண்ணிக்கை குறைவிற்கு முக்கிய காரணமாகும். இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அரசும், பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான,"செபி'யும், பங்கு மற்றும் மூலதனச் சந்தைகளை மேம்படுத்தும் வகையில், பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனால், இனி வரும் மாதங்களில், பங்கு வர்த்தகத்தில் விறுவிறுப்பு ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து, புதிய பங்கு வெளியீடுகள் மூலம் நிதி திரட்டுவதும் அதிகரிக்கும் என, பங்குச் சந்தை ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
ஆர்.ஐ.என்.எல்., நிறுவனம்:அடுத்த ஒரு மாதத்திற்குள், ஒரு சில நிறுவனங்கள் பொது மக்களுக்கு, பங்குகளை வெளியீட்டு மூலதனச் சந்தையில் களமிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வகையில், பார்தி இன்ப்ராடெல் நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம், 5,000 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. அதேபோன்று, பொதுத் துறையை சேர்ந்த ராஷ்டிரிய இஸ்பத் நிகம் (ஆர்.ஐ.என்.எல்.,) நிறுவனம், பங்கு வெளியீட்டின் மூலம்,
2,500 கோடி ரூபாய் திரட்டி கொள்ளும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
அனுமதி:பொது மக்களுக்கு, பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் இருந்து, நிதி திரட்டி கொள்ளும் வகையில், 35 நிறுவனங்கள் ஏற்கனவே,"செபி' அமைப்பிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளன. இவை தவிர, 24 நிறுவனங்கள் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி வேண்டி விண்ணப்பித்துள்ளன என, பிரைம் டேட்டாபேஸ் நிறுவனத்தின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண்,"சென்செக்ஸ்', ஒட்டுமொத்த அளவில், 1,300 புள்ளிகள் அல்லது ஏழு சதவீதம் அதிகரித்துள்ளது.மத்திய அரசின், அண்மை கால சீர்திருத்த நடவடிக்கைகளால், அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்குச் சந்தைகளில், 40 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு மேற்கொண்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|